Home இலங்கை பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு… மக்களும் மருத்துவ  வியாபாரமும்! தேவ அபிரா.

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு… மக்களும் மருத்துவ  வியாபாரமும்! தேவ அபிரா.

by admin

 

சாவகச்சேரி மருத்துவமனையில் நிகழ்ந்த  ஊழல்களை மருத்துவ அதிகாரி ஒருவர்  சமூக ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்ததைத் தொடர்ந்து இன்றைக்கு வடக்கு மாகாணத்தின் மருத்துவ சேவை வழங்கல் தொடர்பாகப் பல முறைப்பாடுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மருத்துவர்களினது தொழில் நேர்மைக்குப் புறம்பான நடத்தைகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

1997 ம் ஆண்டு மக்களும் மருத்துவ சேவையும் என்ற தலைப்பில்  மேற் குறித்த விடையங்களை ஒத்த பிரச்சனைகள் குறித்த கட்டுரை (https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_1997.04.24_(120) ) ஒன்றை வைத்தி என்ற பெயரில் சரிநிகரில் எழுதி இருந்தேன். அப்பொழுது  திருகோணமலை ஆதார வைத்திய சாலையில் நிகழ்ந்த பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அக்கட்டுரை எழுதப்பட்டது. அக்கட்டுரையில் எழுதப்பட்ட விடையங்கள் இன்றைக்கும் அப்படியே  பொருந்துவதைக் காணும் போது துயர் மிகுகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்பும் மருத்துவத்துறையில் மட்டுமல்ல தமிழர்களின் சமூக பண்பாட்டு அரசியற் துறைகளில் நிகழ்ந்திருக்க வேண்டிய மாற்றங்கள் நிகழாமலேயே இருப்பதைக் காண்கிறோம்.

இவற்றுக்குப் பிரபுத்துவ மனநிலை, காலனிய மனநிலை, அளவுக்கு மீறிப்பணமீட்டும் ஆர்வம், குறுகிய அரசியல் நலன்கள்  போன்றவை இன்றளவும் காரணங்களாக  இருக்கின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கும் வைத்தியசாலைகளில்     நிதி வள மற்றும் ஆளணிபங்கீடுகளில் நிகழும் முறைகேடுகள், நிதிக் கையாடல்கள், தரமற்ற சேவை வழங்கல்கள் போன்ற விடையங்களைக் கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. அவற்றுக்கு உண்மையுடன் கூடிய பதில்களைத்தரவேண்டியவர்கள் – பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அவ்வாறு செய்யாமல்  தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முனைவதைக் காண்கிறோம்.

குற்றமிழைப்பவர், சட்டவல்லுனர், அரசியல்வாதி ஆகிய மூன்று பகுதியினரும் கட்டமைப்பைக் காப்பாற்ற வேண்டும் என்கிற  ஒரு புள்ளியில் ஒன்றிணைந்து  மக்களுக்கெதிரான நிறுவனமாகிறார்கள்.

ஒரு பெரும் நிறுவனத்தினை  நிர்வகிப்பது என்பது இலகுவான வேலை அல்ல.அது வெறுமனே ஒரு தனி நபரினால் நிறைவேற்றப்படக் கூடியதும் அல்ல அதற்காகத்தான் நிர்வாகக் கட்டமைப்பொன்றும் அதனுள் அடங்கும் பல அலகுகளும் இருக்கின்றன. இவ்வலகுகள் யாவற்றையும் ஒன்றிணைத்துச் சரியான வழி நடத்தலை வழங்குபவரே  நல்ல நிர்வாகியாகிறார். இவ்வழி நடத்தலுக்கு அடிப்படையாக இருப்பது அந்நிறுவனத்தின் நோக்கமாகும். நிர்வாகியாக இருப்பவர் முதலில் அந்நிறுவனத்தின் நோக்கத்தை உணர்ந்து அதன் மயப்பட்டவராக மாற வேண்டும். நிர்வாகி அந்நிறுவனம் அதன் நோக்கத்தை அடைவதற்குத் தடையாக இருக்கும்  விடையங்களை இனம் கண்டுகொள்ள வேண்டும். அத் தடைகளை அகற்றுவதற்குத்  தடையாக இருப்பவற்றையும் இனம் கண்டு கொள்ள வேண்டும். இவ்வினம் காணுகைகளைச் செய்வது ஒன்றும் கடினமாமனதல்ல. ஆனால்  நிர்வாகி ஒருவருக்கு அங்கிருக்கும் தடைகளை அகற்றுவதுதான் கடினமானதாகும். அதிகாரம், பணம் ,அரசியல் மூன்றும் தனித்தனியேயும் இணைந்தும் உருவாக்கும் தடைகளை அகற்றுவது என்பது இலகுவானது அல்ல. பதிலாக அவற்றுடன் இணைந்து அல்லது இயைந்து செல்வது சுலபமானது; பயன் தருவது; இலாபகரமானது.

