ஈழக்கூத்தரங்கானது பல நூற்றுக்கணக்கான கலை ஆளுமைகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கூத்தரங்க இயக்கமானது மிகப்பெரும் ஆளுமைகளின் இணைவிலும், சமூகங்களின் பங்குபற்றலுடனுமே முன்னெடுக்கப்பட வல்லது.
இத்தகைய வல்லபம் பொருந்திய கூத்தரங்கில் நிமிர்ந்து பார்த்து, வியக்க வைக்கும் பல ஆளுமைகளை கூத்தரங்க உலகு அறியும், நினைவு கூரும், பேசிப் பெருமிதம் கொள்ளும். ஆண்டுகள் பல கடந்தாலும் இத்தகைய ஆளுமைகளின் வல்லமைகள் மறக்கப்படாப் பெரும் பேசுபொருளாக வாழ்ந்து கொண்டே இருக்கும்.
இத்தகைய சிறப்புமிக்க வாழ்வின் மிக அண்மித்த ஆளுமைப் பதிவாக அண்ணாவியார் கு.பொன்னம்பலம் இணைந்து கொள்கிறார். கூத்தின் அண்ணாவிமார்கள் பல்துறைவல்ல விற்பனர்கள். அண்ணாவியார் கு.பொன்னம்பலம் அவர்கள் இந்த வரைவிலக்கணத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். உதாரணமாக வாழ்ந்தவர்.
கூத்தரங்கைப் பாமரத்தனமானதாகவும் கூத்தர்களைப் பாமரர்களாகவும் செம்மையற்ற கலையைப் படைப்பவர்கள் என்றும் நவீன நாடக நூற் புனைவுகள், நாடக அரங்கப் பாடப்பரப்புக்களின் புனைவுகள் தாண்டி, கூத்தரங்கின் யதார்த்தத்துள் நுழையத் தொடங்கிய பொழுதுதான் உலக அரங்கின் பிரமாண்டங்களுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய கூத்தரங்கின் மெய்ப்பொருளை அறிய முடிந்தது.
இந்த நிலைதான் அனைத்து உள்ளூர், அறிவு திறன்களுக்கும் உரியதாக இருந்து வருகின்றமை இன்னமும் சிந்திக்கப்படாத விடயமாக இருக்கின்றது.
காலாதிகால உள்ளூர் அறிவு முறைகளை பாமரத்தனமானதாகவும் மூடத்தனமானதாகவும் கட்டமைத்து விலக்க வைத்த அதேவேளை கட்டுப்படுத்தும் வகையிலும், அடிமைப்படுத்தும் வகையிலும் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீன கல்விமுறை என்னும் காலனிய கல்விமுறை விஞ்ஞானபூர்வமானதாகவும், அறிவு பூர்வமானதாகவும் கேள்விக்கிடமற்ற வகையில் நம்ப வைத்து அவர்களின் நோக்கில் வழிநடக்க வைத்திருக்கிறது.
கேள்விக்குட்படுத்துதல் நவீன அறிவின் அடிப்படை என்று ஒப்புவிக்கப்படினும் கேள்விக்கிடமற்ற வகையில் உள்ளூர் அறிவு திறன் முறைகளைக் கைவிடவும்; நவீன அறிவு என்னும் காலனிய அறிவைக் கைக்கொள்ளவும் வைத்திருக்கிறது.
நவீன கல்விப் புலமானது இன்றைய நாள் வரை உள்ளூர் அறிவு திறன் முறைசார் அறிஞர்களை, ஆளுமைகளை தராதரமற்றவர்களாவே தாழ்த்தியும், விலத்தியும் வைத்திருக்கச் செய்திருக்கிறது. பெரும் போராட்டங்கள் காரணமாக சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் கோவிலுக்குள் புகுவது கணிசமான அளவிற்கு சாத்தியமாகி இருக்கின்ற சூழ்நிலையிலும் நவீன கல்வி நிலையங்களின் கதவுகள் உள்ளூர் அறிஞர், கலைஞர்களுக்கு இறுக மூடப்பட்டதாகவே இன்னமும் இருந்து வருவது நவீன அடிமை மனோபாவத்தின் வெளிப்பாடுதான்.
இங்கு ஆச்சரியம் என்னவென்றால் போராடப்பட வேண்டிய அடிப்படையான விடயமொன்று பற்றிய கவனிப்பே இல்லாமல் பல போராட்டங்கள் பல வழிமுறைகளும் நடந்தேறி வருவதுதான். அறிவின் விடுவிப்பே அனைத்து விடுதலையினதும் அடிப்படையாக இருக்க முடியும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டியது.
உள்ளூர் அறிவு முறையின் மிகப்பெரும் ஆளுமைகளின் இருப்பும், அவர்களது இயக்கமும், அவர்களுடனான உறவும், ஊடாட்டமும் நவீன அறிவு என்னும் காலனிய அறிவு நீக்கத்திற்கான மெய்ப்பொருளை உணர்த்தியிருக்கிறது. இது சமூகமயப்பட வேண்டுமென்பதே மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான முப்பது வருடகால முன்னெடுப்புகளின் நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பயணத்தில் தோளோடு தோள் நின்ற அண்ணாவியார் கு.பொன்னம்பலம் இப்பயணத்தின் ஒளி வீச்சாகவும் இருந்திருக்கிறார்.
நவீன கல்வி உலகின் புனைவுகளைத் தகர்த்து இளையோர் மத்தியில் மெய்ப்பொருளைத் தேடவும், காணவும் ஆதிக்க நீக்கம் பெற்றதும்; நிலைத்து நிற்கும் பொருளாதாரப் பண்பாட்டு உருவாக்கத்திற்குமான பயணத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்றாகவும், கண் முன்னான சாட்சியாகவும் அண்ணாவியார் கு.பொன்னம்பலமும் பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார்.
பேராசிரியர் சி.ஜெயசங்கர்.