குழந்தாய்;
செய்து விற்கும் பட்டம் வாங்கி
கடற்கரை மணற்பரப்பில்
கால்கள் புதையப் புதைய ஓடியோடி
காற்றிலேற்றும் வித்தை கண்டாய்
கேள்;
ஈர்க்கிலும் நூலும் எடு
சமநிலை பார்த்து பட்டத்தைக் கட்டு
சவாலானதுதான்
எனினும்
திரும்பத் திரும்பத் திருத்தித் திருத்தி
கட்டிப் பழகு
தேர்ந்து விடுவாய்
கட்டிய பட்டம்
உன் தேர்ச்சியைச் சொல்லும்
சரி;
கடதாசி எடு
பழைய பத்திரிகை
வண்ணமாயிருந்தால் தெரிந்தெடு அதனை
வேப்பம் பிசினை வெந்நீரில் கலந்து
ஒட்டும் பசையாக்கி
பட்டத்தில் அழகாக
பத்திரிகையை ஒட்டிக்கொள்
ஒட்ட முன்னர ஒருகணம் பொறு
வண்ணமாயில்லை பத்திரிகை எனில்
கவலை விடு
வேலியில் வளவில் கொவ்வையிலை
குப்பைமேனி செவ்வரத்தம் பூ என
வண்ணந்தரும் இலைகள் பூக்களென
பல உண்டு அறிந்துகொள்
மேலும் பல நற்குணங்கள் அவற்றிற்குண்டு
அவையும் அறிந்துகொள்
சரி;
வண்ணச்சாறுகளால் அழகூட்டு
காய்ந்து மடமடத்த வண்ணப் பட்டம்
இப்போது உன்கையில்
பார்,
பார்த்து மகிழ்
மகிழ்ந்தாயா?
நல்லது;
முச்சை போட நூலை எடு
நுணுக்கமான வேலைதான்
முயற்சிகொள்
தேவையெனில் உதவிபெறு
முடிந்ததா முச்சை போட்டு?
அப்பாடா…
பொறு;
இன்னும் உண்டு
பழந்துணிகள் தேடியெடு
கிழித்தெடுத்து கிழித்தெடுத்து
நீண்ட நாடாவாக முடிந்து முடிந்து எடு
அழகுக்கு அழகு செய்ய
ஒரு முனையில் குஞ்சமும் வைத்துக்கொள்
இப்போது
வாலும் ஆகிற்று
ஆகிற்றா?
முச்சை போட்ட பட்டத்தின்
கீழ் முனையில் வாலை முடிந்துவிடு
தொங்கட்டும் குஞ்சம் கட்டிய வால்
ஏற்றும் பட்டத்தில் அசைந்தசைந்து
சமநிலை கூட்டும் வால்
இனி;
எடுத்துக்கொள் களிநூல்
சிறுகட்டையில் சுற்றியெடுத்து
ஒருமுனையை முச்சையுடன் மூட்டிவிடு
இப்போது உன்கையில் இருப்பது
உன் பட்டம்
பார்;
பார்;த்துப் பெருமைகொள்
போதும்;
தொடங்கு விளையாட்டை
வீட்டைச் சுற்றி வளவைச் சுற்றி,
வாய்த்த வெளிகள் சுற்றி
கைநீளக் களிநூல் கொண்ட பட்டத்தை
கொண்டோடு
பாம்புபோல் வளைந்து வளைந்து
பறந்து வரும் உன் பட்டத்தை
திரும்பிப் பார்த்துப் பார்த்து
ஓடு முன்னோக்கி
பார்த்துக்கொள்;
பட்டத்தின் முனை ஈர்க்கில்
உன் பின்கழுத்திலோ பிடரியிலே
காதுகளுக்குப் பின்னாலோ குத்திக்கொள்ளாமல்
ஓடு, ஓடிக்கொண்டேயிரு
வியர்த்துக் களைத்து ஓயுமட்டும்.
விண்கூவி வானில் மிதந்தசையும்
பெரும் ஏற்றத்தின்
குழந்தமை கண்டாய் நீ
என் குழந்தாய்
கொள்,
குதூகலம் கொள்
உன் செயலில் குதூகலம் கொள்.
சி.ஜெயசங்கர்