வடக்கு கிழக்கின் வைத்தியசாலைகளில் வேலை செய்கிற பல நிலைப்பட்ட சேவை வழங்குனர்கள் மீதும் நோயாளிகளுடன் பரிவன்புடன் நடந்து கொள்வதில்லை, அவர்களுக்கு நோய்கள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுவதில்லை,  நோயாளிகள் மீது தேவையற்ற  பரிசோதனைகள் சுமத்தப்படுகின்றன, நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்,  பணியாளர்கள்   வேலைக்கு உரிய காரணமில்லாமல் சமூகமளிப்பதில்லை, வேலைக்கு உரிய நேரத்துக்கு வருவதில்லை, வேலை நேரம் முழுமையும் வைத்திய சாலைக்குள் இருப்பதில்லை எனக் குற்றச்சாட்டுக்கள்  நீளுகின்றன.

பல சந்தர்ப்பங்களில் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும் அதில் உயர் அதிகார நிலையில் இருப்பவர்களுக்கும் அவர்களது  தனிப்பட்ட நோக்கங்களும் நலன்களும் முதன்மையாக அமைந்து விடுகின்றன. இவை ஊழல்களுக்கும் நிதிக் கையாடல்களுக்கும் அடித்தளமிட்டு விடுகின்றன.  நிர்வாகத்தில் அல்லது உயர்நிலையில் இருப்பவர்கள் ஆக்கபூர்வமான ஒன்றை அடைவதற்காக சேர்ந்து வேலை செய்யும் பண்பற்றவர்களாகவும் தாம் நினைப்பது அல்லது செய்வதுதான் சரி என எண்ணுபவர்களாகவும் உள்ளனர்.

சமூகத்தின் முதன்மையான அரச நிறுவனங்களில் உயர் நிலைகளை அடையும் போது அது சேவை வழங்குவதாக இருக்கலாம் அல்லது நிர்வகிப்பதாக இருக்கலாம் அவரவர்களுக்குக் கிடைக்கிற அதிகார நிலையும் அதன் வழி உருவாகும் சமூகத் தகுதியும் அவர்களின் தவறுகளை மறைப்பதற்கான அல்லது மறுப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.  அது போலவே சமூகத்தில் ஒருவர்  பொருளாதாரத்தில் உயர் நிலையை அடையும் போது அதுவும் அவரவர்களின் தவறுகளை மறைப்பதற்கான அல்லது மறுப்பதற்கான வசதிகளை வழங்குகிறது. இவர்களிடையே ஏற்படும் ஆளுக்காள் உதவி செய்யும் வலையமைப்பு  அவர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்தும் காப்பாற்றுமளவுக்கு உறுதியானது. இவர்களுடன் அரசியல் அதிகாரமும் இணையும் போது சட்டம் குருட்டறையாகிறது; சமூகம் இருட்டறையாகிறது.

இவ்விருட்டறைகளுள் நிகழ்பவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுபவர்களாக Whistleblowers இருக்கின்றனர். இக்காலத்தில் பெரும்பாலும் சமூக அல்லது எண்ணிம ஊடகங்களினூடாக நிறுவனங்களுள் நிகழும் தவறுகள் குற்றச்செயல்கள் வெளி வருகின்றன. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் தமது பார்போர் அல்லது கேட்போர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக Whistleblowers களினால் வெளிப்படுத்தப்படும் விடையங்களைத் தமது சோடனைகளுக்கும் திரிபுகளுக்கும்  உட்படுத்திப் பரப்பும் வேலையையும் செய்கிறார்கள்.

