Home இலங்கை நூறு கோடி மக்களின் எழுச்சி – 2025! (ONE BILLION RISING – 2025) கந்தசாமி பிரித்தியா.

நூறு கோடி மக்களின் எழுச்சி – 2025! (ONE BILLION RISING – 2025) கந்தசாமி பிரித்தியா.

by admin

நூறுகோடி மக்களின் எழுச்சி என்பது ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. வன்முறைகள் இல்லாத வாழ்தலைக் கொண்டாடுவதை இது நோக்காகக் கொண்டது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனும் தொனிப்பொருளில் இவ்வெழுச்சி வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

2012 ஆம் ஆண்டு உலக சனத்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையானது 700 கோடியாக இருந்துள்ளது. அதில் பாதித்தொகையினருக்கு மேலாக பெண்கள் உள்ளனர். உலகில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள் என்ற புள்ளிவிபரத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட 100 கோடி பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிலைவாதியான Eve Ensiler என்பவர் ஆராய்ந்து 2012 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி 100கோடி மக்கள் எழுச்சியை பிரச்சாரம் செய்தார். இதன்படி 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை உலகளாவிய ரீதியில் இந்த எழுச்சி நடத்தப்பட்டு வருகின்றது

இப்பிச்சார நடவடிக்கையானது பெண்களுக்கு நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்! ஆடுவோம்! பாடுவோம்! கலைகளின் ஊடாக மகிழ்ச்சியான வாழ்வை உருவாக்குவோம்! என்ற அடிப்படையில் நடைபெறுகின்றது. அதன் அடிப்படையில் இலங்கையில் 2013 இல் இருந்து இவ் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நூறுகோடி மக்களின் எழுச்சி என்ற பிரச்சாரக் கொள்கையில் பல விடயங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளன. வாழ்தலைப் புரிந்துகொள்ள ஆணோ, பெண்ணோ, பால் பல்வகைமையினரோ அவரவர் நிலையில் இருந்து மாத்திரம் யோசிக்காமல் மற்றவர் நிலையிலிருந்தும் யோசித்து தீர்மானங்களை எடுத்தல், நேசித்தல், நம்பிக்கை கொள்ளல், கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்தல் எனப் பல விடயங்கள் பற்றி பேசுகின்றது.

இவ்வெழுச்சியானது, மட்டக்களப்பில் உள்ள பல குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்றது. மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக்குழு, வன்முறைகள் அற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள், சமதை பெண்நிலைவாத நண்பிகள் என அனைவரும் இணைந்து இந் நூறுகோடி மக்களின் எழுச்சி தினத்தை வருடந்தோறும் முன்னெடுத்து வருகின்றனர்.

 

இதுபோல இவ் வருடமும் வன்முறைகளைக் களைந்து “அன்பினாலான வாழ்தல் செய்வோம்” என்ற தொனிப்பொருளில் அமைந்த 100 கோடி மக்களின் எழுச்சி பிரச்சாரக் கொண்டாட்டமானது 2025 மாசி 14-ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அனுராதபுரத்தில் உள்ள பின்பரா பண்ணை, கிரிபிடியாகம, கெக்கிராவ என்ற விவசாய நிலத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் நானும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது.

இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கொழும்பு போன்ற பல்வேறு இடங்களிலும் இருந்து பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்புகள் என்று பல தரப்பினர் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் அவர்களது மனங்களில் ஊறிக் கிடந்த உணர்வுகள் பல கலை நிகழ்ச்சிகளாகவும் வெளிவந்தன. அவை ஒவ்வொன்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எவ்வாறு எதிர்கொள்வது, நமக்கான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதனை பறைசாற்றின.

