யாழ்ப்பாணம் (Jaffna) – பலாலி விமான நிலையத்திற்கும் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குமிடையில் சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது என கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி அவசியம். பாதை வலையமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பவையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு வருகை தரும் புலம்பெயர் தமிழர்கள், தமது பயண பொதிகளை பேருந்துகளில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிட்டுக் கொழும்பிலிருந்து சென்னைக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைகின்றனர் எனக் கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் குறிப்பிட்ட தூதுவர் அரசாங்கம் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருக்கின்றமையை தான் சந்தித்த சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து அறியகக் கூடியதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.