யாழ்ப்பாணத்தில், வலு சக்தி அமைச்சரின் நிகழ்வில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் ஊடகவியலாளர்கள் பதிவிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்துள்ளார்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பங்கேற்புடன் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் நடுவில் பிரதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது குறித்து அவதானித்த ஊடகவியலாளர்கள் அதனை காணொளியாக்கினர். இதனை ஊடகவியலாளர்கள் தமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.
இதனை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், ஊடகவியலாளர்களுடன் “இது மின்வெட்டல்ல மண்டபத்தில் மாத்திரமே மின் துண்டிக்கப்பட்டது. எங்களை அப்ப கோப்பைகள் என நினைக்க வேண்டாம் ” என கடும் தொனியில் தர்க்கம் புரிந்துவிட்டு சென்றார்.
சில நிமிடங்களில் மீண்டும் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தான் தவறாக கூறிவிட்டேன் என தெரிவித்து ஊடகவியலாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.