Whistleblowers இனால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முறையான பதில் அளிப்பதுடன் தாம் குற்றமற்றவர்களாயின் அவற்றுக்கான ஆதாரத்தை வெளிப்படுத்தக்கடமைப்பட்டவர்களாக குறித்த நிறுவனங்களுக்குள் கடமையாற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்க வேண்டும். அதுவே அறமாகும்.  ஆனால் உலக நாடுகளின் சட்டங்கள் Whistleblowers இனை வாயடைக்கச் செய்ய வல்லவையாகவே இருக்கின்றன.

வடக்கு கிழக்கில் இருக்கும் வைத்திய சாலைகளில் அளிக்கப்படும் எல்லா வகையான சிகிஸ்சைகளின் தரமும் குன்றியவையாக உள்ளனவா? இல்லை. கிடைக்கிற வசதிகளை வைத்துக் கொண்டு தரமான வைத்தியத்தை வழங்குகிற  திறமையான வைத்தியர்கள் அங்கு இல்லையா ? இருக்கிறார்கள்.

ஆனால் இங்கு வைக்கப்படுகிற குற்றசாட்டுக்களின் மையம் அதுவல்ல. இலங்கையின் ஒட்டுமொத்த வைத்திய சேவை வழங்கல் என்பது நோயாளர்களை முதன்மைப்படுத்திய அவர்களின் நலன்மீது நிலை கொண்டுள்ளதா என்பது தான் இன்றுள்ள முக்கியமான கேள்வி.

1995 ம் ஆண்டில் இருந்து வைத்தியத்துறைக்குள்   தொழிற்பட்டு வருகிறேன். இலங்கையிலும் பின்னர் நெதர்லாந்திலுமாக எனது அனுபவங்கள் தொடர்கின்றன.

நெதர்லாந்தில் பல்கலைக்கழக மருத்துவமனைகள் நீங்கலாக ஏனைய வைத்தியசாலைகள் அனைத்தும் சுயாதீனமானவை; சுகாதார அமைச்சின் விதிகளின் கீழ் இயங்கக் கடமைப்பட்டவை. அவற்றின்நிர்வாகத்தில் எந்த அரசியற் தலையீடுகளும் இருப்பதில்லை. பல்கலைக்கழக மருத்துவமனை நிர்வாகத்திலும் அரசியற் தலையீடுகள் இருப்பதில்லை.   மருத்துவமனைகள் அவற்றுக்கான நிதியைக் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்தே பெற வேண்டும்.

காப்புறுதி நிறுவனங்கள் குறைந்த செலவில் தரமான சேவையை வழங்கும் வைத்தியசாலைகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும். எனவே  வைத்திய சாலைகள் வினைத்திறன் மிக்க  வள விரையம் குறைந்த அதே வேளை  நோயாளர்களைக் கவரக்கூடிய  சேவையை வழங்க வேண்டிய அழுத்தத்துக்கு  உட்படுகின்றன.

