Home இலங்கை அழிவின் விளிம்பில் கௌதாரிமுனை!

அழிவின் விளிம்பில் கௌதாரிமுனை!

பணிப்பாளரின் ஆசியுடன் சட்டவிரோத மணல் அகழ்வு!

by admin

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளை இலக்கு வைத்து மீண்டும் பாரிய மணல் கொள்ளை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (06.08.24)  ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் போராட்ட அமைப்புக்களது போராட்டத்தையடுத்து கடந்த நான்கு வருடங்களிற்கு மேலாக நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டிருந்த மணல் அகழ்வு தற்போது கனியவள திணைக்கள அதிகாரிகளது பங்கெடுப்புடன் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாள் தோறும் நூற்றுக்கணக்கிலான டிப்பர்கள் கனரக வாகனங்கள் மூலம் மணல் ஏற்றியவாறு வெளியேறிக்கொண்டிருக்கின்றன.

அதனால் கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் ஆகிய இரு கிராமங்களும் அடுத்து வரும் ஒரிரு வருடங்களில் இல்லாது போய்விடுமென அஞ்சுகின்றோம்.

ஏற்கனவே போதிய போக்குவரத்து, வீதி வசதிகளற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ள எமது மக்கள் தற்போதை கனரக வாகன பயன்பாட்டால் முற்றாக பரமன்கிராய் மற்றும் கௌதாரிமுனை பகுதிகளிலிருந்து வெளியிடங்களிற்கான போக்குவரத்து முடக்கத்திற்குள்ளாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கௌதாரிமுனை வீதியை வழிமறித்து போக்குவரத்திற்கு தடையேற்படுத்தியுள்ள மணலை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய கனியவளத்திணைக்களம் அனுமதிக்காமையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கனிய வளத் திணைக்கள யாழ்ப்பாண அலுவலக பணிப்பாளர் தனது பெயர் பலகையற்ற வாகனத்தில் இரவு பகலாக அப்பகுதிகளில் நின்று மணல் அகழ்வினை முன்னெடுக்கும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கின்றது.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் மணல் கொள்ளையை தலைமை தாங்கிய நபரே தற்போது வடக்கிற்கு பணிப்பாளராக அனுப்பட்டுள்ளதால் பரமன்கிராய் மற்றும் கௌதாரிமுனை கிராமங்கள் இல்லாதொழிந்து போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இலங்கை கனிய வளத்திணைக்களத்தினால் பூநகரியின் பொன்னாவெளி பகுதியில் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்ட முருகைகல் அகழ்விற்கு எதிரான மக்கள் போராட்டம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பாரிய மணல் அகழ்விற்கென வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டு மக்களது கிராமங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

தவறுமிடத்து பூநகரி பொன்னாவெளியில் இதே கனியவளத்திணைக்கள பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்படவிருந்த பாரிய முருகைக்கல் அகழ்வு எவ்வாறு தடுக்கப்பட்டதோ அதே போன்று மக்கள் வீதிகளில் களமிறங்கி பாரிய போராட்டத்தின் மூலம் அரச அலுவலகங்களை முடக்கி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதனை வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

அத்துடன் ஒட்டுமொத்த மக்கள் போராட்ட குழு அழைப்பின் பேரில் எதிர்வரும் 9ம் திகதியினுள் வழங்கப்பட்ட பெமிட் அனுமதிகள் இரத்துச்செய்யப்படாவிட்டால் கிளிநொச்சி மாவட்டம் தழுவிய போராட்ட நடவடிக்கைகளிற்கு எமது உறவுகளிற்கு பகிரங்க அழைப்புவிடுக்கின்றோம்.

ஏற்கனவே பொன்னவெளியில் இணைந்து போராடிய உறவுகள் எம்முடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

01.ஜனாதிபதி தேர்தலை ஒட்டு மொத்த மக்களும் புறக்கணிப்போம்.

02.கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் காற்றாலை பணிகளை முடக்க போராட்டங்களை ஆரம்பிப்போம்.

03.மக்கள் பயணிக்க கௌதாரிமுனை வீதியை திருத்தி தர இயலாத வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் மணல் எடுத்துச்செல்ல வீதியை அனுமதித்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

03.கனிய வளத்திணைக்கள வடமாகாண பணிப்பாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்படாதவிடத்து மாவட்ட செயலகம் மற்றும் பூநகரி பிரதேசசெயலக அலுவலக முற்றுகைப்போராட்டத்தை முன்னெடுப்போம். அவரது யாழ்ப்பாணத்திலுள்ள ஆடம்பர பங்களா முன்னதாகவும் முற்றுகை போராட்டத்தை முன்னெடுப்போம்.

ஆதானி காற்றாலை மூலம் எமது பகுதிக்கு பாலும் தேனும் ஓடப்போவதாக சொல்லிக்கொண்டு எமது கிராமங்களையே இல்லாதொழிக்கும் மண் மாபியாக்களின் பின்னணியிலுள்ள அரசியல் தரப்பினையும் நாம் அறிந்துள்ளோம்.

அத்தகைய தரப்பினை எமது போராட்டத்தின் மூலம் விரைவில் அம்பலப்படுத்துவோமென்பதையும் அறியத்தருகின்றோம் என தெரிவித்தனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More