அண்மையில் நடந்த “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்” இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கைக்கான சீனத் தூதர். இந்த வாரம் அவர் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்தார். நடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு தமிழர்களை நோக்கி வந்த முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் அவர். யாழ்ப்பாணத்தில் அவர் யாழ்.ஊடக அமையத்துக்கு விஜயம் செய்து அங்கே ஒரு ஊடகச் சந்திப்பையும் நடத்தினார். ஒரு நாட்டின் தூதுவர் நாட்டின் ஒரு மாவட்டத்தில் உள்ள “பிரஸ் கிளப்புக்கு” தானாக வந்து ஊடகவியலாளர்களை சந்திப்பது என்பது பொதுவானது அல்ல. அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களில் ஒன்றுதான் மேலே உள்ளது. இனப்பிரச்சினைக்கு சீனா முன்வைக்கும் தீர்வு என்ன? என்று கேட்கப்பட்ட பொழுது,அவர் மேற்கண்ட பதிலைச் சொன்னார்.
அந்த ஊடகச் சந்திப்பின் தொடக்கத்தில் அவர் பின்வருமாறு சொன்னார்..”இலங்கை வரலாறிலேயே முதற் தடவையாக தெற்கை மையப்படுத்திய கட்சியான என்பிபிக்கு -தேசிய மக்கள் சக்திக்கு- யாழ்ப்பாண மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்”என்று. மேலும்,தனது யாழ் விஜயத்தின் போது தான் பருத்தித்துறைக்குச் சென்றதாகவும் அங்கே, “பல்வகைமைக்குள் ஒற்றுமையே சிறீலங்காவின் பலம் ” என்ற வாசகத்தைப் பார்த்ததாகவும்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த வாசகம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதாவது சீனா, என்பிபியின் வெற்றியை ஆர்வங் கலந்த எதிர்பார்ப்போடு பார்க்கின்றது.அந்த வெற்றியில் தமிழ்மக்கள் பங்காளிகளாக இணைந்திருப்பதை மிகவும் எதிர்பார்ப்போடு பார்க்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வுக்குரிய அடிப்படைகளை அது பலப்படுத்தும் என்றும் சீனா கருதுவதாகத் தெரிகிறது. மேலும் முக்கியமாக என்பிபியின் வெற்றியானது சீனாவுக்கு சௌகரியமான ஒர் அரசியற் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக சீனா கருதுவதாகத் தெரிகிறது.
யாழ்ப்பாணத்தில் சீனத் தூதர் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்திருக்கிறார்.இதில் முதலீட்டுத் துறையோடு ஈடுபாடுடையவர்கள், தொழில் முனைவோர் போன்றவர்கள் அதிகமாககு காணப்பட்டிருக்கிறார்கள். இதற்குமுன் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது இங்குள்ள கருத்துருவாக்கிகளையும் சந்தித்தார். அதில் சில கருத்துருவாக்கிகள் உரையாடலின் மையத்தை இனப்பிரச்சினையை நோக்கிக் குவித்தார்கள். இலங்கைத்தீவின் வளர்ச்சிக்கு சீனா எப்படி உதவ முடியும் என்ற உரையாடலில் இருந்த கவனக்குவிப்பு இனப்பிரச்சினை மீது மாற்றப்பட்டது. ஆனால் இம்முறை அவ்வாறான விவகாரங்களைத் தொடக்கூடிய கருத்துருவாக்கிகள் சந்திப்பில் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
சிவில் சமூகங்களை சந்தித்தபொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான கேள்விகளை சீனத் தூதுவர் பெருமளவுக்கு தவிர்க்க முயற்சித்திருக்கிறார்.ஆனால் ஊடகச் சந்திப்பில் அவர் என்பிபியின் வெற்றிக்கு தமிழ் மக்கள் பங்களித்தமையை சிலாகித்துப் பேசியுள்ளார்.
சீனா மட்டுமல்ல, எம்பிபியின் மூத்த தலைவராகிய ரில்வின் சில்வா கூறுகிறார்,வடபகுதி மக்கள் இனவாதத்தைப் புறக்கணித்துவிட்டு தமக்கு வாக்களித்திருப்பதாக.
சட்டத்தரணி பிரதீபா மகாநாம என்பவர் கூறுகிறார், “இனி வரும் காலங்களில் ஜெனிவாவில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாது” என்று.
