மாற்கு மாஸ்ரருடன் பழகியபோது, தனது சிறுபருவத்தில், ஓவியர் ச. பெனடிக்ற் (ஆசிநாதன்) என்பவர் மாவடிப் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்ட ‘சென். சாள்ஸ்’ பாடசாலைக் கட்டடத்தில், மாலைவேளைகளில் இலவசமாக நடத்திய ஓவிய வகுப்பில் படித்ததைக் கூறியுள்ளார். அவரது ஆர்வமும் ஓவியப் பயிற்சியும் அங்கிருந்துதான் விரிவடைந்தன ; எனவே மாற்குவின் குருவாக அவரைக் குறிப்பிட லாம். குருவின் மீதுள்ள மரியாதை காரணமாகவே, பிற்காலங்களில் தான் நடத்திய ஓவிய வகுப்புகளைப் பணம் வாங்காது இலவசமாக நடத்தவேண்டுமென்ற முடிவை யும் அவர் எடுத்து, நடைமுறைப்படுத்தினார்.
எனது இளமைப் பருவத்தில் பெனடிக்ற் அவர்களைக் கண்டிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் டேவிட் வீதி – பாங்க்ஷால் வீதிச் சந்திப்பகுதியில் அவர் வசித்தார். பிற்காலத்தில் ‘தீப்பொறி’ அந்தனிசில் என பிரபலமானவரின் உறவினர் அவர். பெனடிக்ற் உயரமான தோற்றங்கொண்டவர் ; கழுத்தைச் சுற்றி ‘மப்ளர்’ அணிந்திருப் பார். அவரைப் பார்க்கும்போது ‘ஒருமாதிரியானவர்’ என்ற விநோத எண்ணம், ஏனோ எனக்குத் தோன்றியிருக்கிறது.
ஒருதடவை, குருநகர் சென். ஜேம்ஸ் ஆலய முன்புற வீதியில், ஒரு வீட்டின் முன்னால் கதிரையில் அமர்ந்தபடி, கோவிலின் முன்புறத்தைக் கோட்டோவியமாக வரைந்தபடியிருந்தார் ; கொஞ்சநேரம் அருகில் நின்றபடி அவர் வரைவதை ஆவலுடன் பார்த்தேன். அறுபதுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருந்த ‘விவேகி’ மாத இதழில், அக்கோட்டோவியம் அட்டையில் வெளிவந்தது. இவ்வாறு யாழ்ப்பாணக் கோட்டை, மணிக்கூட்டுக் கோபுரம் முதலியவற்றைப் பார்த்து அவர் வரைந்த கோட்டோவியங்கள் சில, விவேகி இதழின் அட்டைப் படங்களாக வந்துள்ளன. கோட்டோவியங்கள் வரைவதிலும், மனிதர்களின் உருவ ஓவியங்கள் வரைவதிலும் அவர் திறமைவாய்ந்தவரெனக் கேள்விப்பட்டுள்ளேன். வணிகரீதியில் முழுநேர ஓவியரான அவர் இங்கு போதிய ஒத்துழைப்பும் வருமானமும் கிட்டாததில், தமிழ்நாடு சென்று வசித்தார் ; அங்கேயே இறந்ததாகவும் தெரிகிறது. அங்கு வசிக்கை யில் செல்வவளம்மிக்க – உயர்மட்ட செட்டியார் குடும்பங்களைச் சேர்ந்த பலரின் உருவ ஓவியங்களை வரைந்துள்ளதாகவும், அவர்கள் அவரை நன்கு மதித்துப் பேணியதாகவும் அறியமுடிகிறது ; எனினும் ஓவியங்கள்பற்றிய துல்லியமான விபரங்கள் கிட்டவில்லை. ஆயினும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நீண்டகாலம் தமிழ் ஆசானாகப் பணியாற்றிய பொ. கந்தையா (இவர் கா. சிவத்தம்பியின் ஆசிரியரும், ஜே. கிருஷ்ணமூர்த்திபற்றி நூலெழுதியுள்ள க. நவரேந்திரனின் தந்தையுமாவார்) எழுதிய ‘முதுமை நினைவு’ (1966) என்னும் செய்யுள் நூலுக்கு வரைந்த எண்ணெய்வர்ண ஓவியம், அந்த நூலில் இடம்பெற்றுள்ளது.
ஓவியர் ச. பெனடிக்ற் எழுதிய ‘கற்காலக் கலையுஞ் சுவையும்’ என்னும் நூலை, noolaham. org இணையத்தளத்தில் அண்மையில்தான் கண்டேன். மானிப்பாயி லுள்ள அ. மி. இ. . அச்சகத்தில் 1959 இல் அச்சிடப்பட்ட இந்நூலை, திருக்கோண மலையிலுள்ள ‘ஈழக் கலைமன்றம்’ என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்நூலி லுள்ள மதிப்புரையில் தமிழறிஞர் சே. தனிநாயகம் அடிகள் பினவருமாறு குறிப்பிட் டுள்ளார் :
“ஆக்கப்பண்பு நிறைந்த இத்தகைய நூல்களையே உயர்நிலை வகுப்புக்களிற் பாடப் புத்தகங்களாக மாணவர் பயில்தல் வேண்டும். திரு ஆசிநாதன் தமிழ் உலகில் இன்னும் நன்றாக அறியப்படவேண்டியவர். இவர் ஆற்றலையும் கலையையும் நாம் பயன்படுத்தாவிடின் இத்துறையில் நாமே வறியவராவோம்.”
ஓவியர் பெனடிக்ற் போன்ற முக்கிய ஆளுமைகள் பற்றிய முறையான ஆவணப் பதிவுகள் இல்லாமை, கவலைக்குரியதே ; பலதுறைகளிலும் நிலவும் இத்தகு வெற்றிடக் குறைபாடு நீக்கப்படுவதற்குரிய விழிப்புணர்வு, நம்மவரிடையே பரவலாக ஏற்படவேண்டும்! 19. 02. 2025
ooo