தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கருத்து வெளியிட்ட அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற குழு பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களை நியமித்து உள்ளமையினால் அவர் நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்.
எனினும், தமிழரசு கட்சியினுடைய ஊடக பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயல்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
அரியம் உட்பட பலர் நீக்கியது தமிழரசுக் கட்சி?
கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி. சிவமோகன் அவர்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28.12.24) இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
கட்சியின் உறுப்பினரான சிவமோகன் மீது தேர்தல் காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாக தாக்கி ஊடக சந்திப்புக்களை நடாத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவரை கட்சியிலிருந்து இடை நிறுத்தி விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியநேத்திரன் ஏற்கனவே இடை நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரையும் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், கடந்த தேர்தலில் கட்சிக்கு எதிரான வகையில் வேறு கட்சிகளோடு அல்லது சுயேட்சை குழுக்களோடு இணைந்து போட்டியிட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கட்சியில் இருந்து விலக்குவதாக மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. அவ்வாறனவர்களின் பெயர்கள் எல்லாம் வர்த்தமானியில் உள்ளது.
மேலும், வேறுகட்சிகள் மற்றும் குழுக்களுக்காக பிரச்சாரம் செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். சிலருக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனையவர்களுக்கும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.