பிரிட்டனில் வேலை கிடைக்க உதவும் என்று மாணவர்களை நம்பவைத்து, அவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை வசூலித்துப்பின், அவர்களுக்குப் ‘பயனற்ற விசா ஆவணங்களை’ பெற்றுத்தந்து ஏமாற்றியுள்ளது உலகம் முழுவதும் செயல்படும் ஒரு நெட்வொர்க்.
ஆட்சேர்ப்பு முகவர்களாகச் செயல்படும் இடைத்தரகர்கள், சுகாதாரம் சார்ந்த துறையில் வேலை தேடும் சர்வதேச மாணவர்களைக் குறிவைப்பதாக பிபிசி விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்களுக்காக மாணவர்கள் தலா 17,000 பவுண்டுகள் வரை கொடுத்துள்ளனர். பார்க்கப்போனால் இந்தச் சான்றிதழ்கள் இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும்.
திறன்சார் தொழிலாளர் விசாவிற்கு அவர்கள் விண்ணப்பித்தபோது ஆவணங்கள் செல்லாது என்று கூறி, உள்துறை அமைச்சகத்தால் அவை நிராகரிக்கப்பட்டன.
தைமூர் ராஸா என்ற ஒரு நபர் 141 விசா ஆவணங்களை விற்றுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை எந்த மதிப்பும் இல்லாதவை. அவர் மொத்தம் 12 லட்சம் பவுண்டுகளுக்கு இந்த விசா ஆவணங்கள் விற்றதைக் காட்டும் கோப்புகளை பிபிசி பார்த்தது.
தான் எந்தத்தவறும் செய்யவில்லை என்று கூறும் அவர், அதில் ஒருபகுதித் தொகையை மாணவர்களிடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.
ராஸா வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் அலுவலகங்களை வாடகைக்கு எடுத்து, பணியாளர்களைப் பணியமர்த்தினார். டஜன் கணக்கான மாணவர்களுக்குப் பராமரிப்பு இல்லங்களில் வேலை மற்றும் வேலைவாய்ப்பு ஸ்பான்சர்ஷிப் போன்றவற்றைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
தான் முதலில் முறையான ஆவணங்களை விற்கத் தொடங்கியதாகவும், சில மாணவர்களுக்கு விசாக்கள் மற்றும் உண்மையான வேலைகள் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் பயனற்ற காகிதங்களுக்காகப் பலர் தங்கள் முழு சேமிப்பையும் இழந்திருக்கின்றனர்.
தைமூர் ராஸா பயனற்ற ஆவணங்களை நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு விற்றதாக பிபிசி கண்டறிந்துள்ளது
‘நான் இங்கே சிக்கிக் கொண்டிருக்கிறேன்’
பணி விசா பெற முயன்று ஆயிரக்கணக்கான பவுண்டுகளை இழந்த 17 ஆண்கள் மற்றும் பெண்களிடம் பிபிசி பேசியது.
இதில் மூன்று பேர் சுமார் 20 வயதுகளில் இருக்கும் பெண்கள். இவர்கள் வெவ்வேறு முகவர்களிடம் மொத்தம் 38,000 பவுண்டுகள் கொடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் பெரும் செல்வம் ஈட்டலாம் என்ற கனவு, தங்கள் சொந்த நாடான இந்தியாவில் தங்கள் மனதில் விதைக்கப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் இப்போது கையில் பணம் இல்லாமல் தவிப்பதாகவும், வீட்டில் சொல்ல பயப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
“நான் இங்கே [இங்கிலாந்தில்] சிக்கிக்கொண்டிருக்கிறேன்,” என்று நிலா* பிபிசியிடம் கூறினார்.
“நான் திரும்பிச்சென்றால் என் குடும்பத்தின் முழு சேமிப்பும் வீணாகிவிடும்,” என்றார் அவர்.
பராமரிப்பு இல்லங்கள் மற்றும் ஏஜென்சிகளை உள்ளடக்கிய பிரிட்டனின் சுகாதாரப் பராமரிப்புச் சேவைத்துறையில், 2022-இல் 1.65 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
சர்வதேச விண்ணப்பங்களை அனுமதிப்பதன் மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை பிரிட்டன் அரசு விரிவுபடுத்தியது. இந்தியா, நைஜீரியா, மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இந்த வேலைகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்க இது வழிவகுத்தது.
