யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டமையால் , அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் இன்றைய தினம் புதன்கிழமை காலை (26.03.25) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
பேரணி ஆரம்பிக்கப்பட்டு சிறிது நேரத்தில் மருத்துவபீடத்திற்கு முன்பாக பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டு , பேரணி சென்ற மாணவர்களை தடுத்து நிறுத்தினர்.
உள்ளூராட்சி தேர்தல் காலமாக இக்கால பகுதி உள்ளமையால் , பேரணிகள் , ஊர்வலங்கள் நடாத்த தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியே மாணவர்களை காவற்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தாம் , அரசியல் ஊர்வலம் செல்லவில்லை. வேலை வாய்ப்பு கோரியே போராட்டம் நடாத்துவதாக மாணவர்கள் கூறிய போதிலும் , காவற்துறையினர் பேரணியை தொடர்ந்து செல்லவிடாது தடுத்து நிறுத்தி இருந்தனர்.
அதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் , மாணவர்கள் பேரணியை கைவிட்டு , பல்கலைக்கழகத்தினுள் திரும்பியிருந்தனர்.