மலேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனை இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, மலேசியாவை சேர்ந்த தமிழரான பன்னீர்செல்வம் என்பவர் மீது போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனை இன்று நிறைவேற்றப்படும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்த நிலையில், பன்னீர் செல்வத்திற்கே தெரியாமல்தான் கடத்தல் இடம்பெற்றதாகவும், உண்மையான குற்றவாளி அவர் இல்லை எனவும் இதனால் தண்டனையை நிறுத்த வேண்டும் எனவும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதனையடுத்து பன்னீர்செல்வத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். பன்னீர் செல்வம் நேரடியாக இந்த குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என மன்றில் வாதிடப்பட்ட நிலையில் குறித்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பன்னீர்செல்வத்தின் தண்டனையை நிறுத்தி வைக்க சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.