பிறப்பு : 1955.07.05 இறப்பு : 30.12.2024
உறுதி கொண்ட மனிதர், கூத்தர், கூத்துக் கலைஞர் இராமலிங்கத்துடனான தொடர்பு சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கப் பயணத்துடன் ஆரம்பமாகிறது. கூத்து மீளுருவாக்க உரையாடல் தொடங்கிய இரண்டாயிரமாம் ஆண்டு தொடக்கம் இற்றை வரையான கூத்து சார்ந்த செயற்பாடுகளில் உறுதியான பங்கு வகித்த ஆளுமையாக இராமலிங்கம் விளங்கியிருக்கிறார்.
கம்பீரமான கூத்துக்களை ஆடிப் பெயரெடுத்த மனிதர் இராமலிங்கம். கூத்து சார்ந்த கலைச் செயற்பாடுகளிலும்; மூன்றாவது கண் நண்பர்களின் செயற்பாடுகளிலும் உறுதியான பங்களிப்பை வழங்கியிருப்பவர்.
மூன்றாவது கண் நண்பர்களின் கூத்து விழாக்கள், கலை விழாக்கள், சிறுவர் திருவிழாக்கள் என எல்லாச் செயற்பாடுகளிலும் இராமலிங்கம் தோளோடு தோள் நிற்பார். இது மகிழ்ச்சியாகவும் மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கும்.
சீலாமுனையின் கூத்துப் பாரம்பரியம் குறிப்பாகக் கூத்து மீளுருவாக்கம், சிறுவர் கூத்தரங்கு என்பவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் அவரது விருப்பிற்கு உரியதாக இருந்தது. குறிப்பாக, விடுபட்டுப்போன மகிடிக் கூத்து மரபை மீளவும் சீலாமுனைக் கிராமத்தில் ஆடத்தொடங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். 2025 சித்திரைப் பருவத்தில் மகிடிக் கூத்தை சீலாமுனையில் ஆடவேண்டும் என்ற அக்கறையுடன் அவர் வாழ்ந்தார்.
இராமலிங்கம் இன்னும் பல மூத்த கலைஞர்கள், ஊரவர்கள், ஆர்வலர்களில் இந்த வேட்கை என்பது பொழுதுபோக்கிற்குரியது மட்டுமென்பதல்ல, கைவிடப்படாது பாரம்பரியம் பேணப்பட வேண்டுமென்பது மட்டுமல்ல் அது, சமூதாயமாகத் தாம் வாழும் சூழலுடனும்; அச்சூழலில் வாழும் மனிதர்களுடனும்; மற்றும் உறவுகளுடனும் சேர்ந்து வாழும் சமூகப் பண்பாட்டு விழுமியத்தின் பாற்பட்டதாகும்.
அதுவும் இலத்திரனியல் சாதனங்களால் விழுங்கப்பட்டு, மூளை மழுங்கடிக்கப்பட்டு வாழும் நிலையில் இருந்து விடுவித்துக் கொண்டு மனிதர்கள் தமது இயல்பு வாழ்க்கையை வாழவும்; கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல், செயற்பாடு, மதிப்பீடு எனும் இயல்புகளை இழந்து விடாமல் மனிதர்கள் வாழவும்; சமத்துவமான சமூகத்தினை உருவாக்கவுமான சுயமான செயற்பாட்டுக் களங்களான கூத்தரங்க இயக்கம் அதில் நம்பிக்கையுடன் பயணித்த இராமலிங்கம் போன்ற கூத்துக் கலைஞர்களின் நினைவுகளுடன் மேலும் வீறுகொண்டு பயணிக்கட்டும்.
பேராசிரியர்.சி.ஜெயசங்கர்