சிரிய ஜனாதிபதி பஷார் அல் – ஆசாத் தலைநகரை விட்டு விமானத்தில் தப்பியோடியிருக்கும் நிலையில், டாமஸ்கஸைக் கைப்பற்றி விட்டதாக கிளர்ச்சிப் படையினர் ஞாயிற்றுக்கிழமை (08.12.24) அறிவித்துள்ளனர். தலைநகரை விட்டு அரசுப்படைகள் வெளியேறி விட்டதால், டமாஸ்கஸ் நீண்டகால ஆட்சியாளரான ஆசாத்தின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சி படையினர் தெரிவித்தனர்.
பஷார் அல் ஆசாத் தப்பியோடிவிட்டார். ஆசாத்தின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து டமாஸ்கஸ் விடுவிக்கப்பட்டது என்று நாங்கள் அறிவிக்கிறோம் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனிடையே, கடந்த 24 வருடங்களாக சிரியாவை ஆட்சி செய்த அதிபர் பஷார் அல் ஆசாத், விமானத்தில் ஏறி அடையாளம் தெரியாத இடத்துக்கு சென்று விட்டதாக சர்வதேச செய்தி நிறுவனத்திடம் மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்து விட்டதாக ராணுவத் தளபதி அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இருண்ட சகாப்தம் முடிவடைந்தது: ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிப் படை அதன் அறிக்கையொன்றில், “இருண்ட காலத்தின் இந்த சகாப்தம் முடிவடைந்து, புதியதொரு சகாப்தம் தொடங்குவதாக இன்று டிசம்பர் 8, 2024ல் நாங்கள் அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸின் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சிரியாவின் பாதுகாப்பு படையினர் பின்வாங்கி விட்டதாகவும், கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக ராணுவத்தினரும், அதிகாரிகளும் விமானநிலையத்தை கைவிட்டு விட்டு வெறியேறி விட்டதாகவும், பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு டமாஸ்கஸில் உள்ள சைட்னாயா ராணுவச் சிறைகக்குள் நுழைந்து கைதிகளை விடுவித்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “எங்களின் கைதிகளை சிறைகளில் இருந்து விடுவித்து, அவர்களின் கைவிலங்குகளை விடுவித்து, அநீதியின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது என்ற செய்தியினை அறிவிக்கும் சந்தோஷத்தை நாங்கள் எங்கள் சிரிய மக்களுடன் இணைந்து கொண்டாடுகிறோம்” என்று தெரிவித்தனர்.
படிப்படியாக முன்னேறிய கிளர்ச்சி படை: கடந்த நவம்பர் 27-ம் திகதி, சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால், அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதைடுத்து, கடந்த வியாழக்கிழமை ஹோமா நகரையும், வெள்ளிக்கிழமை சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் கைப்பற்றினர். ஒருவாரகாலத்தில் கிளர்ச்சிப் படைகளின் கை வேகமாக ஓங்கி இன்று தலைநகர் டாமஸ்கஸும் கிளர்ச்சியாளர்கள் வசமாகியுள்ளது.
முன்னதாக,கிளர்ச்சிப் படையினர் சனிக்கிழமை கடந்த 2000 ஆண்டு முதல் ஆசாத் ஆட்சி செய்து வரும் டமாஸ்கஸை சுற்றிவளைத்திருப்பதாக அறிவித்தனர். “நாங்கள், தலைநகர் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிக்கு இடையில் இருக்கும் ஹோம்ஸ் நகரின் விளிம்பில் நிற்கிறோம். ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டவுடன் ஆசாத்தின் படை வலிமையாக இருக்கும் கடற்கரை பகுதியில் இருந்து டமாஸ்கஸ் துண்டிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தனர். அன்று இரவு அவர்கள் ஹோம்ஸை கைப்பற்றியதாக அறிவித்தனர்.
தற்போது தலைநகர் டாமஸ்கஸும் கிளர்ச்சியாளக்கள் வசமாகியிருக்கும் நிலையில், 14 மாகாண தலைநகரங்களில், லடாகிய மற்றும் டார்டஸ் ஆகிய நகரங்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
50 ஆண்டு கால ஆசாத் குடும்ப ஆட்சி: சிரியா கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேலாக ஆசாத்தின் குடும்பத்தால் ஆளப்பட்டு வருகிறது. தனது தந்தை ஹஃபிஸ் ஆசாத்தின் மரணத்தை தொடர்ந்து, பஷார் அல் ஆசாத் சிரியாவின் அதிகாரத்துக்கு வந்தார். மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட அரபு வசந்தங்களால் ஈர்க்கப்பட்டநிலையில் சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆசாத்துக்கு எதிரான எதிர்ப்பு நிலவி வருகிறது. அதிபரின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த அந்த அலை உள்நாட்டுப்போராக விரிவடைந்தது.
இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு வாக்கில், சிரியாவின் பெரும்பாலான பகுதிகள் கிளர்ச்சி படை மற்றும் முஸ்லிம் அரசுகளின் போராளிகள் குழுக்களுக்களின் கட்டுப்பாட்டில் வந்தன. என்றாலும் ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டினால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஆசாத்தின் அதிகாரத்தினை மீண்டும் உறுதி செய்தது.
தீவிரமாக நோக்கும் அமெரிக்கா: இதனிடையே சிரியாவில் நடந்துவரும் மாற்றங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.