165
ரிக் ரொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவரது வாட்ஸ் அப் இலக்கத்திற்கு அழகிய பெண்ணொருவரின் ரிக் ரொக் வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. வீடியோக்களை பார்த்து, வீடியோக்கள் வரும் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை பேணி உள்ளார்.
அந்த இலக்கத்தில் இருந்து கதைத்த பெண்ணும் தனக்கு 22 வயது , தான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என கூறி பழக ஆரம்பித்து பழக்கம் , நெருங்கிய தொடர்பாக மாற பல்வேறு கட்டங்களில் , பல்வேறு காரணங்களை கூறி சுமார் 45 இலட்சத்துக்கும் மேலாக பணம் பெற்றுள்ளார்.
பெண்ணிடம் வீடியோ கோல் கதைக்க பல முறை சுவிஸ் நாட்டவர் முயற்சித்த போதிலும் , அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் , அண்மையில் யாழ்ப்பாணம் சென்றவர் , பெண்ணை நேரில் சந்திக்க கோரிய போதிலும் அப்பெண் நேரில் சந்திக்க மறுப்பு தெரிவித்து , தொடர்பை துண்டிக்க , சந்தேகம் அடைந்தவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , ரிக் ரொக் வீடியோவில் காணப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரணை செய்த போது , அப்பெண்ணுக்கு இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது
அதனை தொடர்ந்து சுவிஸ் நாட்டில் இருந்து பணம் போடப்பட்ட வங்கி கணக்கு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து , கணக்கிலக்கத்திற்கு சொந்தமான பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , தனக்கு தெரிந்த அன்ரி தான் எனது கணக்கு இலக்கத்திற்கு பணம் போட சொல்லி , பணம் போடப்பட்டது என கூறியுள்ளார்.
அந்த பெண் கூறிய அன்ரியான பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை ,
குறித்த 47 வயது பெண்ணுக்கும் , சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருக்கு இடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த முறை யாழ்ப்பாணம் சென்று அப்பெண்ணுடன் நெருக்கமாகவும் பழகியுள்ளார்.
பின்னர் அவர் சுவிஸ் நாட்டிற்கு சென்ற பின்னர் , இப் பெண்ணுடனான தொடர்பை குறைத்துள்ளார். இந்நிலையில் அவரின் பலவீனங்களை அறிந்திருந்த குறித்த பெண் , தனது நண்பியின் பெயரில் உள்ள ரிக் ரொக் ஐடியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அழகிய பெண்ணொருவர் இருப்பதனை அவதானித்து , அப்பெண்ணின் வீடியோக்களை தரவிறக்கி , இவருக்கு வாட்ஸ் அப் ஊடாக அனுப்பி , அப்பெண்ணின் பெயரில் உறவை வளர்த்துள்ளனர்.
பணம் போட சொல்லி கொடுக்கப்பட்ட வங்கி கணக்கிலக்கத்தில் உள்ள பெயரும் , ரிக் ரொக் வீடியோவிலும் உள்ள பெயரும் ஒன்றாக இருந்ததமையால் , அவரும் சந்தேக படாது பணத்தினை அந்த கணக்கு இலக்கத்திற்கு போட்டுள்ளார்.
பணத்தினை தொடர்ந்து ஒரு கணக்கு இலக்கத்திற்கு பெறாது , மற்றுமொரு பெண்ணின் கணக்கு இலக்கத்தினையும் கொடுத்து . அந்த பெண்ணின் கணக்கு இலக்கம் ஊடாகவும் பணத்தினை பெற்றுள்ளனர் என்பது விசாரணைகள் ஊடாக காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அதனை அடுத்து பிரதான சந்தேக நபரான 47 வயதான பெண்ணும் , வங்கி கணக்கு இலக்கத்தின் உரிமையாளர்களான இரு பெண்களுமாக மூன்று பெண்களையும் கைது செய்து, மேலதிக விசாரணைகளின் பின்னர் , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை முற்படுத்தியவேளை , மூவரும் தம் மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டதுடன் , பணத்தினையும் மீள வழங்குவதாக மன்றில் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மூவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
Spread the love