193
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சர்வமத நிகழ்வுடன் கொண்டாடப்படவுள்ளது.
பொன் அகவை நிறைவு நாளான அன்று பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து மாமன்றம், பௌத்த சகோதரத்துவ சமூகம், கத்தோலிக்க மாணவர் மன்றம் மற்றும் முஸ்லீம் மஜ்லிஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு மதப் பிரார்த்தனைகள் இடம்பெற்று, கைலாசபதி கலையரங்கத்தில் கூட்டு மத நிகழ்வு இடம்பெறவிருக்கிறது.
அன்றைய தினம் காலை 06 மணிக்கு இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிடேகமும், விசேட பூஜை, சிறப்பு வழிபாடுகளும், பௌத்த சகோதரத்துவ சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஶ்ரீ நாகவிகாரை சர்வதேச மத்திய நிலையத்தில் பௌத்த மதப் பிரார்த்தனைகளும், காலை 06 மணிக்கு கத்தோலிக்க மாணவர் மன்ற ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக நல்லாயன் நிலையத்தில் விசேட ஆராதனைகளும், பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள இஸ்லாமியத் தொழுகை நிலையத்தில் இஸ்லாமிய மதப் பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவாயில் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. தொடந்து பலகலைக்கழக நலச்சேவைகள் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள சர்வமத நிகழ்வுகள் கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 அக்டோபர் 06ஆம் திகதி இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் பொன் விழா நிகழ்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இடம்பெற்று வருகின்றன. பொன்விழாவையொட்டி பல்கலைக்கழகத்தினால் ஆண்வு மாநாடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் என்பன ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் ஒரு அங்கமாக ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடும், முத்தமிழ் விழாவும் எதிர்வரும் 07 ஆம், 08 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
Spread the love