கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திய மக்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் ஒரு பல்கலைக்கழக மாணவரை அறிமுகப்படுத்தினார். அவர் பொது வேட்பாளருக்கான அணியுடன் இணைந்து இயங்குவார் என்றும் சொன்னார்.அந்த மாணவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குத் துடிப்பாகச் செயல்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு காணப்பட்டார்.
இது பழைய கதை. அண்மையில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மேற்படி மாணவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் விதத்தில் கவர்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி அது. அவர் ஏன் அதைப் பகிர்ந்திருக்கிறார் என்பதனை அறிவதற்கு பல்கலைக்கழகத்தில் அவருக்கு கற்பித்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார்,”அந்த மாணவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களில் ஒருவர் போலத் தோன்றுகிறார்” என்று. “ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது வேட்பாளரின் பக்கம் வந்தாரே?” என்று கேட்டேன்.”அது அப்பொழுது.இப்பொழுது அவர் தேசிய மக்கள் சக்திக்கு வந்து விட்டார்.படிக்கும் காலங்களில் அவர் தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்து சக மாணவர்களோடு தர்க்கப்படுவார்.ஆனால் படித்து முடிந்ததும் அவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் பக்கம் நிற்கிறார்” என்றும் அந்த ஆசிரியர் கூறினார்.
அந்த மாணவர் பகிர்ந்த காணொளியானது அனுரவை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே அதுபோன்ற சிறிய காணொளித் துண்டுகள் பல வெளிவந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் ப்ரோமோஷனுக்கான அணி வினைத்திறனோடும் படைப்புத்திறனோடும் செயல்படுகின்றது. அனுரவை ஒரு கதாநாயக பிம்பமாகக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு திட்டமிட்டு அவ்வாறான காணொளிகளை உருவாக்கி வருகிறது. அவற்றில் காணப்படும் தொழில்சார் திறன், கலை நயம் போன்றன அனுரவைச் சுற்றி ஓர் ஒளிவட்டத்தைக் கட்டமைக்கும் நோக்கமுடையவை.
ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பத் தேவையான முகம், உடல்வாகு, உடல் மொழி போன்றன அனுரவுக்கு உண்டு. அவற்றையும் சேர்த்து மாற்றத்தின் அலை ஒன்றுக்குத் தலைமை தாங்கும் கதாநாயக பிம்பமாக அவரைக் கட்டமைத்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில் தமிழ் நோக்கு நிலையில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கலாம். அனுரவைப் போல ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கத்தக்க அம்சங்களைக் கொண்ட தமிழ் தலைவர்கள், தலைவிகள் யாருமே இப்பொழுது களத்தில் இல்லையா? அல்லது அவ்வாறு கதாநாயக பிம்பங்களைக் கட்டியெழுப்ப முடியாத ஒரு சமூக,உளவியல்,அரசியற் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்குள் இருக்கிறது தமிழரசியலின் சீரழிவும் சாபக்கேடும்.
கடந்த 15ஆண்டுகளாக ஈழத்தமிழ் கூட்டு உளவியலானது கொந்தளிப்பானதாகவே காணப்படுகின்றது.கடந்த 15ஆண்டு கால தலைமைத்துவ வெற்றிடத்தில் தன்னைத்தானே தின்னும் ஒரு சமூகமாக; தானே தன்னை நம்பாத; ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்துகின்ற; தன் பலம் எதுவென்று தெரியாமல் தூர்ந்து போகும் ஒரு சமூகமாக ஈழத் தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா?
உளவியலில் Pistanthrophobia – “பிஸ்டாந்ரோ ஃபோபியா” என்ற ஒர் ஆங்கிலப் பதம் உண்டு.அதன் பொருள், யாரையும் நம்புவதற்கு பயம்.இறந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான, கசப்பான அனுபவங்களின் விளைவாக மற்றவர்களை நம்பத் தயாரற்ற எரிச்சலுடன் கூடிய பயம். (An irritating fear of trusting others, typically resulting from previous negative experiences) போருக்குப் பின்னரான கூட்டு மனவடுக்களின் போதும் இதுபோன்ற உளவியல் விளைவுகளைக் காண முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு கூட்டுக் காயங்கள்,கூட்டு மன வடுக்களுக்குள் அழுத்திக் கிடக்கும் ஒரு சமூகத்தின் கொந்தளிப்பான கூட்டு உளவியலுக்குத் தலைமை தாங்கும் அரசியலானது ஒரு விதத்தில் கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். அதை ஒருவிதத்தில் குணமாக்கல் செயற்பாடு என்று கூடச் செல்லலாம். அவ்வாறு இறந்த காலத்தின் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மணவடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு அரசியலுக்குத் தலைமை தாங்கும் சக்தி மிக்க தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லையா? அல்லது இருப்பவர்களை மேலெழ விடாமல் ஒருவர் மற்றவரைக் கடித்துத் தின்னும் அல்லது ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்தும் அல்லது மேலெழ முயற்சிப்பவரின் காலைப் பிடித்து இழுத்து விழுத்துகின்ற ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா? அதனால்தான் தமிழ் அரசியலில் கதாநாயக பிம்பங்களைக் கட்டமைக்க முடியவில்லையா?
