பங்களாதேஷில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பதவி விலகியுள்ளார்.
பங்களாதேஷில் தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிபதிகள் பதவி விலகுவதற்கு ஒரு மணி நேர காலவகாசம் வழங்குவதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.
மேலும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன், பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சஹாபுதீனுடன் கலந்துரையாடியதான் பின்னர் பதவி விலகியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார்.
பல வாரங்களாக மாணவர்கள் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களால், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவிற்கு சென்றார்.
இதன்பின்னர்,அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்புகளில் 30 வீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சம் காணப்படுவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் முதலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னர் மோதல் வன்முறையாக மாறியது.