 

இந்த நிகழ்ச்சியானது பல தொனிப்பொருள்களின் கீழ் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு விடயங்களுக்கும் தனித்தனியே கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியினை ஆரம்பிக்கும் முகமாக அங்கு கூடியிருந்த அனைவரும் வட்டமாக கைகோர்த்து நின்றனர். அதன் பின்பு சமதை பெண்ணிலைவாத நண்பிகள் குழுவினால் “உன் தோழமையில் நான் இருக்கையிலே காலத்தின் அருமையை உணர்ந்தேனே….” எனும் பாடல் ஆரம்பிக்க எல்லோரும் இணைந்து அப்பாடலை பாடினர். பின்னர் இந்நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திய சாவிஸ்திரி பெண்கள் அமைப்பினரால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்து இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைப்பின் அல்லது குழுவின் சார்பாக ஒருவருக்கு உலர்தானியங்கள் வைத்த சிறிய மண்பானை அல்லது மண்முட்டி கொடுத்து வரவேற்று எல்லா பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் பிரதான வரவேற்புக் கூடாரத்தினுள் அழைத்து வந்து மங்கல விளக்கேற்றினர்.

இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் வெவ்வேறு நிறங்களிலாலான சிறு Badge கொடுக்கப்பட்டதுடன் நூறுகோடி மக்களின் எழுச்சி தினக் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான செயற்றிட்டங்களும் இனிதே ஆரம்பிக்கப்பட்டன.

அந்தவகையில் 1வது கூடாரத்தில் சமதை பெண்ணிலைவாத நண்பிகளால் உள்ளுர் மெட்டுகளில் அமைந்த பல செயல்வாதப் பாடல்கள் பாடப்பட்டன. அதில் நானும் கலந்து கொண்டது சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது. இங்கு பாடப்பட்ட பாடல்கள் நாம் வாழ விரும்பும் வாழ்க்கைமுறை பற்றிக் கூறுவதாகவும், நாம் எதிர்கொள்ளும் சவால்களை எவ்வாறு தாண்டிச் செல்வது என்பது பற்றிச் சித்தரிப்பதாகவும், நாம் வாழுகின்ற இயற்கையை நாம் வன்முறை செய்யக்கூடாது, சக மனிதர்களுடனும் வன்முறைகளில் ஈடுபடக்கூடாது என்ற பல கருத்துக்களை கூறுகின்றனவாகவும் அமைந்திருந்தன.

நாங்கள் பாடியது மட்டுமல்லாமல் அங்கு இருந்தவர்கள் நாங்கள் பாடியதைக் கேட்டு எங்களுடன் சேர்ந்து கைகளைத் தட்டி தாளமும் போட்டு பாடினர். இன்னும் சிலர் வன்முறைகளற்ற வாழ்விற்கான கவிதைகளையும், பாடல் வரிகளையும் எழுதித் தந்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குத் தெரிந்த சிங்களமொழிப் பாடல்களையும் பாடி மகிழ்ந்ததுடன் நாங்கள் பாடுகின்ற செயல்வாதப் படல்களுக்கு தங்களுடைய விருப்பத்தையும் தெரிவித்து இருந்தார்கள். மொழி என்பது முக்கியமான ஒன்றாக காணப்பட்டாலும் மொழி என்பதற்கு அப்பால் கலை என்பது இரசிக்ககூடிய ஒன்றாகவும், அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடியது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உணர்ந்து கொண்டேன்.

 

இதனைத் தொடர்ந்து 2வது கூடாரத்தில் வன்முறைகளற்ற வாழ்விற்கான காண்பியக் கலைஞர்களினால் கலைகளுக்கூடாக எழுச்சி கொள்ளுவோம் என்ற தலைப்பின் ஊடாக ஒரு கூட்டுச் செயற்பாடு நடைபெற்றது. செம்பருத்தியம் பூவானது வன்முறைகளற்ற வாழ்தலுக்கான குறியீடாக அன்றைய தினத்தில் பயன்படுத்தப்பட்டது. அந்தவகையில்,

1. செவ்வரத்தம் பூ ஒன்றினை வரைந்து அதன் ஒவ்வொரு இதழினுள்ளும் வன்முறையற்ற வாழ்தலைக் கொண்டாடுதல் அல்லது வன்முறையற்ற வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதற்கான சொற்கள் அங்கு வருகை தந்திருந்த செயற்பாட்டாளர்களால் எழுதப்பட்டன. அச்சொற்கள் வன்முறைக்கு எதிரானதாக அமைந்திருந்தன. உதாரணமாக நம்பிக்கை, அன்பு, நேர்மை, உண்மை, ஒற்றுமை என்பன அதில் எழுதப்பட்டிருந்தன.

