தமிழர்களுடைய தொன்மையான கலை பறை. பறைமேளக் கலையின் வீரியம் எழுச்சி தருவது. இதன் காரணமாகவே ஆதிக்க நோக்குடையவர்களுக்கு அச்சந்தருவதாகவும் அமைந்து விடுகிறது. எழுச்சியைப் பலவீனப்படுத்த விரும்புபவர்கள் அதற்கான கூறுகளை இனங்கண்டு அகற்றுவதிலும் குறிப்பாக அகற்ற வைப்பதிலும் கவனம் செலுத்துவர். ஈழத்தமிழர் பண்பாட்டில் பறை எனும் இசைக்கருவிக்கு இது நிகழ்ந்திருக்கின்றது.
இவ்வாறாக இனங்காணப்பட்டு தம்கையாலேயே தம்கண்ணைக் குற்றவைப்பது போல தமிழர்களாலேயே அவர்களது தொன்மைக் கலை விலத்தி வைத்திருக்கிறது.
சாதி என்ற ஏற்றத்தாழ்வும்; கேடுகள் நிறைந்த ஒடுக்குமுறைப் பண்பாடுகளும் நிறைந்த தமிழ்சமூகத்தால் அவர்களது தொன்மைக் கலையை அவர்களே கீழானதாகப் பார்க்க வைக்கப்பட்டு, அகற்ற வைக்கப்பட்டிருக்கிறது, முற்று முழுதாகவே அகற்றிவிட முனையப்படுகின்றது.
பறைமேளக் கலை பயில்நிலையில் காணப்படுகின்ற எச்சசொச்ச இடங்களிலும் இக்கலை நல்ல வருவாய்தரும் தொழிலாக இருப்பதன் காரணமாக ஏனைய சமூகத்தவர்களால் கையகப்படுத்தப்படுவதும் நிகழ்ந்து வருகின்றது. உள்;ர் கிராமத் தெய்வச் சடங்குகளிலும் நவீன கலை வெளி ஆற்றுகைகளிலும் இதனைக் காணமுடிகின்றது.
சாவீடு மட்டுமே ஏiயை சமூகத்தவர்களால் தொடப்படாததாக இன்னமும் இருந்து வருகிறது. சாவீடு நல்ல வருவாய்தரும் இடமாக இருப்பதன் காரணமாக மரபு ரீதியாக பறைமேளக் கலையைப் பயின்றுவருபவர்களும் அதனுள் முடங்கி விடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
மறைந்த பறைமேளக் கலைஞர் க.பரசுராமன் இந்த இருநிலைகளையும் இணைத்து பறை மேளக் கலையின், பறைமேளக் கூத்துக் கலையின் வல்லபத்தை கருத்துத் தெளிவுடனும், கலை வல்லபத்துடனும் முன்னெடுத்து வந்தவராக திகழ்ந்திருக்கின்றார். சாதியின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் மேற்கொள்ளப்பட்ட அனர்த்தங்கள், அவலங்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு பறையை முரசமென முன்னிறுத்தி பல்வேறு தளங்களிலும் இயங்கி வந்தவர்.
பிரசித்தம் பெற்ற வைத்தியரும், மாந்திரிகரும், பறைமேள வித்துவானுமாகிய வையன் மூப்பன் ஆனைக்குட்டியின் மகள்தான் பரசுராமனின் மனைவி வள்ளி. நெஞ்சுரமும் புத்திக்கூர்மையும் வலுவாய் அமைந்து பரசுராமனுடன் தோளோடு தோள்நின்று பண்பாட்டு அனர்த்தங்களிடையே பறைமேளக் கலையை முன்னெடுத்து வந்ததில் பரசுராமன் வள்ளியின் இடம் மிகவும் உறுதியானது. இன்று அந்த இடம் இவர்களை நிகர்த்த ஆளுமைகளை எதிர்பாத்திருக்கின்றது.
மரபு ரீதியான பறைமேளக் கலை, கலைஞர்கள் சார்ந்து நிலைமை இவ்வாறு இருக்க, இப்பொழுது ஈழத்தமிழர்கள் பறைமேளத்தையே கருவிநீக்கம் செய்து கொண்டிருப்பதை காணமுடிகின்றது.
ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்களில் பறையைத் தமது அடையாளமாக எடுத்து ஏந்துபவர்கள் தமிழகத்தின் பறையாகிய தப்பு எனப்படும் இசைக்கருவியை தெரிந்து எடுப்பது உரத்துக் காணப்படுகின்றது. இந்தத் தெரிவின் பின் நின்றியங்கும் அரசியல் இனங்காணப்பட வேண்டியது.
எவருக்கும் அவர் விரும்பும் இசைக் கருவியை பயிலும் உரிமை உண்டென்பதும் யதார்த்தம்.
