160 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்குச் தப்பிச் சென்றுவிட்டு மீண்டும் இலங்கை திரும்பிய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து முன்னெடுத்த சோதனையின் பின்னா் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளாா்.
கொழும்பு 5ச் சேர்ந்த 49 வயதான கணவன் மற்றும் 43 வயதான மனைவி ஆகியோா் 2021 ஆம் ஆண்டு படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தனர். குறித்த தம்பதியினர் நாட்டின் பல பகுதிகளிலும் பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் என முறையிடப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நீதிமன்றங்களின் ஊடாக 08 வௌிநாட்டு பயணத் தடைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.