2. ஒரு வெள்ளைக் கைத்தறிச் சேலை ஒன்றில் செம்பருத்தியம் பூவானது அச்சாக பதிக்கப்பட்ட ஒரு கூட்டுச் செயற்பாடு நடைபெற்றது. அங்கு வருகை தந்த அனைவரும் வயது வேறுபாடின்றி இக் கலையாக்கச் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

மேற்கூறப்பட்ட விடயங்களில் ஏன் செம்பருத்திப் பூ பயன்படுத்தப்பட்டது எனில் எங்களுடைய நாட்டில் இப் பூவானது எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. அதாவது தமிழர், முஸ்லிம், சிங்களவர், கிறிஸ்தவர் என்று எல்லோருடைய வீடுகளிலும் காணப்படுகின்றது. இங்கு இனம், மதம், மொழி, வர்க்கம் என்பவற்றைத் தாண்டி எல்லா இடங்களுக்கும் பொதுவான ஒரு மலராக இப் பூ காணப்படுகின்றது. காலங்காலமாக எங்களுடைய நாட்டில் இருக்கின்ற ஒரு பூவாகவும் காணப்படுகின்றது. இது ஆதிகாலத்தில் இருந்த எமது முன்னோர்கள், எங்களது நாட்டில் ஏற்பட்ட யுத்தம், பொருளாதாரப் பிரச்சினைகள், தற்காலத்தில் இடம்பெற்று வருகின்ற பிரச்சனைகள், குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகள் என்பவற்றைப் பார்த்து வருகின்ற மலர் என்றும் சொல்லலாம்.

இவ்வாறு எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பதனாலும் எல்லாப் பிரச்சனைகளையும் கண்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்கின்ற மலராக இருப்பதனாலும் இம்மலரை உணர்வுகளின் வெளிப்பாடாக அல்லது அடையாளமாக எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு ஒரு அடையாளப் பொருளாக எடுத்ததனால்தான் அன்றைய தினம் அனைவரும் அந்தப் பூவில் வன்முறைகளுக்கு எதிரான வார்த்தைகளை வரி வடிவமாகப் பயன்படுத்தியதுடன் வெள்ளைத்துணியில் அன்பின் அடையாளமாகவும் அப்பூவைப் பதித்தனர் என்றும் சொல்லலாம். இக் கூட்டுச் செயற்பாட்டினால் அழகிய புடவை வடிவமைக்கப்பட்டது. இறுதியில் அன்பின் அடையாளமாக அங்கு வந்திருந்த எல்லோராலும் உருவாக்கப்பட்ட செம்பருத்தி பூக்கோலம் போடப்பட்ட சேலையின் முழு வடிவம் அனைவர் முன்னிலையிலும் காண்பிக்கப்பட்டபோது எல்லோருடைய அன்பும் மகிழ்ச்சியும் பன்மடங்காகியது.

கலையை யார் வேண்டுமானாலும் இரசிக்கலாம். ஆனால் இங்கு உள்ளுறையாகச் சொல்லப்படுகின்ற விடயம் என்னவெனில் இச் செயற்பாட்டில் தன்னை முற்றுமுழுதாக ஈடுபடுத்துபவர் வன்முறை செய்யாதவராக மாற வேண்டும். இவ்வளவு காலமும் எப்படியெல்லாம் இருந்தோம் என்பதைத் தவிர்த்து இனி எப்படி எமது வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போகின்றோம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும். இதுதான் கலையால் ஒன்று இணைவோம் என்ற செயல்திட்டத்தின் கீழ் சொல்லப்பட்ட விடயமாகும்.

