முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை அன்னாரது பூர்வீக இல்லத்தில்நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். ,மேலும் தெரிவிக்கையில்,
எனது தந்தையார் நாகலிங்கம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றார்.
அமிர்தலிங்கம் நேர்மையானவர். மக்களால் இன்றும் மதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம். அவரது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லை. அமிர்தலிங்கம் அவரது பாரியார் மங்கையர்கரசி அம்மையாரதும் பேச்சுக்களைக் கேட்டபதற்காக சிறுவயதில் கூட்டங்களுக்கு சென்றமை இப்போதும் எனக்கு நினைவிருக்கின்றது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி அமிர்தலிங்கம் , தந்தை செல்வா ஆகியோர் தம்மை சந்திக்கும் மக்களின் குறைகளைக்கேட்டு குறித்துக்கொண்டு கொழும்புக்குச் சென்று அது தொடர்பில் நடவடிக்கை எடுத்து அதனை அந்த மக்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களின் இத்தகைய பணிகளை மறக்க முடியாது.
இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் 1983ஆம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து டில்லிக்கு, அமிர்தலிங்கத்தை அழைத்துப் பேசியிருந்தார். மிகப்பெரிய இராஜதந்திரி என்று அமிர்தலிங்கத்தை இந்திராகாந்தி அம்மையார் விழித்துக் கூறியிருந்தார். அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை என மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் தூதுவர் சாய்முரளியும் கலந்துகொண்டிருந்தார்.