Home இலங்கை அமிர்தகளியைத் தளமாகக் கொண்ட பத்ததிச் சடங்குப் பண்பாடு! து.கௌரீஸ்வரன்.

அமிர்தகளியைத் தளமாகக் கொண்ட பத்ததிச் சடங்குப் பண்பாடு! து.கௌரீஸ்வரன்.

by admin

 

அமிர்தகளியைத் தளமாகக் கொண்டு பரவலாக்கம் பெற்ற பத்ததிச் சடங்குப் பண்பாட்டின் தாய்க் கோவிலாக விளங்கும் அமிர்தகளி மகா மாரியம்மன் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பின் வரலாற்றில் மட்டுநகர் முகத்துவாரத்தை அண்மித்து வாவிக்கரையினையண்டி உருவாக்கம் பெற்ற ஊர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான வரலாறுகளும் பண்பாடுகளும் உள்ளன.

மேற்கைரோப்பியக் காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு முன்னர் மிகப்பெரும்பாலும் நீர்வழிப் போக்குவரத்தே பிரதானமாக இருந்தமையால் மட்டக்களப்பில் வாவிக்கரைகளை அண்டியே பழமையான குடியிருப்புகள் தோன்றி வளர்ந்துள்ளன.

இவ்வாறு உருவாகிய மட்டக்களப்பின் மிகப்பழமையான ஊர்களுள் ஒன்றாக மட்டுநகரையண்டியுள்ள ‘அமிர்தகளி’ விளங்குகின்றது. மேற்கைரோப்பியரின் காலனித்துவத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் அதன் முக்கியத்துவத்தை இழக்காத ஊராக வரலாற்றில் ‘அமிர்தகளி’ சிறப்பிடம் பெற்றுள்ளது.

இலங்கையின் வடக்குக் கிழக்குக் கடல் வழிப்போக்குவரத்து மார்க்கத்தில் மட்டக்களப்பிற்குள் நுழைவதற்கான நீர்வழிப் போக்குவரத்தின் பிரதான தரிப்பிடமாக முகத்துவாரத்தை அண்டியுள்ள வாவிக்கரையோரங்கள் விளங்கியுள்ளன. இக்கரையோரத்தின் கேந்திர நிலையமாக அமிர்தகளியும் சீலாமுனையும் சந்திக்கும் வாவிக்கரைப் பகுதி இருந்துள்ளது.

இத்தகைய முக்கியத்துவங் காரணமாக வரலாற்றில் புராதன காலத்திலேயே இலங்கையின் வடக்கின் கரையோரப் பகுதிகளில் ஆதிக்கஞ் செலுத்திய கடலோடுவதிலும், வாணிபஞ் செய்வதிலும் வல்லவர்களான தமிழர் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இக்கரையோரப் பகுதிகளில் குடியேறிக் குடியிருப்புகளை அமைத்துத் தத்தமது பண்பாடுகளுக்கேற்ப ஊர்களையுங் கட்டுருவாக்கஞ் செய்திருக்கின்றார்கள்.

இவ்வாறு மட்டுநகரின் வரலாற்றில் வடக்கின் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை முதலிய பகுதிகளிலிருந்து பல்வேறு நோக்கங்களுடனுங் கடலோடி வந்த தமிழ்ச் சமூகத்தவர்களுள் ஒரு பிரிவினராகிய குருகுல வம்சத்தினரால் மிகப்பெரும்பாலுங் கட்டுருவாக்கம் பெற்ற புராதன ஊர்களுள் ஒன்றாக அமிர்தகளி அதன் வரலாற்றுத் தடயங்களைக் கொண்டு விளங்குவதை ஆய்ந்தறிய முடிகிறது.
அமிர்தகளியைத் தளமாகக் கொண்டு கட்டுருவாக்கம் பெற்ற சமூகப் பண்பாட்டின் மையங்களாக அமிர்தளியிலுள்ள புராதனமான மாமாங்கேசுவரர், மாரியம்மன், கண்ணகியம்மன் கோவில்கள் இயக்கம்பெற்று வருவதனைக் காணலாம்.

இதிலுங் குறிப்பாக அமிர்தகளியைத் தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுப் பல்பரிமாணங்கள் பெற்றுள்ள பத்ததிச் சடங்குப் பண்பாட்டின் பிரதானமான புராதன கோவிலாக அமிர்களி மகா மாரியம்மன் கோவில் விளங்குகின்றது.