3ஆவது கூடாரத்தில் ‘விடுதலைக்காக எழுவோம்’ என்ற விடயத்தின் கீழ் இரண்டு விதமான அறிக்கைகள் பற்றிப் பேசப்பட்டன. முதலாவது அறிக்கையில் மக்கள் வாழும் பகுதிகளில் குரங்குகள் தொல்லைகளைத் கட்டுப்படுத்துவதற்கான கோரிக்கை பற்றிக் கூறப்பட்டிருந்தது. இரண்டாவது அறிக்கையில் வன்முறையான வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் வன்முறையற்ற வாழ்க்கையை வாழ விரும்புவதுடன் பிள்ளைகளை வன்முறையாளர்களாக அல்லாமல் அன்பின் வழியில் வாழ்பவர்களாக வளர்த்தெடுப்போம் எனும் உறுதிப்பாடு எடுப்பதாகவும் அமைந்திருந்தது. இவ்விரு அறிக்கைகளையும் வாசித்து அக்கருத்துக்களுக்கு உடன்பட்டவர்கள் அவ் அறிக்கைகளில் கையொப்பமிட்டனர். இவ் அறிக்கைகளில் முதலாவது அறிக்கையானது எமது நாட்டின் அரச தலைவருக்கு அனுப்பப்படுகின்ற ஒரு மனுவாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக, 4வது கூடாரத்தில் உள்ளுர் உணவுப் பரிமாற்றம் இடம்பெற்றது. ஒரு மனிதர் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான விடயமாக உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் அமைகின்றது. அந்தவகையில் நாம் தற்காலத்தில் பயன்படுத்தி வருகின்ற உணவு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு விடயமானது இந்த 100 கோடி மக்களின் எழுச்சிப் பிரச்சாரத்தில் பெரிதான ஒரு தெளிவை எனக்கு ஏற்படுத்தியது. நாம் எமது இயற்கைக்கும், பூமித்தாய்க்கும் வன்முறை செய்யாமல் இருக்க வேண்டும் எனில் எமது உள்ளுர் உணவுகளை நாம் உண்ண வேண்டும், அவ் உணவுப் பொருள்கள் பற்றிய விடயங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இச் செயற்பாடுகள் நடைபெற்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அந்தவகையில், அன்றைய தினம் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு உணவுப் பொருட்களை கொண்டு வந்திருந்தனர்.
1 .மட்டக்களப்பு – அவல்
2. மன்னார் – முட்டை மா, பனங்கிழங்கு
3. புத்தளம் – பனங்கிழங்கு
4. அநுராதபுரம் – இலைக்கஞ்சி, கௌப்பி, சிரட்டையில் தேநீர்
5. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வடை

இவை அனைத்தும் அவர்களது ஊர்களில் பெண்கள் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களாக காணப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் சில உணவுப் பொருட்கள் அங்கு விற்பனையும் செய்யப்பட்டன. இது அவர்களது வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதாகவும் அமைந்திருந்தன. அத்துடன் மரக்கன்றுகள், மரக்கறிகள் என்பனவும் அவர்களால் விற்பனை செய்யப்பட்டன. மேலும் சில உணவுகளைப் பதப்படுத்தும் முறையை அறிந்து அதனைப் பதனிட்டு விற்பனை செய்தும் இருந்தனர்.

