Home இலங்கை இன்று ஆலயங்களைக் கட்டுக்கின்றார்கள். ஆனால் ஆலயங்களை வழிபடுவதற்கு ஆட்கள் இல்லை.

இன்று ஆலயங்களைக் கட்டுக்கின்றார்கள். ஆனால் ஆலயங்களை வழிபடுவதற்கு ஆட்கள் இல்லை.

by admin

எமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும். அவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களைக்கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது எமது சமூகம் முன்னர் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்ததோ அதேபோன்றதொரு நிலைமை உருவாக இப்போதே அடித்தளம் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை மழலைகள் பூங்காவின் ‘மலரும் மழலைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய திருமணமண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியீட்டு வைத்து பிரதம விருந்தினர் உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

நாங்கள் சிறுபராயத்தில் இருந்தபோது இருந்த நிலைமைக்கும் தற்போதுள்ள நிலைமைக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சமூகம் சுயநலம்மிக்கதாக மாறிவிட்டது.

எனவே சிறுவயதிலிருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பழக்கவேண்டும். இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தலைமையிலான குழுவினர் என்னைச் சந்தித்தனர்.

அந்தக் குழுவில் இருந்த ஒருவர், தங்கள் நாட்டில் முன்பள்ளி பருவத்திலிருந்தே வகுப்பறைகளைச் சுத்தம் செய்வது, மலசலகூடங்களைச் சுத்தம் செய்வது என அனைத்தையும் பிள்ளைகளைக்கொண்டே செய்விக்கின்றோம். எதிர்காலத்தில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்பும் அவர்களே தங்கள் இடங்களை துப்புரவாக வைத்திருப்பார்கள் எனச் சொன்னார்.

அது உண்மை. நாம் இங்கு அவ்வாறான பழக்கவழக்கங்களை பழக்குவதில்லை. இதனால்தான் என்னவோ, வீதிகளில் இரவு நேரத்தில் கொண்டு வந்து குப்பைகளைப்போட்டு விட்டுச் செல்கின்றார்கள்.

தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை நாங்கள் முன்னெடுத்து முதல் நாளில் குப்பைகளைத் துப்புரவு செய்தாலும் மறுநாள் மீண்டும் குப்பைகளைக் கொண்டு வந்து போடுகின்றார்கள். இந்த மனநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.

அதனால்தான் முன்பள்ளிப் பருவத்திலிருந்தே சரியான பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுக்கச் சொல்லி சொல்கின்றேன்.

இன்று ஆலயங்களைக் கட்டுக்கின்றார்கள். ஆனால் ஆலயங்களை வழிபடுவதற்கு ஆட்கள் இல்லை. ஆனால் வழக்குகளுக்கு வாதாடுவதற்கும் மாத்திரம் ஆட்கள் இருக்கின்றார்கள். இந்த மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன?

அதனால்தான் சிறு வயதிலிருந்தே சரியான எண்ணங்களை பிள்ளைகளிடத்தில் விதைத்து எதிர்கால சமூகத்தை சரியான வழியில் கட்டியெழுப்பவேண்டும்.
பொலிஸ் நிலையங்களுக்குச் சென்றால் நீதி நிலைநாட்டப்படும் என மக்கள் முழுமையாக நம்பவேண்டும். செல்வாக்குள்ளவர்கள், பணவசதியுடைவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பார்கள் என்ற மக்களின் எண்ணங்கள் மாறும் வகையில் பொலிஸ் திணைக்களமும் நடந்துகொள்ளவேண்டும்.

இந்த மாற்றங்களுக்கு அடிகோலுவதாக பிள்ளைகளுக்கு சரியான ஒழுக்கநெறியைப்போதிக்கவேண்டும். நல்ல தலைமைத்துவப்பண்பை பிள்ளைகளிடத்தே வளர்க்கவேண்டும்.

எதிர்காலத்தில் மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த தலைவர்கள் உருவாக்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More