அரசியலில் கதாநாயக பிம்பங்களை கட்டமைப்பது என்பது தனிமனித துதிக்கும் தலைமை வழிபாட்டுக்கும் வழிவகுக்கும் என்ற விமர்சனங்களை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வாக்கு வேட்டை அரசியலில் ஜனவசியம் மிக்க பிம்பங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதுவும் டிஜிட்டல் ப்ரோமோஷனின் காலத்தில் அந்த முக்கியத்துவம் பல மடங்கு அதிகம். அதைவிட முக்கியமாக,சுமார் 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடத்துள் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட அரசியலுக்கு பண்புரு மாற்றம் செய்வதற்கு அவ்வாறான தலைமைகள் அவசியம். ஆனால் அப்படிப்பட்ட தலைமைகள் மேலெழ முடியாத அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலின் கூட்டு உளவியலானது சிதைந்து போய்க் கிடக்கின்றது.
ஐக்கியத்துக்காக உழைப்பவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று கூறும் அளவுக்கு பிஸ்டாந்ரோ போபியா ஒரு சமூக அரசியல் நோயாக மாறிவிட்டது. ஐக்கியப்படுமாறு கேட்பவர்களை எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்தும் நோய் ஈழத் தமிழர்கள் மத்தியில் மட்டும்தான் உண்டா?
தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்களை அதிகம் உற்பத்தி செய்த ஒரு கட்சியாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளின் பின் ஞானம் பெற்று கொள்கை வழி ஐக்கிய முயற்சிகளில் இறங்கியிருப்பதை ஒரு திருப்பகரமான மாற்றம் என்றே வர்ணிக்க வேண்டும்.
ஆனால் கொள்கை எது? ஒரு மக்களை அவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய பலம், பலவீனங்களோடு ஒரு திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஒரு தேசம் என்பது புனிதர்களுக்கு மட்டுமல்ல.ஒரு தேசத்துக்குள் தியாகிகள் மட்டும் இருப்பதில்லை.நல்லவர்கள்,கெட்டவர்கள்,புனிதர்கள்,கபடர்கள், நபுஞ்சகர்கள்,மனம் திருந்தியவர்கள், மனம் திருந்தாதவர்கள்,விலை போனவர்கள்,ஒத்தோடிகள்,எதிர்த்தோடிகள் மறுத்தோடிகள் என்று எல்லா ஓட்டங்களும் ஒரு சமூகத்துக்குள் இருக்கும். அந்த எல்லா ஓட்டங்களையும் ஒரு பொது எதிரிக்கு எதிரான பேரோட்டமாக மாற்றுவதுதான் தமிழ்த் தேசிய அரசியல்.கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத் தமிழ் தேசியக் கட்சிகளால் முடியவில்லை. அவர்களால் தமது கட்சிகளையும் கட்டியெழுப்ப முடியவில்லை மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை.
தங்களைக் கதாநாயகர்களாக அல்லது தியாகிகளாகக் கட்டமைப்பதற்காக தமது அரசியல் எதிரிகளை வில்லன்களாகச் சித்திரிக்கும் ஓர் அரசியல் பாரம்பரியமானது முடிவில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் அநேகம் பேரை சொந்த மக்களே நம்ப முடியாத வில்லன்களாக பார்க்கும் ஒரு பரிதாபதாபகரமான இடத்தில் வந்து நிற்கின்றதா?
உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தலைமைப் போட்டிக்குள் சிக்கி ஏறக்குறைய தூர்ந்து போய்விட்டது.அந்தக் கெட்ட முன்னுதாரணமானது தமிழரசியலின் குறிகாட்டியும் கூட. சுமந்திரன்,சிறீதரன்,சாணக்கியன் போன்றவர்கள் தங்களுக்கென்று டிஜிட்டல் ப்ரோமோஷன் அணிகளை வைத்திருக்கிறார்கள்.அவை அவர்களை கதாநாயகர்களாகக் கட்டமைக்கின்றன. ஆனால் கட்சியை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவர முடியாத தலைவர்களை தமிழ் மக்கள் கதாநாயகர்களாகக் கருத மாட்டார்கள்.சில சமயம் வில்லன்கள் ஆகத்தான் பார்ப்பார்கள்.
விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்த புதிதில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகத் தோன்றினார்.தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடு அவருக்கு இருந்த ஜனக் கவர்ச்சி மேலும் அதிகரித்தது. ஆனால் அவரே அதனைப் போட்டு உடைத்தார். இப்பொழுது அவருடைய ஜனவசிய முகம் பரிதாபகரமான விதத்தில் சுக்குநூறாகிவிட்டது. இது விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளில் மேலெழுந்த பெரும்பாலான எல்லா தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். தமிழ்த் தேசிய அரசியலில் மேல் எழுகின்ற எந்த ஒரு தலைவருமே தன் ஜனவசியத்தை ஏன் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை?
ஏனென்றால் யாருமே தாங்கள் முன்வைத்த இலட்சியத்தை நோக்கி தமது கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை; தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. தன் பலம் எதுவென்று தெரியாமல், தானே தன்னில் நம்பிக்கை இழந்து, ஒருவர் மற்றவரை நம்பாத, ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,ஒருவர் மற்றவரை வெறுக்கின்ற, ஒரு சமூகமானது தன்னை ஒரு தேசம் என்று அழைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களையும் ஒரு தேசமாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.தங்களையும் கட்சிகளாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.
தமிழ் மக்களுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை ஒளியாகவும் முன்னுதாரணமாகவும் நிற்கக்கூடிய தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? அல்லது அப்படிப்பட்ட தலைவர்கள் மேலெழு முடியாத ஒர் அரசியல் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா? அதற்குக் கட்சிகள் பொறுப்பில்லையா?
இந்த சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் உளவியல் சூழல் தொடருமாக இருந்தால் அனுரவை நோக்கி ஆர்வத்தோடு பார்க்கின்ற;அவரை கதாநாயகராகக் கொண்டாடுகின்ற இளையவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.அது இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.