பிபிசி தமிழ்ச்சேவை கடந்த 7 ஆம் தேதி ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரை வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள உள்ள அரசியல்வாதிகளையும் பொது மக்களையும் நேர்கண்டு எழுதப்பட்டுள்ளது.அதில் தேசியம்,சமஸ்டி, 13 ஆவது திருத்தம் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.அதில் நேர்காணப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அதுதொடர்பாக முழுமையான விளக்கம் இருக்கவில்லை.
அதுபோலவே சுமந்திரனின் பிரச்சாரக் காணொளி ஒன்றில் அவர் தேசியம் என்றால் என்ன என்று கேட்கிறார். அந்த வார்த்தையை பயன்படுத்தும் பலருக்கு அதன் அர்த்தம் தெரியாது என்ற பொருள்பட கருத்துரைக்கிறார்.மேலும் அவருடைய பிரச்சார காணொளிகளில் அவர் “அறிவார்த்த தமிழ் தேசியத்தின் குரல்” என்று அழைக்கப்படுகிறார். அறிவார்ந்த தமிழ்த் தேசியம் என்றால் என்ன?
அதுபோலவே மான் சின்னத்தின் கீழ் போட்டியிடும் மணிவண்ணன் “நவீன தமிழ்த் தேசியம்” என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். நவீன தமிழ் தேசியம் என்றால் என்ன?
சுமந்திரன் அந்தக் காணொளியில் கேட்பதுபோல,பிபிசி தமிழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல,தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு வாக்காளப் பெருமக்களுக்கு மட்டுமல்ல பல வேட்பாளர்களுக்கே பதில் தெரியாது. ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஒரு கருநிலை அரசை நிர்வகித்து அது தோற்கடிக்கப்பட்ட கடந்த 15 ஆண்டுகளின் பின்னரும் தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு நிலைமைதான் காணப்படுகின்றதா? தமிழ் அரசியல்வாதிகள் எத்தனை பேர் இந்த கேள்விக்கு பொருத்தமான விடையைக் கூறுவார்கள்? அவர்களுக்கு பொருத்தமான விடை தெரிந்திருந்தால் தமிழரசியல் இப்போதுள்ள சீரழிவான நிலைக்கு வந்திருக்காது.
எனவே முதலில் நாங்கள் ஒரு தெளிவிற்கு வருவோம்.தேசம், தேசியம் என்றால் என்ன என்பதனை சுருக்கமாகப் பார்க்கலாம்.தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள்.ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் தேசமாக வனைகின்றன. முதலாவது பாரம்பரிய தாயகம் அல்லது நிலம். இரண்டாவது இனம் அல்லது சனம். மூன்றாவது பொதுவான மொழி.நாலாவது பொதுவான பண்பாடு. ஐந்தாவது பொதுவான பொருளாதாரம். இந்த ஐந்தையும் விட ஆறாவதாக ஒரு விடயமும் உண்டு. அதுதான் அடக்குமுறை. ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய அடையாளங்களை அழிக்கும் நோக்கத்தோடு கட்டமைக்கப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளும் ஒரு மக்கள் கூட்டத்தை தற்காப்பு உணர்வோடு தேசமாகத் திரட்டுகின்றன.
எனவே இப்பொழுது தெளிவான ஒரு முடிவுக்கு வரலாம். தேசியவாத அரசியல் என்பது அல்லது தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதுந்தான்.அதாவது அதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், ஒரு மக்கள் கூட்டத்தை உருகிப் பிணைந்த பெருந் திரளாகத் திரட்டுவது.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு கட்சியாவது மக்களைத் தேசமாகத் திரட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறதா? இல்லை.இதற்கு முதற்பொறுப்பு தமிழரசுக் கட்சிதான். ஏனெனில் உள்ளதில் பெரிய கட்சி அது. வடக்கு கிழக்காக ஒப்பீட்டளவில் பரந்த கட்டமைப்பை கொண்டிருக்கும் கட்சி.கடந்த15 ஆண்டுகளாக தமிழ் மிதவாத அரசியலின் பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த கட்சி. எனவே கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதற்கு அக்கட்சி தான் முதல் பொறுப்பு.தமிழ்த் தேசிய வரலாற்றில் உருவாகிய,பெரிய கூட்டாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிதைவதற்கு காரணம்,தமிழரசுக் கட்சிதான்.கூட்டமைப்பிலிருந்து பங்காளிகளை படிப்படியாக அகற்றும் ஒரு போக்கின் விளைவாக இப்பொழுது தமிழரசு கட்சி தானும் இரண்டாகி,பலவாகி நிற்கிறது.
அடுத்தது,தமிழ்த் தேசிய முன்னணி. தேசியவாத அரசியல் என்பதனை தூய்மை வாதமாக சித்திரித்து,தனது அரசியல் எதிரிகளை துரோகிகள்,காட்டிக் கொடுப்பவர்கள்,இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று முத்திரை குத்துவதன்மூலம் அந்தக் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக தேசத்தை திரட்டத் தவறிவிட்டது. சிறிய கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்துவது;போலீசாரோடு,புலனாய்வுத் துறையோடு மோதுவது;விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களைத் தத்தெடுப்பது;போன்றவற்றின்மூலம் அக்கட்சி தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் கட்டமைக்கப் பார்க்கின்றது.
தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் காட்டிக் கொள்வதே அடிப்படைத் தவறு.ஆயுதப் போராட்டம் வேறு,மிதவாத அரசியல் வேறு.இரண்டாவது தவறு,தங்களைப் புனிதர்களாக காட்டுவதற்காக தமது அரசியல் எதிரிகளை சாத்தான்களாக துரோகிகளாக சித்தரிப்பது. மற்றவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் யாரும் தங்களை தியாகிகள் ஆக்கிவிட முடியாது. மாறாக, முன்னுதாரணம் மிக்க தியாகங்களைச் செய்வதன் மூலம் தான் யாரும் தங்களைத் தியாகிகள் ஆக்கலாம்.
அரசியல் களத்தை தியாகி எதிர் துரோகி என்று பிரிப்பது தேசத்தை திரட்டுவதற்கு உதவாது.தேசம் என்பது ஒரு சமூகத்தின் பலம் பலவீனம் எல்லாவற்றினதும் திரட்சி தான்.நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லாருடையதும் திரட்சி தான்.முன்னணியின் கடந்த 15 ஆண்டுகால அரசியல் என்பது தேசத்தைத் திரட்டுவது அல்ல.தேசத்தை சிதறடிப்பதுதான்.அதன் விளைவாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அக்கட்சிக்குள்ளே உடைவு ஏற்பட்டது.தமிழரசுக் கட்சியைப் போலவே அவர்களும் தோல்விகளில் இருந்து எதையுமே கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு மாற்றாக எழுவது என்பது தேசத்தைச் சிதறடிக்கும் அரசியலுக்கு எதிராக தேசத்தைத் திரட்டும் அரசியல்தான்.
அடுத்தது குத்து விளக்குக் கூட்டணி.இப்பொழுது அது சங்கு கூட்டணி. தொடக்கத்திலிருந்து தன் சொந்தப் பலத்தை நம்பாத ஒரு கூட்டு அது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஜனநாயகம் என்ற ஒரு சொல்லை முன்னொட்டுவதன் மூலம் தன்னை மெய்யான கூட்டமைப்பாக காட்ட அவர்கள் முயன்றார்கள்.கட்சிப் பெயருக்குத்தான் வாக்கு விழும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதுபோலவே ஜனாதிபதி தேர்தலில் கட்டி எழுப்பப்பட்ட சங்குச் சின்னத்தைக் கைப்பற்றியதின்மூலம் பொது வேட்பாளருக்கு கிடைத்த வெற்றிகளை தங்களுக்கு மடை மாற்றலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதாவது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட பெயர்,இடையில் ஸ்தாபிக்கப்பட்ட சின்னம் என்பவற்றை தம் வசப்படுத்துவதன் மூலம் வாக்குகளைக் கவரலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது ஒரு தேர்தல் உத்தி மட்டுமே. எல்லா தேர்தல் உத்திகளும் தேசத்தை திரட்டுவன அல்ல.
எனினும்,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தைத் திரட்டும் கோஷத்தின் கீழ் இந்த கூட்டு பொதுக் கட்டமைப்புக்குள் ஓர் அங்கமாக இருந்தது. பொது வேட்பாளரை முன்நிறுத்தி ஒரு பொதுக் கோரிக்கையாகிய தேசத்தை திரட்டும் கோரிக்கைக்காக உழைத்த கட்சிகள் இந்த கூட்டுக்குள் உண்டு. ஆனால் அந்த உழைப்பின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்ட சங்கு சின்னத்தை கைப்பற்றும் விடயத்தில் அவர்கள் தேசத் திரட்சியா?அல்லது கட்சி அரசியலா?அல்லது தேர்தல் வெற்றியா?என்று முடிவெடுக்க வேண்டி வந்த பொழுது, இக்கூட்டானது கட்சி அரசியல் சார்ந்த தேர்தல் வெற்றிக்கு முன்னுரிமை வழங்கியது.எனவே தேசத் திரட்சிக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கிறார்களா இல்லையா என்பதனை அவர்கள் மீண்டும் எதிர்காலத்தில் நிரூபிக்க வேண்டியிருக்கும்.
அடுத்தது மான் கட்சி. இக்கட்சியும் பொது வேட்பாளரை முன் நிறுத்திய பொதுக் கட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்தது.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து அனேகமாக ஒதுங்கிவிட்டார்.கட்சியின் முதன்மை வேட்பாளராகக் காணப்படும் மணிவண்ணன் தன்னுடைய தாய்க் கட்சியாகிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து எங்கே துலக்கமான விதங்களில் வேறுபடுகிறார் என்பதனை இனி நிரூபிக்க வேண்டியிருக்கும்.