கீழ்வரும் இரு உதாரணங்களைக் கவனிப்போம்

சில காலங்களுக்கு முன்பு  எங்களது Medical Imaging Department  இன் முகாமையாளராக இருந்தவர் வைத்தியசாலையின் வேறு ஒரு துறைக்கு மாற்றப்பட்டார். மற்றும் Radiologist ( சிறப்பு நிலை வைத்தியர்) ஒருவர் வேலையை விட்டே நீக்கப்பட்டார். மேற்குறித்த இருவரும்  சேர்ந்து வைத்தியசாலைக்கு வெளியே Medical Imaging அலகு ஒன்றை உருவாக்கி இயக்க ஆரம்பித்திருந்தனர்.  அவர்கள் இருவரும் வைத்தியசாலையின் நலன்களுக்குப் பாதகமாகவும் தாம் உருவாக்கிய தனியார்  அலகுகளுக்குச் சாதகமாகவும் இயங்கக் கூடிய அதிகார நிலையைக் கொண்டிருந்தமையால் வேலை மாற்றமும் நீக்கமும் இடம்பெற்றன. அச்சிறப்பு நிலை வைத்தியர் வழக்குத் தொடர்ந்த போதும் அது வெற்றிபெறவில்லை. இதே வேளை Medical Imaging தொழில் நுட்பவியலாளர்கள் இரண்டு இடங்களிலும் தனித்தனியான ஒப்பந்தங்களுடன் வேலை செய்யத் தடைகள் விதிக்கப்படவில்லை. ஏனெனில் இவர்கள் இரு நிறுவனங்களிலும் அவ்வவற்றின் நலன்களைத் தீர்மானிப்பவர்களாக இருப்பதில்லை. எந்த நிறுவனமானாலும் அங்கு வேலை செய்பவர்கள்  ஒப்பந்தங்களில்  குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள்  சமூகமளித்து வேலை செய்தே ஆக வேண்டும். அன்றேல் சம்பளத்தை இழக்க நேரிடும்.

இலங்கையில் 80 சதவீதமான வைத்தியர்கள்  தனியார் அலகுகளிலும் வேலை செய்கிறார்கள். கணிசமானவர்கள் தனியார் வைத்திய நிலையங்களின் உரிமையாளர்களாக அல்லது பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அரச மருத்துவமனைக்கு வருபவர்களைத் தனியார் மருத்துவமனைகளை நோக்கி ஈர்ப்பது, தனக்குக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் முன்னுரிமை அளிப்பது, அரச வைத்திய சாலைகளில் ஏனோதானோ என்று வேலை செய்வது, அரச வைத்தியசாலைக் கடமை நேரத்திலேயே தனியார் வைத்தியசாலைக்குச் சென்று அக்கறையோடு வேலைசெய்வது என வைத்திய வியாபாரம் செய்யும் வைத்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை ஊடகஅறத்தைப் பேணும் புலனாய்வுப்பத்திரிகையாளர்கள் தான் அறிந்து சொல்ல வேண்டும்.

எங்கு வேலை செய்தாலும் தொழில் அறத்தையும் மானுட அறத்தையும் பேணித் தொழிற்படுகிற தொழிற் திறனும் வாய்ந்த வைத்தியர்களுக்கானதல்ல இப்பத்தி.

அத்தகைய வைத்தியர்கள் வடக்குக் கிழக்கில் இருக்கின்றனர்.  அவர்கள் சமூகத்தின் இருண்ட பக்கங்களில் இருந்து  வருகிற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடியவர்கள் அல்ல. அதனால் பிரச்சனைகள் வரும் போது அமைதியாக ஒதுங்கிக் கொள்கின்றனர்.

இலங்கை போன்ற நாடுகளில் சில வைத்தியர்கள் விடும் தவறுகள் நோயாளிகளின் வாழ்கையையே மாற்றி விடுகின்றன அல்லது அவர்களின் உயிரையே குடித்து விடுகின்றன.

மனிதர்களால் செய்யப்படும் வேலைகளில் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அத்தகைய தவறுகள் நிகழாமல் இருக்க நூறு வீதமும் முயல வேண்டும். அதற்கான பொறி முறைகளை உருவாக்க வேண்டும்.  தவறுகள் நிகழும் போது அவற்றை மறைக்கவோ அல்லது பூசி மெழுகவோ கூடாது. தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்பது அவை சரியான விசாரணைக்கு உட்படுத்தப் படும் போதே சாத்தியமாகும்.  தவறுகள் காப்பாற்றப்படுமென்றால்  அத்தவறே நிறுவனமாகிவிடும். மக்களை மையப்படுத்திய சேவை வழங்கலை நோக்கமாகக் கொள்ளாத எந்த அரச வைத்திய நிறுவனமும் நிதிபலம் கொண்ட தனியார் நிறுவனங்களின் மறைமுகமான சேவையாளராகிவிடும்.

