180
தமிழ் மக்களின் வாக்குகள்தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை தீர்மானிக்கும் இவ்வாறான நிலைமைகள் உருவாவது கடினம். அவ்வாறு உருவான ஒரு நிலைமையை நாம் சமயோசிதமாக பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
போரின் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், போரை முன்னின்று நடத்திய இராணுவ தளபதிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
அடுத்த தேர்தலில் மைத்திரி பால சிறிசேனாவிற்கு வாக்களித் தனர். அவர் வெற்றி பெற்றார். அவரால் நடந்தது என்ன என இப்ப சிலர் கேட்கின்றனர். அவரது ஆட்சி காலத்தில் பெருமளவான நிலங்கள் விடுவிக்கப்பட்டன. நில விடுவிப்பானது எமது இருப்பிற்கு முக்கியமானது. எமது சுயநிர்ணய உரிமைக்கு அடிப்படையானது. ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் இடம்பெற்றன. துரதிஷ்ட வசமாக அது நிறைவேறவில்லை. அதற்காக எதுவும் நடக்கவில்லை என கூற முடியாது.
அடுத்த தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு 83 வீதமான தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் இந்த நிலைமைகள் காணப்படப்போவதில்லை. ஏனெனில் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தலிலும் , ஒரு பக்கம் போட்டியிட்டவர்கள் ராஜபக்சே குடும்பத்தினர். அதனால் தமிழ் மக்கள் அவர்களுக்கு எதிராக மற்றைய தரப்பினருக்கு வாக்களித்தனர்.
இந்த முறை ராஜபக்சே குடும்பம் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் தமிழ் மக்களின் வாக்கினை ஒன்றாக திரட்டுவது கடினமானது. கடந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸவிற்கு தமிழ் மக்கள் ஒன்றாக வாக்களித்தனர்.
அதேபோன்று கடந்த மூன்று தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகாவை, மைத்திரி பால சிறிசேனாவை மற்றும் சஜித் பிரேமதசாவை நிறுத்தியவர். அவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.
மைத்திரி பால சிறிசேனா ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு எங்களுடன் சேர்ந்து இயங்கியவர்கள் ஜே.வி.பி யினர். நாங்கள் இரண்டு கட்சிகளும் தான் அரசாங்கத்துடன் இணையாது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தோம்.
இந்த மூன்று பேரும் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால் , தமிழ் மக்களின் வாக்குகளை ஒன்றாக திரட்டுவது எவ்வாறு என்ற கேள்வி உள்ளது. உண்மையை சொன்னால் , இன்று வரை நான் யாரை ஆதரிப்பது என முடிவெடுக்கவில்லை.
தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதனால் , சிலவற்றை நிறைவேற்று அதிகாரம் கொண்டு செய்து விட முடியும். அதனை செய்யுமாறு கேட்கவுள்ளோம்.
இந்த முறை தமிழ் மக்களுக்கு என்ன செய்ய போறீங்கள் என்பதனை சிங்கள மக்களிடம் தெளிவாக நேரடியாக சொல்ல வேண்டும் எனும் நிபந்தனையை முன் வைக்கவுள்ளோம். இம்முறை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு தான் யார் ஜனாதிபதி என்பதனை தீர்மானிக்கும். அதனால் பேரம் பேசும் சக்தி எமக்கு அதிகமாகவுள்ளது.
எமது வாக்கு தான் தீர்மானிக்கும் என வரும் போது, நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் . இவ்வாறான நிலைமைகள் உருவாவது கடினம். அவ்வாறு உருவான ஒரு நிலைமையை நாம் சமயோசிதமாக பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love