28/03/2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், இராசதுரை அரங்கில் உலக நாடக தின விழாவை முன்னிட்டு பேராசிரியர் சி. ஜெய்சங்கர் அவர்களின் எழுத்து, நெறியாள்கையின் கீழ் 2021/2022 நாடகமும் அரங்கியலும் சிறப்பு கற்கை மாணவர்களினால் தயவுசெய்து சத்தம் போடாதீர் அல்லது இது என்ன சந்தையா? என்ற மேடை நாடகம் அரங்கேறியது. இந்நாடகமானது, எங்களின் அறிவினில்இ எங்களின் திறனில் தங்கி நிற்போம் நாங்கள் என்ற எண்ணக் கருவை மையப்படுத்தி அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தை அன்றைய தினம் பார்வையிட வந்தவர்கள் குறைவாக இருந்தாலும்,வந்திருந்தவர்கள் இந்நாடக மூலம் அன்றைய தினம் ஒரு சிறந்த விடயத்தை புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். முதலில் இந் நாடக ஆற்றுகையில் கலந்து கொண்ட அனைத்து ஆற்றுகையாளர்களுக்கும், இதனை நெறிப்படுத்திய பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களுக்கும் அவருக்கு உதவியாக இருந்த உதவி நெறியாளர் செல்வன். பரமேஸ்வரன் கண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாடசாலை என்பது சந்தையா? இந்த எண்ணக்கருவை முதலில் எம் சமூகத்தவர்களிடம் இருந்து மாற்ற வேண்டும்.இது எனது கருத்து. சந்தை ஒருபோதும் பாடசாலையாகாது. ஆனால் பாடசாலையை ஒரு சந்தையாக மாற்றலாம்…அது உங்களின் கைகளில்தான் இருக்கிறது….இவ்வாறு நான் கூறியதற்கு காரணம்? இந்த நாடகத்தினை பார்வையிட்டவர்கள் அந்த விடயத்தை அறிந்திருப்பார்கள். அந்தவகையில்இ
இந் நாடகத்தில் இரண்டு விதமான களங்கள் காட்டப்பட்டன. ஒன்று பாடசாலை மற்றயது சந்தை. தலைப்பிற்கு தகுந்தவாறு இந்நாடகக் கதையின் களமும் இருந்தது. அத்துடன் இங்கு சொல்லப்பட்ட விடயமும் தலைப்புக்கு பொருத்தமாக இருந்தது எனலாம்.
தயவுசெய்து சத்தம் போடாதீர் அல்லது இது என்ன சந்தையா? என்ற நாடகத்தின் ஆரம்பத்தில் வீட்டிலிருந்து பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்காக பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.அவ்வாறு சிரமப்பட்டுத்தான் பிள்ளைகளை பாடசாலைக்கு பெற்றார்கள் அனுப்பி வைக்கின்றார்கள். அங்கு சென்றதும் படிப்பிலேயே கவனம் செலுத்தாமல் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு இருக்கையில் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரினால் இது என்ன பாடசாலையா ?அல்லது சந்தையா? என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றது.
ஏன் பாடசாலையோடு சந்தையை ஒப்பிடுகின்றார்கள். சந்தை என்றால் ஏன் இழிவாக நினைக்கிறார்கள்.நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் எண்ணியிருந்தேன். ஆனால் அந்த நாடகத்தை அத் தருணத்தில் பார்வையிட்டதன் பின்புதான் ஏன் சந்தையை இழிவாக நினைக்கிறார்கள் என்ற ஒரு கேள்வி அந்த நிமிடத்தில் என்னுள் எழுந்தது. ஆனால் அந்த நாடக இறுதியில் கிடைத்த ஒரு வித உணர்வு பாடசாலைக்கும், சந்தைக்கும் எண்ணற்ற வித்தியாசம் இருக்கின்றது என்பதை மையூட்டாக புரிய வைத்தது.
நாடக ஆற்றுகையின் இறுதியில் ஆற்றுகையாளர்களால் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும்போது எங்களிடம் இருக்கும் சந்தோசம் ஏன் பாடசாலைக்கு போகும் போது எங்களிடம் இருப்பதில்லை?அதற்கான காரணம் என்ன? ஆனால் அங்கே இன்னுமொரு விடயமும் சொல்லப்பட்டது. வீட்டிலிருந்து சந்தைக்கு வரும்போதும், சந்தையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போதும் அலாதியான மன மகிழ்ச்சியுடன் நாங்கள் செல்கின்றோம்.
