“வடக்கு மக்கள் எதிர்கொள்ள பிரச்சினைகள் நாட்டுக்கு மிகப்பெரிய சுமையாகும். அதனால் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிமுக்கியத்துவம் அளிக்கும். குறிப்பாக இன்னமும் விடுக்கப்படாத காணிகளை மிக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
“நாட்டு மக்களின் சுமைகளை குறைப்பதே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாக உள்ளது. வடக்கு மற்றும் மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்துள்ளனர். கடந்த கால அரசாங்கங்கள் இவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கவில்லை. இவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளமையானது நாட்டுக்கு மிகப்பெரிய சுமையாகும்.”
“காணிகளை விடுவிக்குமாறு இந்த மக்கள் நீண்டகாலமாக கோரிவருகின்றனர். எவ்வித வழக்குகளும் இல்லாது அரசியல் கைதிகளை நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளை மிக விரைவாக தீர்க்கும் தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. மலையகத்தில் சம்பிரதாயப்பூர்வமான அரசியலை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளனர்.”
“மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தோட்டங்களை மையப்படுத்திய வேலைத்திட்டங்களையும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அவர்களது கல்வியை அபிவிருத்தி செய்து சிறந்த சமூக வாழ்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதிகமாக போசாக்கு குறைப்பாட்டு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அதற்கும் தீர்வை வழங்க வேண்டும்.”
எனவே, “வடக்கு மக்களின் காணி பிரச்சினை என்பது நீண்டகாலமாக தீர்க்கப்பாடதுள்ள பிரச்சினை என்பதுடன், விரைவாக தீர்க்க வேண்டிய பிரச்சினையுமாகும். நாம் அதனை வேகமாக செய்வோம்.”
“யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச என அனைவருக்கும் பாரிய மக்கள் ஆணைகள் கிடைக்கப்பெற்றன. ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினைகளை எவராலும் தீர்க்க முடியாது போனது. நாம் மக்களின் பிரச்சினைகளை தீர்வே வந்துள்ளோம். அதனால் அந்தப் பணியை நிச்சயமாக செய்வோம்.” என்றும் அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.