போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவா் தொிவித்துள்ளாா்.
மேலும் அங்கு உரையாற்றிய அவா் தேனி மாவட்டத்துக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 4 ஆண்டுகளில் திமுக அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. முல்லை பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டுவந்ததால்தான் மக்கள் முன் நெஞ்சை நிமர்த்தி நிற்கின்றோம்.
அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்களே பாராட்டுகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு நன்மை அளித்தது.ஏழை, எளிய மாணவர்கள் படிக்க ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை நெஞ்சை பதறச் செய்கிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறுமிகள் அப்பா.. அப்பா.. என்று கதறும்போது அப்பா ஸ்டாலின் எங்கே போனார்.
தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலை. வழக்கில் யார் அந்த சார் என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோஷூட் செய்து வருகிறார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல. ஸ்டாலின் மாடல்.” என அவா் தொிவித்தாா்