ஆயினும் கலை மரபுகள் அடையாளமாக கொள்ளப்படும் பொழுது அவற்றின் மூலத்தை நிராகரித்து விடமுடியாது. அடையாள அரசியலின் அடிப்படையும் இதுதான்.
வடக்கு, கிழக்கில் பயில்நிலையில் இருந்துவரும் பறையிசைக் கருவிகளை அடையாளமாகக் கொள்வதைத் தவிர்த்து தப்பை ஈழத்தமிழர் அடையாளம் என ஏந்தி முழங்குவது கலையை, கலைஞரை மட்டுமல்ல கருவியையும் நீக்கம் செய்யும் மேலாதிக்க குணாம்சம் என்றே கொள்ள வேண்டி இருக்கின்றது.
இதேவேளை ஈழத்தில் மலையகத் தமிழர்கள் மத்தியிலும் அருந்ததியர் சமூகத்தினரிடையேயும் குறவர் சமூகத்தினரிடையேயும் அவர்களது தனித்துவ வாத்தியக் கருவியாக தப்பு இருந்து வருகின்றது என்பதும் கவனத்திற்குரியது.
அருந்ததியர் சமூகத்தினரிடையேயும் குறவர் சமூகத்தினரிடையேயும் தப்பு இசைக்கருவி பயில்வு மிகவும் அருந்தலாகி விட்டிருக்கிறது.
இந்நிலையில் வடக்;கு, கிழக்கில் ஈழத்து பறைமேளக் கலை பல்வகை அனர்த்தங்களையும் கடந்து கலையாகவும்; தொழில் முனைவாகவும் வெற்றிகரமாக, முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதும் ஆச்சரியத்திற்குரிய யதார்த்தமாக இருக்கின்றது.
இந்தவகையில் யாழ்ப்பாணத்தின் பறைமேளக் கலைஞரான செபமாலை பிரான்ஸிஸ்(இன்பம்) அவர்களின் முன்னெடுப்பும் அதை வலுவாக நிலைப்படுத்தி முன்னெடுத்துவரும் அவரது மகன் பிரான்ஸிஸ் கனிஸ்ரனதும் அவர் சார்ந்த கலைஞர்களதும் முன்னெடுப்பும் படிப்பினைக்கும் பரவலாக்கத்துக்கும் உரியது. நசுக்கப்பட்டுவரும் கலைமரபானது வெற்றிகரமான கலையும் தொழில்முனைவாகவும் நிலைநிறுத்தப்பட்டிருப்பது வாசிக்கப்பட வேண்டிய பெருஞ் செய்தியாகும்.
மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாமின் முரசம் பேரிசைக் கலைகள் கற்கைகள் மன்றமானது மட்டக்களப்பின் தனித்துவப் பறைமேளக் கலையும்; அதனோடு இணைந்த சொர்ணாளி இசையையும் மரபு ரீதியாகப் பயின்றுவரும் கலைஞர்களுடன் கூட்டுறவாக அமைந்து ஆற்றுகை, ஆராய்ச்சி, செயல்வாதம், இசை விழா கருவி உருவாக்கமென இயங்குவதும் மற்றுமொரு செய்தியாகும்.
இவ்வாறு வேறுகுழுக்களும் கலையாகவும் தொழில்முனைவாகவும் பறைமேளக் கலையை முன்னெடுத்து வருவதும் காணமுடிகின்றது.
இசைக்கு எல்லை இல்லை என்பர். இசைக்கு எல்லை உண்டு. ஏற்றத்தாழ்வு உண்டு. கலையாகவே கொள்ளப்படாத கலைகள் உண்டு. இத்தகையை யதார்த்தத்தின் பின்னணியில் ஈழத்தமிழர்களின் தொன்மையான கலைமரபான பறைமேளத்தின் கருவி நீக்கம் என்பது அதுவும் அடையாளம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டு வருவது புதிய பெரும் ஆபத்தாக எதிர்கொண்டு நிற்கிறது.
ஈழத்தவர்கள் மத்தியில் பறைமேளம் பயிற்றவல்ல, சொர்ணாளி பயிற்றவல்ல, இசைக்கருவிகளை உருவாக்கவும் திருத்தவும் வல்லவர்கள் இன்னமும் வலுவாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.
எனவே தமிழர்களது அடையாளமாக எடுத்து ஏந்த முனைபவர்கள் பறைமேள கலைஞர் சமூகம் பறைமேளக்கருவி என்பவற்றின் சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கருத்திற்கொள்வது அவசியமானதும், அடிப்படையானதுமாகும். தொன்மையான கலைமரபை முன்னெடுத்து வருகின்ற பயில்நிலை சமூகத்திலிருந்து பறையிசைக் கருவியை கையகப்படுத்துவதும் குறித்த பறையிசைக்கருவியை கருவி நீக்கம் செய்வதும் அடையாளம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அனர்த்தமாகவே இருக்கிறது.
பேராசிரியர் சி.ஜெயசங்கர்.