விண்ணப்பதாரர்களுக்கு, பதிவுசெய்யப்பட்ட பராமரிப்பு இல்லம் அல்லது ஏஜென்சி போன்ற தகுதிவாய்ந்த ஸ்பான்சர் இருக்க வேண்டும். மேலும் வேலை தேடுபவர்கள் தங்கள் ஸ்பான்சர்ஷிப்பிற்காக பணம் செலுத்தவும் தேவை இல்லை.
திடீரென்று திறந்த இந்தப்பாதையைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள், முழுநேர வேலை செய்ய விரும்பும் மாணவர்களை ஏமாற்றத்தொடங்கினார்கள்.
இருப்பினும் நாங்கள் பேசிய பெரும்பாலான மாணவர்கள் சட்டப்பூர்வமாக பிரிட்டனில் தங்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை இப்போது எதிர்கொண்டுள்ளனர்.
குறிவைக்கப்பட்ட பெண்களில் பலருக்கு இளம் குழந்தைகள் உள்ளனர்.
ப்ளாக் செய்யப்பட்ட பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண்
இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான நாதியா*, 2021-இல் கணினியியல் இளங்கலைப் படிப்பை முடிக்கக் கல்வி விசாவில் பிரிட்டன் வந்தார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு, ஆண்டிற்கு 22,000 பவுண்டுகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதை காட்டிலும் படிப்பை கைவிட்டு வேலை தேடுவது நல்லது என்று அவர் முடிவு செய்தார்.
ஒரு நண்பர் அவரிடம் ஒரு முகவரின் எண்ணைக் கொடுத்தார். 10,000 பவுண்டுகள் கொடுத்தால் சுகாதாரப் பராமரிப்பு சேவைப் பணிக்குத் தேவையான சரியான ஆவணங்களை அளிப்பதாக அந்த முகவர் நாதியாவிடம் சொன்னார்.
முகவர் தன்னிடம் நட்பாகப் பழகியதாகவும், ‘உங்களைப் பார்க்கும்போது என்னுடைய உறவினர் ஒருவர் நினைவுக்கு வருவதாக’ அந்த ஏஜெண்ட் தன்னிடம் கூறியதாகவும் நாதியா கூறுகிறார்.
“நீங்கள் என் சகோதரியைப் போல இருப்பதால் நான் உங்களிடம் நிறைய பணம் கேட்க மாட்டேன் என்று அவர் என்னிடம் கூறினார்,” என்று வால்வர்ஹாம்டனில் வசிக்கும் நாதியா தெரிவித்தார்.
அவருக்கு 8,000 பவுண்டுகள் முன்பணம் செலுத்தி ஆவணத்திற்காக ஆறு மாதங்கள் காத்திருந்தார். வால்சாலில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் அவருக்கு வேலை கிடைத்திருப்பதாக அந்த ஆவணம் தெரிவித்தது.
“நான் கேர் ஹோமை நேரடியாக அழைத்து என் விசாவைப் பற்றிக் கேட்டேன். ஆனால் தங்களிடம் ஏற்கனவே முழு எண்ணிக்கையில் பணியாளர்கள் இருப்பதால் எந்த ஸ்பான்சர்ஷிப் சான்றிதழையும் தாங்கள் வழங்கவில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்,” என்கிறார் நாதியா.
அதன் பிறகு அந்த முகவர், நாடியாவின் அழைப்புகளை ‘ப்ளாக்’ செய்துவிட்டார். காவல்துறையிடம் செல்லும்படி அவரிடம் சொல்லப்பட்டது. ஆனால் தான் மிகவும் பயந்துபோனதாக அவர் பிபிசியிடம் கூறினார்.
பர்மிங்ஹாமில் வசிக்கும் நிலா, ‘பிரிட்டன் வாழ்க்கையில் முதலீடு செய்தால் திறமைகள் மேம்படும்’ என்றும், ‘இந்தியாவை விட அதிகமாகச் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும்’ என்றும் தனது குடும்பத்தினர் நம்புவதாகக் கூறினார்.
