சிங்கப்பூரில் பயங்கரவாதச் சம்பவம்ஒன்று நடக்கச் சாத்தியம் உண்டு எனவும், அதற்கு சிங்கப்பூர் மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் சண்முகம் எச்சரித்துள்ளார். சிங்கப்பூரில் இன்று(11.02.25) நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது
“நேற்று ( 10.02.25) சிங்கப்பூரில் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட மூவர் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் 18 வயது சிங்கப்பூர் இளைஞர். சிங்கப்பூரில் வலதுசாரித் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்றாவது இளைஞர் அவர்.
உலக அளவில் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த 18 வயது இளைஞர், இணைய விளையாட்டு ஒன்றில் தன்னைப் பயங்கரவாதியாக உருவகப்படுத்திக் கொண்டார். அவர் சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையே இனப் போரை தொடங்கி வைக்க விருப்பம் கொண்டிருந்தார். அந்த இளைஞர் நியூசிலாந்தின் இரண்டு பள்ளிவாசல்களில் 2019ஆம் ஆண்டு 51 பேரைக் கொன்ற வெள்ளை ஆதிக்கப் போக்குடைய அஸ்திரேலியரான பிரன்டன் டராண்ட்டை பின்பற்றி உள்ளார். அவர் சிங்கப்பூர் பள்ளிவாசல் ஒன்றில் முஸ்லிம்களைத் தாக்க எண்ணியிருந்தார்.
சிங்கப்பூரில் ஒரு பயங்கரவாதச் சம்பவம் நடந்தால் அதid எதிர்கொள்ளச் சமூகம் மனோரீதியாகத் தயாராக இருக்கிறதா என்பது முக்கியம். அப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டால் அந்தச் சம்பவத்திலிருந்து சமூகம் மீண்டு வருவதே முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில், இளைஞர் ஒருவர், பெண் ஒருவர், துப்புரவாளர் ஒருவர் என மூவர் மீது உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மலேசியரான துப்புரவாளர் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.