உக்ரைனுக்கு 2.26 பில்லியன் பவுண்டுகள் (2.84 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) கடனாக வழங்குவதாக மார்ச் முதலாம் திகதியன்று உக்ரைனுடன் பிரித்தானியா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஜி – 7 நாடுகளின் அசாதாரண வருவாய் முடுக்கத்திற்கான (ERA) கடன் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தக் கடனை வழங்கும் ஒப்பந்தமானது , பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைச் சந்திக்க ஜனாதிபதி விளாமிடிர் செலன்ஸ்கி இலண்டன் சென்ற போது கைச்சாத்தாகியிருக்கிறது.
“உக்ரைனின் பாதுகாப்பில் பிரித்தானிய தொடர்ந்தும் கரிசனையுடன் இருக்கிறது. உக்ரைனின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் பங்களிக்கும் இந்த ஒப்பந்தமானது இதை உறுதிப்படுத்துகிறது” என்று உக்ரைனின் நிதி அமைச்சர் செர்ஹி மார்ச்சென்கோ இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடன் “உக்ரைனின் தேவைகளுக்கு ஏற்ப போர்க் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 2024 இல், ஜி – 7 நாடுகள் உக்ரைனுக்கு சுமாா் 50 பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்குவதாக உறுதியளித்த ஒரு ஒப்பந்தத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.