“என் மாமனார் ராணுவத்தில் இருந்தார். அவர் தனது எல்லா சேமிப்பையும் எனக்குக் கொடுத்தார்,” என்று அவர் கூறுகிறார். தனது கல்வி விசாவைப் பராமரிப்புப் பணியாளர் விசாவாக மாற்றும் பொருட்டு வால்வர்ஹாம்ப்டனில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்திற்கு சென்றார் நிலா. அங்கு முகவர்கள் மிகவும் கண்ணியமாக இருந்ததாகவும், தங்கள் உண்மைத் தன்மையை நிரூபிக்க மின்னஞ்சல்கள், கடிதங்கள், மற்றும் விசாக்களின் நகல்களைக் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் தங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றப் போகிறார்கள் என்று நிலாவும் மற்ற மாணவர்களும் முழுமையாக நம்பினர்.
“அவர்கள் எங்களை முதன்முறையாகச் சந்தித்த போது கடவுளைப்பார்த்தது போல இருந்தது. அப்படித்தான் அவர்கள் எங்களை மயக்கி நம்பவைத்தார்கள்,” என்று அவர் கூறினார்.
அவர் தனது படிப்பிற்காக ஏற்கனவே குடும்ப பணத்தில் இருந்து 15,000 புவுண்டுகளை செலவழித்திருந்தார். அது தவிர, பயனற்றதாக மாறிய, உள்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்ட ஆவணங்களுக்காக அவர் 15,000 பவுண்டுகள் செலுத்தினார்.
தன் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று நிலா குறிப்பிட்டார்.
“மோசடி செய்பவர்கள் இன்னும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பயமும் இல்லை,” என்று அவர் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கான பவுண்டுகளை இழந்த 86 மாணவர்கள்
வோல்வர்ஹாம்டனில் வசிக்கும், பர்மிங்ஹாமில் பணிபுரியும் பாகிஸ்தானியரான தைமூர் ராஸா, மோசடி விசா வலையமைப்பின் முக்கிய முகங்களில் ஒருவர் என்று பிபிசி கண்டறிந்தது.
அவர் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, பராமரிப்பு இல்லங்களுக்குப் பணியாளர்களை ஏற்பாடு செய்வதாகவும், தன் வாடிக்கையாளர்களுக்கு விசா பெறுவதில் உதவி செய்வதாகவும் சொன்னார்.
தைமூர் ராஸா, 141 விண்ணப்பதாரர்களுக்காக ஏஜென்சிக்கு வழங்கிய ஸ்பான்சர்ஷிப் ஆவணங்கள் நிறைந்த கோப்பை பிபிசி பார்த்தது.
ஒவ்வொரு நபரும் 10,000 முதல் 20,000 புவுண்டுகள் வரை செலுத்தியுள்ளனர். இதன் மொத்தத் தொகை 12 லட்சம் பவுண்டுகள்.
இந்த ஸ்பான்சர்ஷிப் ஆவணங்களை வாட்ஸ்அப்பில் PDF கோப்புகளாக ராஸா அனுப்பியதை நாங்கள் உறுதி செய்தோம்.
அவற்றில் 86 பேருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் பயனற்றவை எனக் கண்டறியப்பட்டு அவை செல்லாதவை என உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது.
இவர்களில் 55 பேர் விசா பெற்றனர். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறப்பட்டப் பராமரிப்பு இல்லங்கள், இந்த ஏற்பாடு பற்றிய எந்தப் பதிவும் தங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டன.
2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து பாகிஸ்தானில் இருக்கும் தைமூர் ராஸாவை பிபிசி தொடர்பு கொண்டு இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி அவரிடம் கேட்டது.
மாணவர்களின் கூற்றுகள் ‘தவறானவை’ மற்றும் ‘ஒருதலைப்பட்சமானவை’ என்று பதிலளித்த அவர், தனது வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறினார்.
நேர்காணலுக்கான எங்கள் கோரிக்கைக்கு அவர் பதிலளிக்கவில்லை.
‘கேர் வொர்க்கர்’ எனப்படும் உதவி தேவைப்படும் நபர்களை பார்த்துக்கொள்ளும் பணிக்கான விசாவிற்காக 16,000 பவுண்டுகள் செலுத்திய பிறகு ராஸா, தன்னை அவரிடம் பணியமர்த்திக் கொண்டதாக மாணவர் அஜய் திண்ட் தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு 500–700 பவுண்டுகள் வரை ஊதியம் பெறும் ஆறு பேரில் இவரும் ஒருவர். விண்ணப்பதாரர்களுக்கான ஆவணங்களை ஒன்றுதிரட்டி, அவர்களின் படிவங்களை நிரப்புவதில் உதவி செய்வது இவர்களின் வேலை.
