இஸ்ரேலுக்கும் ஹமாசிற்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் படி ஐந்தாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனக் கைதிகளில் எழுவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனக் கைதிகள் இஸ்ரேலியச் சிறைகளில் நிலவும் பயங்கரமான நிலைமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
வெடிகுண்டுகள் மற்றும் எறிகணைகள் அடங்கலான 6.75 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான போர்க்கருவிகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதற்கு இணக்கம் தெரிவித்து அமெரிக்கா கையெழுத்திட்ட நிலையில் பாலஸ்தீனக் கைதிகள் இஸ்ரேலியச் சிறைகளில் கொடுமையான நிலைமைகளில் அடைத்து வைக்கப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
காசா மீதான இஸ்ரேலின் போரில் 48,181 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 111,638 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் என்கிளேவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறைந்தது 61,709 பேர் இறந்துள்ளதாக அரசாங்க ஊடக அலுவலகம் கூறுகிறது. இடிபாடுகளுக்கு அடியில் காணாமற்போன ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. அக்டோபர் 7, 2023 தாக்குதல்களின் போது இஸ்ரேலில் குறைந்தது 1,139 பேர் கொல்லப்பட்டதோடு 200 இற்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.