இவ்வாறாக 4 கூடாரங்களிலும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதனை அடுத்து மேலும் பல கலைநிகழ்ச்சிகளும் அன்றைய தினம் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வருகை தந்த குழுக்களினால் நிகழ்த்தப்பட்டன. அந்தவகையில்

1. சாவிஸ்திரி பெண்கள் அமைப்பிலுள்ள சில வயோதிபப் பெண்கள் சிங்களப்பாடல் பாடியதுடன் சில பெண்கள் சிங்களப் பாடலுக்கு அபிநய நடனமும் ஆடினர்.
2. யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த வல்லமை குழுவினரால் “வன்முறை சிந்தனை ஒழித்து நல்ல சிந்தனை……….” எனும் பாடல் பாடப்பட்டது.
3. அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் செயற்பாட்டளர் ஒருவரால் “அயன்ன கியன்ன…. எனும் சிங்கள மொழிப் பாடல் பாடப்பட்டது.
4. மட்டக்களப்பு சூர்யா பெண்கள் அமைப்பினரால் “மூடிக்கிடந்த கதவுகள் முற்றுகை தகர்ந்தன, தேடித் தேடி அலுத்த வாழ்வில் பாதை ஒன்று தெரியிது….” என்ற பாடல் பாடப்பட்டது. இப் பாடலானது அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமைந்தது.
5. சாவிஸ்திரி பெண்கள் அமைப்பினரால் கோலாட்டமும் ஆடப்பட்டது.
6. நாடக ஆற்றுகை ஒன்றும் இடம்பெற்றது. ஊதியத்திற்காக வெளி வேலைக்குப் போகாமல் வீட்டில் எமக்காக எல்லாம் செய்யும் பெண்களை நாம் பார்க்கும் பார்வை என்ன? அவர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று நாம் சொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி நானும் என் தோழியர்களும் இணைந்து ‘அம்மா சும்மா இருக்கிறா?!’ எனும் நாடகத்தை ஆற்றுகை செய்தோம்.
7. மட்டக்களப்பிலிருந்து வருகை தந்த சமதை பெண்ணிலைவாத நண்பிகளால் நீதிக்கான பறை இசைக்கப்பட்டது. இந்த வருடமும் 100 கோடி மக்களின் எழுச்சியை முழு மனதுடனும் அதி உற்சாகத்துடனும், அனைவர் முன்னிலையிலும் பறையறைந்து மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள் சமதை பெண்ணிலைவாத நண்பிகள். “என்றைக்கும் எங்கள் பறை இசை ஓயாது எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்ற கருத்து அவர்கள் அன்றைய தினம் பறை அறைந்ததிலிருந்து நான் உணர்ந்து கொண்ட விடயமாக இருக்கின்றது.

இவ்வாறு பல செயற்திட்டங்கள் வருடா வருடம் 100 கோடி மக்களின் எழுச்சி தினத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த வருடமும் 14ஆம் திகதி மாசி மாதம் 2025 அன்று அநுராதபுரத்திலுள்ள கெக்கிராவ என்ற விவசாய நிலத்தில் மேற்கூறப்பட்ட விடயங்கள் செயலாக்கம் பெற்றிருந்தன.

இதில் கலந்துகொண்டு என்னுடைய பங்களிப்பினையும் வழங்கியது எனக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இந்த வருடத்தில் 100 கோடி மக்களின் எழுச்சியில் இணைந்த என் பங்களிப்பு இனிவரும் ஒவ்வொரு வருடமும் தொடருமென்ற நம்பிக்கையில் அன்றைய நாளில் இறுதியாக பாடப்பட்ட கும்மி பாடலிற்கான ஆடலினையும் ஆடினேன். அத்துடன் இறுதியாக நூறு கோடி மக்களின் எழுச்சி தினப் பாடலும் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. அப் பாடலுக்கு ஏற்றவாறு நாங்கள் நடனம் ஆடினோம். அங்கு குழுமியிருந்த அனைத்து பெண்களும் சிறந்த முறையில் நிகழ்ச்சியினை முடித்து வைத்தார்கள்.

இவ்வாறாக இவ்வருடமும் 100 கோடி மக்களின் எழுச்சியானது “பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்தலை ஆடுவோம்! பாடுவோம்! கொண்டாடுவோம்!” என்ற தொனிப்பொருளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருந்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More