ராஸா அலுவலகங்களை வாடகைக்கு எடுத்ததாகவும், எல்லா செலவுகளையும் தானே செய்து தன் குழுவை துபாய்க்கு அழைத்துச் சென்றதாகவும் அஜய் திண்ட் கூறினார்.
விண்ணப்பங்கள் உள்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்படுவதை கவனித்தபோது 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. அவர்களில் சிலர் அவரது நண்பர்கள். அவர்கள் மொத்தம் 40,000 பவுண்டுகளை செலுத்தியிருந்தனர்.
“நான் ராஸாவிடம் இது பற்றிக்கேட்டேன். அவர் என்னிடம், ‘நீங்கள் டென்ஷன் ஆகாதீர்கள். நான் இதனைச் சமாளித்துக்கொள்கிறேன்’ என்று சொன்னார்.
“எனக்குப் பணம் தேவை என்பதால் நான் வேலையை விடவில்லை. நான் அந்த மோசமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டேன்,” என்று அஜய் குறிப்பிட்டார். தனது முதலாளி பல ஏஜென்சிகளுடன் வேலை செய்ததாகவும், அதனால், மோசடி செய்யப்பட்டத் தொகை 12 லட்சம் பவுண்டுகளை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளவில்லை. “உள்துறை அலுவலகம் பற்றியும் புகாரளிப்பதன் விளைவுகளைப் பற்றியும் பயப்படுவதால் பலர் காவல்துறையிடம் செல்வதில்லை,” என்று வேலை உரிமை மையத்தின் குடியேற்ற பிரிவுத் தலைவர் லூக் பைபர் குறிப்பிட்டார்.
மேற்கு மிட்லாண்ட்ஸில் ஸ்மெத்விக்கில் உள்ள குருத்வாரா பாபா சங் ஜியிடம் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கோரினர். வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய முகவர்களுக்கு எதிராக அந்த குருத்வாராவின் உறுப்பினர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். சிலருடைய பணத்தைத் திரும்பப் பெற்றுத்தருவதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
இந்தக் குருத்துவாராவின் முக்கிய நபர்கள் 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராஸாவிடம் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார்கள். அப்போது அவர் பணத்தைத் திருப்பித் தரவும், தனது நடவடிக்கைகளை நிறுத்தவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கோவிட் பெருந்த்தொற்று காலகட்டத்தின் போது மக்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட குருத்வாராவின் சீக்கிய ஆலோசனை மையம், ஏஜென்சியின் ஊழியர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி ஹர்மன்ப்ரீத் என்ற இளம் தாய்க்குப் பணம் திரும்ப கிடைக்க உதவியது.
பணம் பறிபோன துன்பத்தால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக ஹர்மன்ப்ரீத் தெரிவித்தார்.
“தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். என்னுடைய மகள் மற்றும் சீக்கிய ஆலோசனை மையம் காரணமாகவே இப்போது என் வாழ்க்கையை மீண்டும் துவங்கியுள்ளேன்,” என்றார் அவர்.
நூற்றுக்கணக்கான மக்கள் உதவிக்காக தங்களைத் தொடர்பு கொண்டதாக மையத்தை சேர்ந்த மாண்டி சிங் கூறினார்.
அவரும் அவரது குழுவும் 2022-இல் சமூக ஊடகங்களில் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்தும் நடவடிக்கையைத் துவக்கினர். மோசடி செய்பவர்களைப் பெயரிட்டு அவமானப்படுத்தும் நடவடிக்கையானது, ’அவர்களை நம்ப வேண்டாம்’ என்று மக்களை எச்சரிக்கும் என்று அவர்கள் கருதினர்.
இந்தப் பதிவுகளைப் பார்த்த பிறகு மேலும் பலர் தொடர்பு கொண்டனர். மோசடி செய்வோர் பட்டியலில் கூடுதல் பெயர்கள் சேர்ந்தன.
“இதில் சிறிய டீம் லீடர்கள், ஏஜெண்ட்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களில் சிலருக்கு கமிஷன் கிடைக்கலாம். சில சிறிய முகவர்கள் சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள். இதில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைக் அவர்கள் கண்டனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ராஸா, 2,58,000 பவுண்டுகளைத் திருப்பிக் கொடுத்தார். ஆனால் ஆலோசனை மையம் இப்போது இந்த விவகாரத்தை தேசியக் குற்றவியல் ஏஜென்சியிடம் ஒப்படைத்துள்ளது என்றார் மாண்டி சிங்.