மேற்கு நாடுகளில் நோயாளர் தங்கள் முறைப்பாடுகளைச் செய்வதற்கு அவர்களின் காத்திருப்பு இடங்களிலயே படிவங்கள் உள்ளன. தவிரவும் வைத்திய சாலைகளின் இணையத்தளங்களில் முறைப்பாடுகளைச் செய்வதற்கான வசதிகளும் உள்ளன. இலங்கையிலும் அவ்வாறு வசதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தவறினை இனம் கண்டு திருத்தும் பொறி அமைப்பு உண்மையிலும் சரியாகத் தொழிற்படுகின்றதா என்ற கேள்விக்கு விடை இல்லை.

மேற்கு நாடுகளில் செய்யப்பட முறைப்பாடுகள்  தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் வாசிக்கப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கமும் கோரப்படுகின்றது. தேவைப்படும் போது நோயாளர்களுடன் சந்திப்பு ஏற்படுத்தப்பட்டு நிலைமை விளங்கப்படுத்தப்பட்டு  குறை நிவர்த்திக்கப்படுகிறது. இந்த நிலமை இந் நாடுகள் பணவசதி கொண்டவை என்பதால் ஏற்பட்டவை அல்ல. பதிலாக நோயாளர்கள் சொல்வதைக் கேட்பதற்கான காதும் மனமும் உள்ள மருத்துவ சேவைக் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளதால் உருவானதாகும்.

வைத்திய சேவை என்பது கூட்டு வேலையாகும். குறித்த வேலை ஒன்று நிகழும் போது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் கண்காணிப்பதும் தவறு நிகழும் போது சுட்டிக்காட்டுவதும் இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவ்வாறு ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கவும்படுகிறது.

சில நாட்களின் முன்பு இரவு வேலையில் இருந்த பொழுது  அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அழைப்பு வந்தது. அங்கிருக்கும் ஒரு நோயாளிக்குச் சுவாசப்பைகளுக்குக் குருதி வழங்கும் இரத்தக் குழாய்களில்  அடைப்பு இருக்கிறதா எனக் கண்டு பிடிப்பதற்கான பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்பது வேண்டுகோள். Radiologist உம் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டிருந்தார்.  பரிசோதனை செய்வதற்குத் தேவையான தரவுகளைப் பரிசோதித்த பொழுது நோயாளியின் சிறு நீரகங்களின் செயற்பாடு மிகவும் குறை நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டேன். பரிசோதனையின் போது நோயாளியின் குருதி நாளங்களுக்குள் Contrast எனப்படும் திரவம்(கதிரியக்க உறிஞ்சி) செலுத்தப்படும். அது சிறு நீரகங்களைப் பாதிக்கும் ஒரு திரவம். எனவே சிறு நீரகங்களை அதற்காகக் தயார் செய்த பின்பே ( போதுமான அளவு உடலுக்கு நீர் ஏற்ற வேண்டும் – எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம்) குறித்த பரிசோதனையச் செய்ய வேண்டும். இதனை நான் Radiologist க்கும் தீவிர சிகிச்சைப் பிரிவுத் துணை வைத்தியருக்கும் அறிவித்தேன். பொறுப்பான வைத்தியரும் தவறை ஒத்துக் கொண்டு  நோயாளிக்கு நீரேற்றிய பின் (ஒன்றரை மணித்தியாலங்களில் பின்) பரிசோதனையைச் செய்ய ஒப்புக் கொண்டார்.  சில நிமிடங்களின் பின்பு Radiologist என்னை அழைத்து நோயாளியைக் கொண்டு வருகிறார்கள் பரிசோதனையைச் செய்யுங்கள் பரிசோதனையின் பின்பாக நோயாளிக்கு நீரேற்றினால் போதுமானது,    தான் அதிதீவிரச் சிகிஸ்சைப் பிரிவுச் சிறப்பு நிலை வைத்தியருடன் (Intensivist) உரையாடி விட்டதாகவும் கூறினார். சரியான காரணத்துடன் பரிசோதனையைச் செய்வதற்கான ஒழுங்கு விதிகளை மீறுவது குற்றமன்று.