விமல் வீரவன்ச கூறுகிறார், இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்குத் தாம் எதிரானவர்கள் என்ற செய்தியை தமிழ் மக்கள் வழங்கியுள்ளதாக. ஒற்றை ஆட்சிக்குள் அனைத்து இன மக்களும் சம உரிமை கிட்டும் வகையிலான பயணத்தைத் தொடர வேண்டும் என்பதற்குரிய ஆணையே அதுவென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேற்சொன்ன கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? என்பிபியின் வெற்றியை குறிப்பாக அதற்கு தமிழ்மக்கள் வழங்கிய ஆதரவை வைத்து இன முரண்பாடுகள் தணிந்து விட்டதாக அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
என்பிபிக்குக் கிடைத்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது அசாதாரணமானது.அது மூவினத்தன்மை பொருந்தியது.ஆனால் அதன் பொருள் தமிழ் மக்கள் இந்தமுறை மட்டும்தான் அவ்வாறு தெற்கில் உள்ள ஓர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளார்கள் என்பதல்ல. கடந்த 2015ல் ரணில் மைத்திரி கூட்டரசாங்கத்துக்கும் தமிழ்மக்கள் ஆதரவை வழங்கினார்கள்.ஆனால் அந்த ஆதரவை அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வழங்கினார்கள்.இந்தமுறை வித்தியாசம் என்னவென்றால்,அவர்கள் நேரடியாக அரசாங்கத்துக்கே அந்த ஆதரவை வழங்கியதுதான். இந்த வித்தியாசத்தைத்தான் சீனத் தூதர் எதிர்பார்ப்போடு பார்க்கிறாரா?
இம்முறை ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் என்பிபிஐ நோக்கிப் பெயர்ந்திருக்கின்றன.ஆனால் எனது கட்டுரைகளில் திரும்பத்திரும்பக் கூறப்படுவதுபோல,அவை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் என்பிபி முன்வைத்த வாக்குறுதிகளுக்காக வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல.அவை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவாக வெறுப்பும் சலிப்பும் அடைந்த மக்கள் வழங்கிய வாக்குகள்தான்.அண்மையில் பிபிசி தமிழ்ச் சேவை தமிழ் மக்களைப் பேட்டி கண்ட பொழுது அது தெளிவாக வெளிப்பட்டது.
எனவே என்பிபிக்கு கிடைத்த வாக்குகள் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக வழங்கப்பட்ட மக்கள் ஆணை அல்ல.ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது அரசியலமைப்பை மாற்றத் தேவையான அடிப்படைகளில் ஒன்று. அந்த அடிப்படையில் சிந்தித்தால,இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு ஒரு புதிய யாப்பை உருவாக்க என்பிபி தயாரா ?
இங்கு ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமே இனப்பிரச்சினையைத் தீர்த்து விடாது.மாறாக,இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான “பொலிடிக்கல் வில் அதாவது அரசியல் பெரு விருப்பம் என்பிபியிடம் இருக்க வேண்டும். அதை மேலும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், மகாவம்ச மனோநிலைக்கு வெளியே வந்து தமிழ் மக்கள் ஏற்கத்தக்க ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதுதான் உண்மையான மாற்றம். இதற்கு முன்னிருந்த சிங்கள ஆட்சியாளர்களிடம் இருக்காத அந்த அரசியல் பெரு விருப்பம் என்பிபியிடம் உண்டா?
இந்தவிடயத்தில் என்பிபியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைதான் அதற்குத் தடையாகவும் இருக்கப் போகிறது. ஏனெனில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை புரட்சிகரமானது அல்ல. 2019இல் மூன்று விகித வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி 2024 இல் ஜனாதிபதி தேர்தலில் 42 விகித வாக்குகளைப் பெற்றது.நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றி இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இந்த எழுச்சியானது சிங்கள பௌத்த கூட்டு மனோநிலையை அரசியல் மயப்படுத்தியதால் கிடைத்த எழுச்சியல்ல. முன்னைய ஆட்சியாளர்களின் மீது ஏற்பட்ட வெறுப்பினால் ஏற்பட்ட கோப எழுச்சி.ராஜபக்சங்களுக்கு வாக்களித்த அதே சிங்கள வாக்காளர்கள்தான் அவர்களை ஓட ஓட விரட்டினார்கள்.அதே வாக்காளர்கள்தான் இப்பொழுது என்பிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறார்கள். அதாவது முன்னைய ஆட்சியாளர்கள் மீது வெறுப்படைந்த சிங்கள முஸ்லிம், மலையக வாக்காளர்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் மீது நம்பிக்கையிழந்த ஒரு பகுதி தமிழ் வாக்காளர்களும் அள்ளிக் கொடுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை அது. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான மக்கள் ஆணையல்ல.