தங்கள் குடும்பங்களுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டதால் மற்ற முகவர்களும் பணத்தைத் திருப்பிக் கொடுத்தனர்.
“ஒருவருக்கு வாழ்க்கையில் குடும்ப மரியாதைதான் எல்லாமே. நாங்கள் அடையாளம் கண்டு, விசாரித்து, எல்லா ஆதாரங்களையும் பார்க்கிறோம்,” என்று மாண்டி கூறினார்.
“எங்களுக்கு எல்லா ஆதாரங்களும் கிடைத்தபிறகு நாங்கள் மோசடிக்காரரின் குடும்பத்தினருடன் பேசுகிறோம். அதனால் குடும்பத்திற்கு ஏற்படும் அவமானத்தை எடுத்துச்சொல்கிறோம். அவர்கள் பாதிக்கப்பட்டவருக்குப் பணத்தை திருப்பிக்கொடுத்து குடும்பப் மரியாதையைக் காப்பாற்ற விரும்புகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகரிக்கும் விசா விண்ணப்பங்கள்
பிரிட்டனின் வேலை விசாவைப் பெறுவதற்கான மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மற்றும் 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதங்களுக்கு இடையில் விண்ணப்பங்களின் என்ணிக்கை 26,000 ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில் வெறும் 3,966 விண்ணப்பங்களே பதிவாகியிருந்தன.
சர்வதேச மாணவர்கள் படிப்பை முடிக்கும் முன் பணி விசா பெறுவதைத் தடுக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசா விதிகளில் திருத்தம் செய்தது.
ஆனால், போலீஸ் மற்றும் குடியேற்ற அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கை மட்டுமே சட்டவிரோத விசா வர்த்தகத்தை நிறுத்தும் என்று சீக்கிய ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.
அரசு, சமயத் தலைவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் மாண்டியுடன் பணியாற்றும் ஜஸ் கெளர்.
“நீங்கள் அடிமட்ட நிலையில் உள்ளவர்களுடன் பேசவில்லை என்றால், உண்மையில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது,” என்று அவர் கூறுகிறார்.
“மோசடி விசா விண்ணப்பங்களைக் கண்டறிந்து தடுக்கக் கடுமையான அமைப்பு முறைகள் உள்ளன. மேலும் இந்த மோசடி செய்பவர்களால் குறிவைக்கப்படும் எவரும், அவர்களது ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் உண்மையானதாக இல்லாவிட்டால், அது செல்லாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்,” என்று உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“வெளிநாட்டு ஊழியர்களைச் சுரண்டவோ, மோசடி செய்யவோ முயற்சிக்கும் மோசடி நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மீது நாங்கள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்போம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தின் பழிவாங்கும் பயம் இல்லாமல் பாதுகாப்பாகப் புகார் அளிப்பதற்கானக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வேலை உரிமை மையத்தின் லூக் பைபர் கூறுகிறார்.
பிரிட்டனில் வாழும் கனவு
பயனற்ற விசா ஆவணங்களுக்காக முகவர்களிடம் பணம் செலுத்திப் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.
“நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் இருந்து கேள்விப்படுவதால், இது மிகப் பெரிய அளவில் நடக்கிறது என்பது தெளிவாகிறது,” என்று பைபர் கூறினார்.
ஸ்மெத்விக்வில் உள்ள சீக்கிய ஆலோசனை மையம் மற்ற குருத்வாராக்களுக்கும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்புகிறது. மேலும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் படிக்கவோ வேலை செய்யவோ சொல்பவர்கள் சந்திக்க நேரும் ஆபத்துகள் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கும் பணியையும் இந்த மையம் துவக்கியுள்ளது.
“சிலரின் வெற்றிக் கதைகள் அனைவருக்கும் நடக்கும் என்று சொல்லமுடியாது என்ற யதார்த்தத்தை நாங்கள் மக்களுக்கு விளக்குகிறோம்,” என்று மாண்டி சிங் கூறினார்.
“பிரிட்டன் அல்லது அமெரிக்கா செல்லும் கனவை நனவாக்குவதே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்ற எண்ணத்தை அகற்றுவதும் எங்கள் வழிகாட்டலின் ஒரு பகுதி,” என்றார் அவர்.
*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
- ஏமி ஜான்ஸ்டன்
- பதவி,பிபிசி மிட்லேண்ட்ஸ் இன்வெஸ்டிகேஷன்ஸ்.