அதிதீவிரச் சிகிஸ்சைப் பிரிவுச் சிறப்பு நிலை வைத்தியரும் துணைவைத்தியருக்கு நோயாளியை x – Ray department க்குக் கொண்டு போகுமாறு கூறியுள்ளார் . துணை வைத்தியர் நோயாளிக்குப் பொறுப்பான மருத்துவத் தாதி வேறு ஒரு நோயாளரைப் பராமரித்துக் கொண்டிருந்ததால் அவருக்குச் சொல்லாமலேயே இந்நோயாளரை வேறு  தாதிகளுடன்  சேர்ந்து நோயாளியின் கட்டிலையும் அதனுடன் சேர்ந்த உயிர் காக்கும் உபகரணங்களையும் இழுத்துக் கொண்டு எங்கள் அறைக்கு அழைத்து வந்து விட்டார்.  நோயாளியை அவரது கட்டிலில் இருந்து எமது பரிசோதனை மேடைக்கு மாற்ற முனையும் போது கோபமுடன் எமது அறைக்குள் நுழைந்த மருத்துவத்தாதி  இவருக்கு நீரேற்ற வேண்டும் அல்லவா எனக்குச் சொல்லாமல் எப்படி இங்கு கொண்டு வந்தாய் எனத் துணை வைத்தியரைக் கேட்டார். அவர் அதிதீவிரச் சிகிஸ்சைப் பிரிவுச் சிறப்பு நிலை வைத்தியர் கேட்டுக் கொண்டதற்கிணங்கத் தான் நடந்து கொண்டதாகக் கூறினார். உடனே குறித்த தாதி அதிதீவிரச் சிகிஸ்சைப் பிரிவுச் சிறப்பு நிலை வைத்தியருக்கு  அழைப்பெடுத்து “டியந்தா நீ முன் தயாரிப்பில்லாமல் இந்தப் பரிசோதனையைச் செய்ய ஒத்துக் கொண்டாயா” என்று கேட்டார்

அவர் அதற்கு ஆம் எனப் பதில் அளித்தது மட்டும் அன்றி 5 நிமிடங்களுக்குள் எங்கள் அறைக்கு தனது ஓய்வறையில் இருந்து வந்து விட்டார். வந்ததும் தாதியிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். நோயாளிக்குப் பொறுப்பான மருத்துவத் தாதி நோயாளியினது ஆவணங்களை ஏற்கனவே வாசித்து அவருக்கு CT Scan நிகழ இருப்பதையும் அதற்கு முன்னர் நோயாளிக்கு நீரேற்ற வேண்டும் என்பதையும்  கணித் திருந்தார். ஆயினும்  Scan எப்பொழுது செய்யப்படப் போகிறது என்பது அவருக்கு அறிவிக்கப்படும் வரை அவர் காத்திருந்திருக்கிறார். இவ்விடத்தில் இன்னும் சில விடையங்களையும் கவனியுங்கள்

