குழந்தைகள் பந்தையகுதிரைகள் அல்லர்
வெற்றிக் கம்பங்களை நோக்கி
விரசித்துரத்துவதற்கு
குழந்தைகள் எடுத்தாடும் காவடிகள் அல்லர்
குதித்தாடி குரவைப் போட்டு
நேர்ச்சை வைப்பதற்கு
குழந்தைகள் காட்சிப்பொருட்கள் அல்லர்
ஏற்றி எடுத்து
காட்டாப்புக் காட்டுவதற்கு
குழந்தைகள் இறப்பர்பந்துகள் அல்லர்
திக்குகள் எங்கும்
எறிந்தெறிந்து விளையாடுவதற்கு
குழந்தைகள் கற்பனை பறவைகள் அல்லர்
பெரியவர் எண்ணங்களை
ஏற்றிப் பறக்க வைப்பதற்கு
குழந்தைகள் ஆய்வுக்கூட உயிரிகள் அல்லர்
இரசாயனங்களில் வளர்வதற்கு
குழந்தைகள் முழுமனிதர்களாகும்
உயிர் மூச்சுக் கொண்ட மனித முளைகள்
குழந்தைகள் இயல்பாய் வளரும் மூலிகைகள்
மூலிகைகள் அறிவோம்
மூலிகை இயல்புகள் அறிவோம்
இயற்கையின் வீரியங்களென குழந்தைகள் வளர்க
சி.ஜெயசங்கர்