மற்றவை சுயேச்சைகள். இம்முறை தேர்தலில் அதிகம் சுயேச்சைகள் தோன்றக் காரணமே பிரதான கட்சிகளின் தோல்விதான்.பிரதான கட்சிகளில் இருந்து வெளிவந்த ஒரு பகுதியினர் சுயேச்சையாக நிற்கிறார்கள்.பிரதான கட்சிகளால் உள்வாங்கப்படாதவர்களும் சுயேச்சையாக நிற்கின்றார்கள்.தலைமைத்துவ வெற்றிடம் காரணமாக யாராவது தங்களை வந்து மீட்க மாட்டார்களா என்று காத்திருக்கும் தமிழ் கூட்டு உளவியல் காரணமாக திடீரென்று பிரபல்யம் ஆகிய அர்ஜுனாவை போன்றவர்களும் சுயேச்சையாக நிற்கிறார்கள்.யார் எதற்காக நின்றாலும் சுயேச்சைகள் அதிகரிப்பதற்கு காரணம் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தேசத்தைத் திரட்டது தவறியமைதான்.எனவே இம்முறை தேர்தல் களம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதை என்று சொன்னால், தமிழ்த் தேசியம் பேசும் எல்லாக் கட்சிகளுமே தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் விடயத்தில் தோல்வி அடைந்துவிட்டன என்பதைத்தான்.
இந்த அடிப்படையில் பார்த்தல்,கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளர் பெற்ற வெற்றி அரிதானது. அது ஒரு மிகப்பெரிய வெற்றி இல்லைத்தான்.ஆனாலும் அடிப்படை வெற்றி.அந்த முயற்சியில் ஈடுபட்ட கருத்துருவாக்கிகளை “பத்தி எழுத்தாளர்கள்” என்று சிறுமைப்படுத்தியது ஒரு பகுதி. தமிழில் பத்தி எழுத்தாளர் என்ற வார்த்தை அதிகம் அவமதிக்கப்பட்ட ஒரு காலகட்டம் அது.அதாவது தேசத்தைத் திரட்ட முற்பட்ட குற்றத்துக்காக அதில் முன்னணியில் நின்றவர்களை சிறுமைப்படுத்த அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
சுமந்திரன் பொது வேட்பாளரை ஒரு கேலிக்கூத்து என்று சொன்னார். கஜேந்திரன் இந்த முயற்சியில் நீங்கள் வென்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்குத் தெரியும் என்று சொன்னார்.முடியுமென்றால் ஒரு பொது வேட்பாளர் நிறுத்திக் காட்டுங்கள் என்று ரணில் சவால் விட்டார். பொது வேட்பாளர் முழுத் தீவுக்கும் பொதுவான நாசமாக முடியும் என்று சஜித் எச்சரித்தார்.அது ஆண்டிகள் கூடிக் கட்டும் மடம் என்றும் ஆபத்தான விஷப் பரீட்சை என்றும் எழுதினார்கள்.
அதாவது,தென்னிலங்கையில் உள்ள கட்சிகளும் பொது வேட்பாளரை ஆபத்தாகப் பார்த்தன.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட பிரதான கட்சிகள் இரண்டு அதனை விரோதமாகப் பார்த்தன.தேசத் திரட்சிக்கு எதிரான ஊடகவியலாளர் சிலர் தெரிந்தோ தெரியாமலோ தமது சொந்த மக்களைத் தோற்கடிப்பதற்காக உழைத்தார்கள்.ஆனாலும் பொது வேட்பாளர் அடிப்படை வெற்றியைப் பெற்றார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு தமிழ் அரசியல்வாதி பெற்ற ஆகப்பெரிய வாக்குகளை அவர் பெற்றார். கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்ஷத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளைக் கடந்து தேசத்தைத் திரட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சிக்குக் கிடைத்த அடிப்படை வெற்றி அது.
மக்கள் அமைப்புகளும் கட்சிகளும் இணைந்தால் அவ்வாறு வாக்குகளைத் திரட்ட முடியும் என்பது ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. கட்சிகளின் போதாமை காரணமாகத்தான் மக்கள் அமைப்பொன்று கட்சிகளோடு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிவந்தது. எனவே கட்சிகள் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது என்பது கடந்த ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை.
இப்பொழுது,மீண்டும் கட்சிகள் தேசத்தைத் திரட்டுவதில் எவ்வளவு தூரம் தோல்வியடைந்துள்ளன என்பதனை நிரூபிக்கும் ஆகப்பிந்திய உதாரணமாக நாடாளுமன்றத் தேர்தல் களம் காணப்படுகிறது.அதாவது தேசியம் என்றால் என்ன ? தேசியவாத அரசியல் என்றால் என்ன? என்பதை ஆழமாக விளங்கிக் கொள்ளத் தவறிய கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை மீண்டும் சிதறடிக்கும் ஒரு தேர்தல் களம் இது.எனினும்,தமிழ்த் தேசிய அரங்கில் ஒரு கட்சி ஏகபோகத்தை மேலும் உடைத்துக்கொண்டு பல தரப்புக்கள் மேலெழுமாக இருந்தால் அதுவும் ஒருவிதத்தில் நன்மைக்கே.