கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் வௌிநாடு செல்வதை தடுத்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தேசபந்து தென்னகோனின் ஹோகந்தர மற்றும் கிரியுல்ல வீடுகளை சோதனை செய்த போதிலும், அவர் அந்த வீடுகளில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் காவற்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக பெயரிடுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளின் குழு ஒன்று, ‘ஹரக் கட்டா’வின் சகாக்கள் குழு ஒன்றை கைது செய்வதற்காக மாத்தறை வெலிகம பிரதேசத்திற்கு சென்றிருந்தது. அப்போது, வெலிகமவில் அமைந்துள்ள W 15 ஹோட்டல் பகுதியில் இருந்து சிவில் உடையில் இருந்த காவற்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அந்த திசையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசபந்து தென்னகோன் தலைமறைவு!
நீதிமன்றத்தால் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்ட முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், முன்னாள் காவற்துறை மா அதிபரை கைது செய்ய காவற்துறையினர் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகக் கூறினார்.