கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடா்பான தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு மீண்டும் டிசம்பர் 12 திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கு நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் அந்த அலுவலகத்தின் சட்டத்தரணிகளும் , சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி V.S.நிரஞ்சன் ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,
”இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுவரை காலமும் மனித புதைகளில் இருந்தும் எடுக்கப்பட்ட மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
மேலும் இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் குறித்த வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி தவணையிடப்படுள்ளது.” எனத் தொிவித்தாா்.