யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடு அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் சனிக்கிழமை (28/02/2025) அன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட நிலப்பகுதியை தனிப்பட்ட தேவைகளுக்காக குத்தகை அடிப்படையில் பெற, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக ஆவன செய்துள்ளார்.
அந்தக் கடிதத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் கையளித்தவுடன் காடுகள் நிறைந்த சம்பந்தப்பட்ட பெருமளவான நிலப்பகுதியை அனுமதியின்றி இயந்திரம் கொண்டு இரவோடு இரவாக முற்றாக அழித்துள்ளார். சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையும் குறித்த நபர் தொடர்ந்து அனுமதியின்றி காடுகளை அழித்துள்ளார்.
இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த நபர் குத்தகைக்கு காணியை பெறுவதற்கு கடிதம் தந்துள்ளதாகவும், காடுகளை அழிப்பதற்கு தாம் அனுமதியளிக்கவில்லை என்றும், குறித்த பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்தினுள் இருப்பதால் தம்மால் அனுமதி கொடுக்க முடியாதென்றும் அவ்வாறு அவர் காடுகளை அழித்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.