காலவோட்டத்தில் பல்வேறு காரணங்களால் அமிர்தகளியைத் தளமாகக் கொண்ட சமூகத்தவர்களில் சிலர்; அமிர்தளியை அண்மித்துள்ள இடங்களை நோக்கி நகர்ந்து அமிர்தளிக்குரிய உறவுக்காரக் குடியிருப்புகளையும், ஊர்களையும் உருவாக்கிய போதிலும் வரலாற்றின் ஒரு கட்டம் வரை அவ்வாறு குடிபெயர்ந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பொது நிகழ்ச்சியாக அமிர்தளி மகா மாரியம்மனின் வருடாந்தச் சடங்கு விழா நடைபெற்று வந்துள்ளது.

முன்னைய நாட்களில் அமிர்தகளியிலிருந்து இடம்பெயர்ந்தோர் வாழ்ந்த அமிர்தகளியின் உறவுக்கார ஊர்களிலிருந்து பூசகர்களும், தேவாதிகளும், மக்களும் வந்து இக்கோவிலின் சடங்கு விழாவில் தமது குலதெய்வக் கடமையினை நிறைவேற்றிச் சென்றதான உரையாடல்கள் இதற்குச் சான்றாகக் கிடைக்கின்றன.

காலவோட்டத்தில் குடிப்பரவலின் பெருக்கமும் ஊர்களின் விரிவாக்கமும் தவிர்க்கவியலாத வகையில் ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியான பத்ததிச் சடங்குக் கோவில்களின் உருவாக்கத்திற்கு வழிகோலியுள்ளது.

இவ்வாறு தோன்றிய அமிர்தகளி மாரியம்மனின் உறவுக் கோவில்கள் அனைத்தும் மாரி கடல் நாச்சி, சிவமுத்துமாரி, திரௌபதை, கண்ணகை, பேச்சி என்று அம்மன் கோவில்களாகவே இருக்கின்றன.
இவற்றில் சில ஊர்களின் சடங்கு விழாக்கள் அமிர்தகளி மகா மாரியின் சடங்குடன் ஏககாலத்தில் நடைபெறுகின்ற போதிலும் அமிர்தகளி மகா மாரியின் சடங்குடன் இணைந்து கொள்ளும் ஒரு சடங்கு முறை இன்றுவரை கடைப்பிடிக்கப்படுவதனைக் காண முடிகிறது.

அதாவது மேற்படி ஏககாலத்தில் சடங்கு நடைபெறும் அமிர்தகளியின் உறவுக்கார ஊர்களின் அம்மன் கோவில்களிலிருந்து தேவாதிகளும் பூசகர்களும் சடங்கு நாட்களில் ஊர்வலமாக அமிர்தகளி மகா மாரியிடம் வந்து சடங்கில் பங்குகொள்வதும் அதேபோல அமிர்தகளி மாரியம்மன் கோவிலிலிருந்து தேவாதிகளும் பூசகர்களும் தமது உறவுக் கோவிலுக்குச் சென்று சடங்கில் பங்குபற்றி வருவதும் ஒரு தனித்துவமான சடங்குப் பண்பாடாக இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

இவ்வழிபாடு அமிர்தகளியின் உறவுக்கார ஊர்களின் பத்ததிச் சடங்குப் பண்பாட்டிற்கெல்லாம் தாய்க் கோவிலாக அமிர்தகளி மகா மாரியே இருந்துள்ளார் என்ற சமூக வரலாற்றுத் தொன்மையினை மீள மீள வலியுறுத்தும் சடங்கு மரபாக விளங்கி வருகின்றது எனலாம்.

இவ்வாறு மட்டுநகரின் சமூகப்பண்பாட்டு வரலாற்றில் தனித்துவத்துடன் வாழ்ந்து வரும்; ஏழுர் குருகுல வம்சத்தவர்களின் பத்ததிச் சடங்கு மரபில் மாரியம்மன் வழிபாட்டின் தாய்க்கோவிலாகவும் அதன் மையமாகவும் விளங்கும் அமிர்தகளி மகா மாரியம்மனின் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்தச் சடங்கு விழா எதிர்வரும் 16.06.2024 – 21.06.2024 ஆந் திகதி வரைக்கும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
து.கௌரீஸ்வரன்,
11.06.2024

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More