Home இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் புத்தர்சிலையை வைத்து விவசாயக் காணிகள் அபகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் புத்தர்சிலையை வைத்து விவசாயக் காணிகள் அபகரிப்பு

by editorenglish

புல்மோட்டை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட புல்மோட்டை சாத்தனமடுக் குளப்பகுதியின்கீழ் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளின் காணியில் பௌத்த மதகுரு ஒருவர் புத்தர் சிலையை வைத்து அதனைச் சுற்றியுள்ள விவசாய காணிகளில் பல வருட காலமாக விவசாயம் மேற்கொண்டுவந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தடைவிதித்து வருவதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அதனை சுற்றியுள்ள 10 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும், கிட்டத்தட்ட அதனை சுற்றியுள்ள 100 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அவர் கையகப்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவிய மக்கள் நடமாட்டம் இல்லாத 2019ஆண்டு காலப்பகுதியில் குறித்த பகுதியில் புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2021ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்போது இருக்கின்ற பாரிய புத்தர்சிலை வைக்கப்பட்டது.

பௌத்த மக்கள் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையைப் பராமரிக்க எவரும் இல்லை. இதை நாங்கள்தான் பராமரித்து வருகின்றோம்.

முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் புல்மோட்டையில் பௌத்த மக்களே இல்லாத பகுதிகளில் பூஜா பூமி என்ற பெயரில் காணிகளை கையகப்படுத்தி புத்த சிலைகளை வைத்து நிலங்களை ஆக்கிரமிப்பதோடு இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையினையும் குறித்த பௌத்த மதகுரு மேற்கொண்டு வருகின்றார்.

இதனால் காலாகாலமாக அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்த விவசாயி ஏ.எல்.எம்.மீராசாகிபு என்பவர் மீது தொல்லியல் பொருட்களை சேதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டி கைது செய்து வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி 2021.12.12 அன்று இறந்து போனார்.

எனவே ஆட்சிக்கு வந்திருக்கின்ற புதிய அரசாங்கம் இவ்வாறான விடயங்களைக் கவனத்திற்கொண்டு பூஜாபூமி என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 01 கிராம சேவகர் பிரிவில், புல்மோட்டை கிராமத்தில் ஸ்ரீ சத்தர்ம யுக்திக்க வன செனசுன என்ற விகாரைக்காக நில அளவையாளர் தலைமையதிபதியின் 2019.09.09 ஆம் திகதியைக் கொண்ட இறுதிக் கிராம வரைபட இல. 30 என்பதில் குறித்துக் காட்டப்பட்டுள்ளவாறாக காணித்துண்டு இல. 1145 ஆலடிப்புலவு காணி மற்றும் தோண்டாமுறிப்பு காணி (7.1466 ஹெக்டேயர்), காணித்துண்டு இல.1146 ஆலடிப்புலவு காணி மற்றும் தோண்டாமுறிப்பு காணி (4.3715 ஹெக்டயார்), காணித்துண்டு இல. 1147 (11.7193 ஹெக்டேயர்), காணித்துண்டு இல. 1148 ஆலடிப்புலவு காணி (7.4712 ஹெக்டேயர்), காணித்துண்டு இல. 1153 நாவலடி மோட்டை காணி (1.0438 ஹெக்டேயர்) எனக் குறித்துக் காட்டப்பட்டுள்ளவாறான பரப்பளவில் மொத்தமாக 31.7524 ஹெக்டேயர் காணி 2023.08.15 அன்று வெளியிடப்பட்ட 2345/38 இலக்க அதிவிசேஷ வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விகாரையானது குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 2018.05.30 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More