மூன்றாவது கண் நண்பர்கள் குழுவின் “நன்னிலம்” – (உள்ளூர்த் தாவரங்களை மீட்டெடுத்தலும் பரவலாக்குதலும்) செயற்பாட்டாளரினால் மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இன்றுநடைபெற்ற மரபார்ந்த மரக்கன்றுகள், செடிகள், கொடிகள், விதைகளின் அறிமுகமும் பகிர்வுக்குமான சந்திப்புக்களம் நிகழ்வானது “நாங்கள் வாழ வேண்டும்…… ” என்கின்ற இயற்கையோடு இணைந்த வாழ்தல் பற்றிய பாடலையும் பாடி தொடர்ந்து பேரா.சி.ஜெயசங்கர் அவர்களால் நன்னில செயற்பாட்டு நோக்கங்கள் பற்றி தெளிவான சிந்தனைக்குரியதான கருத்துக்கள் பரிமாறப்பட்டது. மேலும் நன்னிலம் செயற்பாட்டளர் சிந்துஉஷாவினால் நன்னிலத்தின் மூன்று வருட பயணம் பற்றி சிறு கருத்துப்பரிமாற்றலும் தொடர்ந்து அந்த பயணத்தில் அறிமுகமான மண்டூரைச் சேர்ந்த பரமானந்தம் ஐயா மற்றும் வந்தாறுமூலை சண்முகம் மாஸ்டர் அவர்களினதும் அனுபவப் பகிர்வுகள் பகிரப்பட்டது. அப்பகிர்வில் எங்கள் மரபார்ந்த மூலிகைகள், மரங்கள், செடிகள், கொடிகள் என்பவற்றின் மூலம் மனிதர்களாகிய நாங்கள் அடையும் பல்வேறு நன்மைகள் பற்றியும் இயற்கையை நாங்களே அழித்துவிட்டு குளிசையும் கையுமாக அலையும் வாழ்வு பற்றியும் இயல்பாக தங்கள் வாழ்தலின் ஊடாக பெற்றுக்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்தனர். கேட்டுக்கொண்டிருந்த இளந்தலைமுறையினர் நாங்கள் வாழும் இன்றைய வாழ்வு எங்களுக்கு மட்டுமல்ல எங்களின் அடுத்த பல தலைமுறையினருக்கும் வாழும் வழி அற்றுப்போகிறதே என்று நினைக்கும் தன்மையையும் உருவாக்கியிருந்தது. தொடர்ந்து மாலை வேளையில் சூரியா பெண்கள் அமைப்பின் கலாசாரக் குழுவினரின் எங்கள் மரபார்ந்த உணவுக்காக பயன்படுத்தும் இலை வகைகள் , உணவுமுறைகள் பற்றி சிந்திக்கத் தூண்டவல்லதான ” எழுத்தாணி” நாடக ஆற்றுகையும் தொடர்ந்து ஓவியர்களான மதீஸ், ஜதீஸ் குழுவினரின் சிறுவர்களுடனான ஓவியச் செயற்பாடும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மரபார்ந்த மரங்கள், செடிகள், கொடிகளில் உள்ள இலைகளை சிறுவர்கள் வரைவதற்கான ஆற்றுப்படுத்தலையும் , மரபார்ந்த மரங்களின் இலைகள், பூக்களில் இருந்து பெற்றுக்கொண்ட இயற்கை வர்ணங்களையும் அவற்றுக்கு வர்ணங்களாக தீட்டுவதற்கும் வழிப்படுத்தி சிறுவர்களை மரபார்ந்த மூலிகைகள், உள்ளூர் மரங்கள், செடிகள், கொடிகள் பற்றி அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும் இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கான சிந்தனையையும் ஏற்படுத்தியிருந்தனர். ஓவிச்செயற்பாட்டின் ஒரு பகுதியாக எங்களால் இல்லாமல் ஆக்கப்பட்ட இன்றைய இளந்தலைமுறையினர் அறியாத பல உள்ளூர் பழங்கள் பற்றி குறிப்பாக பெரியதுறை என்ற பெயர்கொண்ட இன்றைய திருபெருந்துறையில் இல்லாமல் ஆக்கப்பட்ட பழங்களையும் அதன் வடிவமைப்புக்களையும் அவற்றை விரும்பி சுவைக்கவரும் அயலுரவர்கள் என பல சுவாரஸ்யமான தகவல்களை திருப்பெருந்துறை செல்வி அக்கா கேட்போர் ஆசைகொள்ளும்வகை சுவாரஸ்யமாக பரிமாறிக்கொண்டதோடு அந்த பழங்களின் வடிவங்களை ஓவியர்கள் சித்திரங்களாக வரைந்தும் காட்டினர் . நன்னிலத்தின் தாவரங்களை காட்சிப்படுத்தும் செயலில் ஓவியர் நிர்மலவாசன் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக மரபார்ந்த மரக்கன்றுகள், செடிகள், கொடிகள் எங்கள் ஊர்களில் அரிதலாகிச் செல்வதும், இல்லாமல் ஆக்கப்படுதலும் எங்களாலேயே நடைபெறுகின்றது என்பதாகவும் அப்படி இல்லாமல் ஆக்கப்படும் சூழலில் நாங்கள் எத்தகைய இழப்புக்களை சந்தித்துக் கொண்டு வாழ்கிறோம் என்கின்ற தொனிப்பொருள் உள்ளடங்கலாக பேரா.ஜெயசங்கர் அவர்களால் எழுதப்பட்ட பாடல்கள் சிலவற்றை சாகித்தியனின் இசைப்பின்னணியில் கி.ப.க.சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை விரிவுரையாளரான பிறிசில்லா ஜோர்ச் குழுவினரால் சிறுவர்களுடன் இணைந்து பாடப்பட்டது. புதிய பாடல் வரிகள் எழுதுவதற்கான கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இச்செயற்பாடும் சிறுவர்களை எங்கள் சூழல்சார்ந்து சிந்திக்கும் மனப்பாங்கினை வளர்ப்பதோடு திறன்விருத்திக்கான கழத்தினையும் வழங்கியிருந்தது. இதே போன்று நாளை 28.07.2024ஆம் திகதியும் காலை வேளையில் நன்னிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மரபார்ந்த மரங்கள், செடிகள், கொடிகளை பார்வையிடுவதோடு அவை சார்ந்த அனுபவப் பகிர்வுகளையும் பகிர்ந்து கொண்டு நன்னிலத்தின் தொடர்ச்சியான இருப்புக்கு ஆலோசனைகளையும் பகிரும் நிகழ்வும். தொடர்ந்து மதிய உணவின் பின்னர் (பி.ப02.00) “எழுத்தாணி” நாடக ஆற்றுகையும் தொடர்ந்து சிறுவர்களுடனான ஓவியச்செயற்பாடும், பாடல் நிகழ்வுகளும் இடம்பெறும். ஆர்வலர்களை அன்பாக அழைக்கிறோம் மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு.