இன்றைய யாழ்ப்பாணம் இது அமரர் செல்லப்பா நடராசா அவர்களின் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 1959 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட நாற்பத்தியொரு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகிறது.
சமூகப் பண்பாட்டு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான அத்தியாவசியமான கற்கைகளுக்கான கை நூலாக இன்றைய யாழ்ப்பாணம் திகழ்கின்றது.
மிகத் தரமான தொகுப்பும், வடிவமைப்பிலும் காணப்படும் இப்பணி பேராசிரியர் செல்லையா கிருஸ்ணராசா அவர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. அவசிய வாசிப்பிற்குரிய இந்நூலை அவர்களது குடும்பத்தினரே வெளியிட்டிருக்கின்றனர்.
செல்லப்பா நடராசா அவர்களது அறிவும் உணர்வும்; அவரது அரசியல் நோக்கும் தன்னிறைவான விடுதலை வாழ்க்கையை ஆக்குவதற்கும், வாழ்வதற்குமானதாக இருப்பதன் ஆழ்ந்த வெளிப்பாடுதான் அவரது வாழ்வும் தொழிலும்.
அவர் எழுதி இருக்கின்ற விடயங்கள், அவை சார்ந்த ஆளுமைகளது தூரநோக்கும் அதற்கான உழைப்பும், நம்பிக்கையும் கொண்ட மனிதர்களின் உருவாக்கம் இன்றைய காலத்தின் அடிப்படை தேவையாகி இருக்கின்றது.
ஆயினும் எவ்வித வாசிப்பும், செயற்பாடுகளும் தேவையற்ற போட்டி பரீட்சைகளுக்கான கல்விச்சூழலில் வாசித்தே ஆகவேண்டிய இந்நூலை அறிவுலகு என்று சொல்லப்படும் தராதர பத்திரங்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கெடுக்கும் சூழலுக்குள் எப்படி எடுத்துச் செல்வதென்பதே பெருங்கேள்வியாக இருக்கின்றது.
கல்வி, உயர்கல்வி கற்கும் இளந்தலைமுறையினருக்கான வாசிப்பிற்குரியதாக இந்நூலை எடுத்துச் செல்வது தன்னிறைவும், சகவாழ்வும் நிறைந்த சமூகங்களது உருவாக்கங்களுக்கு வழியிடுவதாக இருக்கும். இந்நூல் மாணவர்களுக்கு மட்டுமல்லாது சகல தரப்பினருக்கும் உரிய அவசிய வாசிப்புக்கானது என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.
குறிப்பாக அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மிகவும் குறிப்பாக அரசியல்வாதிகள் இன்நூலை, இத்தகைய நூல்களை வாசிப்பதும், தேடி வாசிப்பதும் அத்தியாவசியமாகின்றது.
ஏனெனில் மனிதர்கள் எப்படி வாழ்ந்திருக்கின்றார்கள், செயற்பட்டிருக்கின்றார்கள், விடயங்கள் எவ்வாறு காணப்பட்டிருக்கின்றன என்பதை இந்நூல் பேசுகின்றது. இத்தகைய நூல்கள் பேசுகின்றன.
இவற்றினை அறியத்தந்த நூலாசிரியருக்கு நன்றியுடையவராவோம். இந்நூலால் அறிவார்ந்த மனிதர்களிடமிருந்தும், விடயங்களில் இருந்தும் கற்றுக் கொள்வோம்.
இந்நூல் யாழ்ப்பாணத்தின் கதை மட்டுமல்ல சகல வழிகளிலும் ஆதிக்க நீக்கம் பெற அல்லது பலதள காலனியநீக்கங்கள் பெற முனைந்து வாழுகின்ற சமூகங்களது கதையும் ஆகும்.
இன்றைய சூழலில் உலகின் பல பகுதிகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் பல்வேறு தேசிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள். பல விடயங்களை மொழிபெயர்ப்புக்களின்வழி பண்பாட்டுப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நூலிலும், இத்தகைய நூல்களிலும் காணப்படுகின்ற விடயங்கள் பல மொழிகளின் உலகறிய பரவும் வகை செய்தலும் தேவையானதாக இருக்கின்றது.
ஈழத்தமிழர்தம் மேற்படிப் பணிகள் தன்னார்வம் காரணமாகவே நிகழ்த்தப்பட்டு வருவது மதிக்கப்பட வேண்டியதும் கொண்டாடப்பட வேண்டியதுமாகும்.
பேராசிரியர் சி.ஜெயசங்கர்