திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி முறைப்பாடு இருப்பதால், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு இன்று வியாழக்கிழமை (26.12.24) அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களுடன் இந்த தம்பதியின் 13 வயது மகனும் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை சென்றனர்.
இந்த விவகாரத்தில் தங்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்புவதாக, ஊடகவியலாளர்களிடம் பேசிய அப்பெண் தெரிவித்திருந்தார்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி இரவு 11 மணியளவில் உரிய அனுமதியில்லாமல் இலங்கையில் இருந்து செய்ன இவர்களை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில், காவற்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முஹம்மது ஷிஹாப் – பாத்திமா பர்சானா மார்க்கர் தம்பதியரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்த காவலர்கள், அவர்களின் பத்து வயது மகனை நாகையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
இந்த வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த தம்பதி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.
கொழும்பில் பிரிவெல்த் குளோபல் (Privelth Global) என்ற நிதி நிறுவனம், இஸ்லாமிய சட்டப்படி செயல்படுவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் வைப்புத் தொகையைப் பெற்று வந்ததாகவும், பொதுமக்களிடம் இருந்து சுமார் 150 கோடி இலங்கை ரூபாய் வைப்புத் தொகையைப் பெற்று மோசடி செய்ததாகவும் இலங்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனையில் உள்ள பிரிவெல்த் குளோபல் நிறுவனத்தின் கிளையில் இந்த மோசடி நடந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக முஹம்மது ஷிஹாப் என்பவரும் இயக்குநராக அவரது மனைவியும் உள்ளனர்.
அந்த வகையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் மீது காவல்துறையில் வழக்குப் பதிவாகியுள்ளது. கல்முனை நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஷிகாப், அவரது மனைவி மற்றும் மகன் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த நிலையில் இலங்கை அரசின் வேண்டுதலுக்கமைவாக நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.