என்பிபி அந்த வெற்றியின் கைதியாக இருக்குமா? அதாவது இறந்த காலத்தின் கைதியாக இருக்குமா? அல்லது வருங்காலத்தின் துணிச்சலான புரட்சிகரமான தொடக்கமாக இருக்குமா?
சீனத் தூதர் தனது ஊடகச் சந்திப்பில் சுட்டிக்காட்டிய அந்த வாசகங்கள் எழுதப்பட்ட சீமெந்துப் பலகை பருத்தித்தறையில் உள்ளது.சிங்கக் கொடிக்குக் கீழே அந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது.அது படைத்தரப்பால் நிறுவப்பட்ட ஒரு விளம்பரப் பலகை. அதுபோன்ற பல தமிழ்ப் பகுதிகளில் உண்டு. குறிப்பாக 2009இல் ஆயுத மோதல்கள் முடிந்த கையோடு “ஒரே நாடு ஒரே தேசம்” என்ற சுலோகம் ஒரு வெற்றிக் கோஷமாக முன்வைக்கப்பட்டது.பல படை முகாம்களின் முகப்பில் அல்லது மதில்களில் அது எழுதப்பட்டது. இப்பொழுது பல்வகைமைக்குள் ஐக்கியம் என்ற வாசகம் மிஞ்சியிருக்கிறது. பலாலி பெருந் தளத்தின் வடமாராட்சி எல்லை என்று வர்ணிக்கத்தக்க ஒரு திருப்பத்திலும் இந்த வாசகம் உண்டு.தமிழ் மக்களின் நிலத்தைப் பிடித்து வைத்திருக்கும் ஒரு படைத்தரப்பின் சுலோகங்கள் அவை.பல்வகைமைக்குள் ஒற்றுமை என்று அங்கு கூறப்படுவது அதன் மெய்யான பொருளில் சிங்கக் கொடியின் கீழ் ஒரே நாடு ஒரே தேசம் என்பதுதான்.
சீனத் தூதுவர் அதை உதாரணமாகக் காட்டுகிறார். ரில்வின் சில்வாவின் கருத்துக்களும் அதைத்தான் நிரூபிப்பவைகளாகக் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் இனவாதத்தைப் புறக்கணித்திருப்பதாக அவர் கூறுகிறார்.தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடு என்பது இனவாதம் அல்ல. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் தமிழ் மக்களை ஒடுக்கியது. தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்க முற்பட்டது. அதற்கு எதிரான போராட்டத் தத்துவந்தான் தமிழ்த் தேசியவாதம். அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.ஆனால் ஒடுக்குமுறைக்கு எதிரானது என்பதனால் அது முற்போக்கானது என்று மார்க்சியர்கள் கூறுவார்கள்.எனவே தமிழ்த்தேசிய வாதம் இனவாதம் அல்ல. அதை இனவாதம் என்று கூறுவதுதான் சுத்த இனவாதம்.
அதுபோலவே ஜனாதிபதி அனுரவின் புதிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது உரையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்துத் தெளிவான அரசியல் அடர்த்தி மிக்க வாக்குறுதிகள் இல்லை. மாறாக மேலோட்டமான பொத்தாம் பொதுவான சொல்லாடல்தான் உண்டு.இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் பெரு விருப்பம் என்பிபியிடம் உண்டு என்று நம்பத்தக்க துணிச்சலான வார்த்தைப் பிரயோகங்கள் அங்கு இல்லை.சீனத் தூதுவர் தன்னையறியாமல் சுட்டிக்காட்டியதுபோல சிங்கக் கொடியின் கீழ் பல்வகைமைக்குள் ஒற்றுமை?