உக்ரைனின் ஜனாதிபதி செலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான சந்திப்பிற்குப் பின்னா் வெள்ளை மாளிகையை விட்டுச் சினத்துடன் வெளியேறும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கியும் நேற்று வெள்ளிக்கிழமை (28/02/2025) வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது முரண்பட்டுக் கொண்டுள்ளனர்.
நன்றியுடன் இருக்குமாறு செலன்சிக்குக் கூறிய டிரம்ப் மேலும் மூன்றாம் உலகப் போரைக் கொண்டுவரும் சூதாட்டத்தில் செலன்ஸ்கி ஈடுபட்டதாகவும் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
டிரம்ப் , ரஸ்யாவால் உருவாக்கப்பட்ட தவறான தகவல் வெளியில் வாழ்கிறார் என்று செலென்ஸ்கி கருத்துத் தெரிவித்து ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அத்துடன், ரஸ்ய ஜனாதிபதியுடன் உரையாடிய பின்பாக டிரம்ப் போரிற்குக் காரணம் செலன்ஸ்கியே எனக் கூறிவந்தமையும் செலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று குற்றஞ் சாட்டி வந்தாா்.
ஏற்கனவே, போரில் உக்கிரைனுக்கு அமெரிக்கா உதவியமைக்கு ஈடாக உக்ரைன் தனது கனிம வளங்களை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டுமென்றும் அதற்குரிய ஒப்பந்தங்களைப் பற்றி இரு நாட்டு ஜனாதிபதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் பேசப்படும் என்றும் அமெரிக்கத் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், வெள்ளை மாளிகையில் சந்திப்பை முடித்துக்கொண்டு உக்ரைன் ஜனாதிபதி சினமுடன் வெளியேறியிருக்கிறாரென்பது குறிப்பிடத்தக்கது.