மருத்துவத்தாதி சிறப்பு நிலை மருத்துவரைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அவர் சிறப்பு நிலை மருத்துவரை நீ என்றே அழைக்கிறார். நீங்கள் என்றும் அழைக்கவில்லை. அப்பதம் இம் மொழியில் பாவனையில் உள்ளது. தாதி இளம் வயதினள். மருத்துவர் தமது ஐம்பதுகளில் இருப்பவர். நானும் எமது சிறப்பு நிலை வைத்தியர்களையோ ஏனைய வைத்தியர்களையோ அய்யா என்றோ கனவானே என்றோ அம்மணி என்றோ அழைப்பதில்லை என்னிலும் இளையவர்களைப் பெயர் சொல்லி அழைப்பேன். தமிழ்க் கலாசாரத்துள் வளர்ந்தபடியால் என்னிலும் முதிய வைத்தியர்களை டொக்டர் என விழிப்பேன் அவர்களோ பெயரைச் சொல்லி, அழை என்பார்கள். முக்கியமான இன்னும் ஒரு விடையமும் இங்குள்ளது. நோயாளர்களை (மிக இளவயதினர் நீங்கலாக) நாங்கள் அய்யா அல்லது அம்மணி என்ற முன் விழியுடன் சேர்த்தே அழைக்க வேண்டும். மேலும் அவர்கள் விரும்புகிற பால் நிலை அடையாளம் ஏதாவது இருப்பின் அதனை இட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வளவும் நடந்து கொண்டிருந்த போது நோயாளி சுயநினைவுடன் இருந்த படியால் நான் அவருக்கு என்ன பரிசோதனை நிகழ உள்ளது என்றும் ஏன் பரிசோதனை தாமதமாகிறது என்றும்  விளங்கப்படுத்திக் கொண்டிந்தேன். ஏனேனில் தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை உணரக் கூடிய ஒவ்வொரு நோயாளிக்கும் அவருக்கு என்ன பரிசோதனை நிகழ இருக்கிறது. ஏன் நிகழ இருக்கிறது எப்படி நிகழ இருக்கிறது அதன் விளைவுகள் என்ன என்பதை  அவரவர் தொழில் சார்ந்து அறிவுறுத்த வேண்டியது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். ஏனைய இரு தாதியர்களும் அவரின் உடல் நிலையைக் கண்காணித்துக் கொண்டிந்தார்கள்.

இந்தப் பரிசோதனையை ஒட்டி வேறுபட்ட தொழிற் பிரிவினைகளைக் கொண்ட மருத்துவச் சேவையாளர்களுக்கு இடையே நிகழ்ந்த தொடர்பாடல் தொழில் பூர்வமானது. சினேக பூர்வமானது. அவரவர் நிலைகளில் உறுதியானது. தவறுகள் நிகழக் கூடாது என்ற அக்கறையில் உருவானது. இவற்றுக்கு அடிப்படையாக இருந்தது நோயாளியின் நலன். சிறப்பு நிலை வைத்தியர்களிடம் நான் சொன்னால் நீ கேள் என்ற எண்ணம் இருக்கவில்லை. தனது பொறுப்பில் இருக்கும் நோயாளிக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளுடன் சிறு நீரகப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்ற அக்கறையில் தன் தலைமை அதிகாரியையே கேள்வி கேட்கும் தைரியத்தை தாதி வெளிப்படுத்தினார். அவரது கோபம் நியாயமானது என்பதை வைத்தியரும் உணர்ந்திருந்தார். சோதனை முடிவில் நோயாளிக்கு குருதிக் குளாய்களில் அடைப்பில்லை என்பது தெளிவானது. சிறப்பு நிலை வைத்தியர், துணை நிலை வைத்தியர், தாதியர் என யாவரும் சேர்ந்து நோயாளியை அவரது கட்டிலுக்கு மாற்றிக் கூட்டிச்சென்றார்கள்.

இச்  சிறு உதாரணத்தில் இருந்து நோயாளர் மையச் சேவை எப்படி நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.  இது ஆரோக்கியமான வைத்திய கலாச்சாரத்தின் குறியீடு. இதனை ஏற்படுத்துவதற்கு மேற்கத்தைய நாடுகள் போலப் பணக்கார நாடுகளாக இருக்க வேண்டிய  தேவை இல்லை. மனிதர்களுக்குள் ஏற்பட வேண்டியது  பண்பு மாற்றம் மட்டுமே. 

என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் பலர் மேற்குலக நாடுகளில் சிறப்பு நிலை வைத்தியர்களாக உள்ளனர். அவர்களும் இத்தகைய நோயாளர் மையக் கலாசாரத்துள் மனிதர்களாக வாழ்ந்து கொண்டு தங்கள் கடமைகளைச் செவ்வனேஆற்றுகிறார்கள்.

சரியான சிந்தனை வழிநடத்தல் இல்லாத போதும் ஒரு Whistleblower ஏற்படுத்திய ஒலியும் அதன்வழி, மக்கள் எழுப்பும் கேள்விகளும் கருத்தழிந்து போகக்கூடாது.

தேவ அபிரா

30-07-2024

 

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More