மேலே கூறப்பட்ட விடயங்கள் இரண்டையும் நோக்கும்போது, பாடசாலையில் பிள்ளைகள் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கப்படுகின்றார்கள். தங்களுக்குப் பிடித்த மாதிரி அவர்களால் இருக்க முடிவதில்லை. ஏனெனில் பாடசாலையில் குறித்த பாடத்திட்டத்திற்கு அமைவாகவே பாடங்கள் நடைபெறுகின்றன. குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரமே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுக்கின்றார்கள். அவற்றை விட்டு வெளியுலகு சார்பான எந்த ஒரு விடயங்களையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை.ஆகவே தான் காலையில் வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும்போது உற்சாகம் இல்லாமலும் சோம்பல் தனமாகவும் பாடசாலைக்கு சென்று, பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது நாங்கள் வெளியுலகை பார்வையிட போகின்றோம் என்ற குதூகலத்துடன் வீடு திரும்பிகின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
ஆனால் சந்தையில் அவ்வாறு இல்லை அங்கு எப்படித்தான் சத்தம் கனதியாக இருந்தாலும் அங்கு பொருட்களை விற்பவர்களும், அப்பொருட்களை வாங்குபவர்களும் தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்கின்றார்கள். தாங்கள் அறிந்திராத பல விடயங்களை சந்தையில் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு அங்குள்ளவர்களுக்கு கிடைக்கின்றது. காரணம் சந்தை என்பது ஒரு உள்ளூர் உற்பத்திக்கு ஏற்ற மாதிரியான இடமாக இருக்கின்றது. உதாரணமாகச் சொல்லப்போனால் நாங்கள் அறிந்திடாத பல மரக்கறிகள், மீன் வகைகள், கீரை வகைகள் மற்றும் பலவகையான கனி வகைகள் என்று அனைத்தையும் அறிந்து கொள்கின்றோம். அவற்றை அறிந்து, அதனை உண்டு, நலமாக வாழ்வதற்கான வழியை நாம் சந்தையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். எனவே இங்கு அவர்களது அறிவுக்கு எட்டிய வகையில், அவர்களது திறனில் தங்கி வாழப் பழகிக் கொள்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்நாடகத்தில் சில விடயங்களை பாடல்கள் மூலம் கதையாசிரியர் வெளிப்படுத்தியிருந்தார்.
சில விடயங்களை வெறும் வாய் வார்த்தையாக சொன்னால் பிறர் புரிந்து கொள்ள மாட்டார்கள்.அதே விடயத்தை ஏதோ ஒரு புது விதமான வர்ணணைகளுடனோ அல்லது நயக்கும் விடயத்தினை உள்ளடக்கி கூறுகின்ற பொழுது அதை தங்களுடைய மனதில் நிலை நிறுத்தி வைத்திருப்பார்கள். அதற்கு ஏற்றார் போலவே இவ் நாடகத்திலும் கதை ஆசிரியர் இடையியே முக்கியமான சில விடயங்களை மக்கள் இலகுவாக புரிந்து கொள்வதற்காக சம்பாசனைகளின் இடை நடுவே பாடல்களை புகுத்தி இருக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன். அந்த வகையில் மீன் விற்கும் காட்சி, மரக்கறி விற்க்கும் காட்சி, பழங்கள் விற்க்கும் காட்சி மற்றும் கீரை வகைகளை விற்கும் காட்சி என்பவற்றில் பின்னணியாக அதற்கு ஏற்ற மாதிரியான பாடல்களை உள்ளூர் மெட்டுகளில் ஆற்றையாளர்களால் பாடினார்கள்.
அந்த வகையில் உள்ளூர் பழங்கள் சம்பந்தமான சம்பாசனைகள் இடம் பெறுகின்ற பொழுது’எத்தனை எத்தனை எத்தனை கனி வகை…..’ என்ற பாடல் பாடப்பட்டது. இப் பாடலினூடு நாம் கண்டிராத பல வகையான கனிகள் பற்றி அறிந்து கொள்ள கூடியதாகவும், அக்கனிகளை உண்பதினால் எமக்கு என்ன பயன் கிடைக்கின்றது என்பது பற்றியும் அறியக் கூடியதாக இருந்தது. அத்துடன் இவ் நாடகத்தில் உள்ளூர் பழங்களில் ஒன்றாக எடுத்துக்காட்டப்பட்டது நாவல் பழமாகும். நாவல் பழத்தை விலைக்கு வாங்க கேட்கின்றார்கள் அதனுடைய விலை அதிகமாக இருக்கின்றது. இருந்தாலும் அதனுடைய விலையை குறைத்து வாங்குவதற்கு முற்படுகின்றார்கள். அதே நேரம் மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை வாங்குவதற்கு விலை கேட்கின்றார்கள். அப் பழங்களுக்கு சொல்லப்படுகின்ற விலை நாவல் பழத்தின் விலையை விட பல மடங்காக இருக்கின்றது. ஆனாலும் அதை எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் வாங்குகின்றார்கள். இங்கு உள்ளூர் பழங்களின் பெறுமதியை உணராதவர்களாக மக்கள் காணப்படுகின்றார்கள் என்பது இந் நாடகத்தில் மையூட்டாக ஆசிரியர் குறிப்பிடும் ஒரு விடயமாக இருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் மீன்கள், கீரை வகைகள் பற்றிய சில பாடல்களும் அங்கே ஆற்றுகையாளர்களினால் பாடப்பட்டன. இத்தகைய பாடல்கள் உள்ளூர் மெட்டுக்களில் அமைந்த பாடல்களாகவும், நாங்கள் இதுவரை கேட்டிராத பாடல்களாகவும் இருந்தது புதுவித அனுபவத்தை எனக்கு தந்தது.
நாடக இறுதியில் ‘நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில் என்றும் நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில்…. ‘ என்ற பாடல் பாடி இந்த உலகத்தில் எங்களுடைய அறிவினில் எங்களுடைய திறத்தினில் நாங்கள் தங்கி வாழ்வதோடு மட்டுமில்லாமல் இன்பமான வாழ்க்கையையும் எங்களுடைய உள்ளூர் உற்பத்தி திறன்களினால் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுவதாகவும் இப்பாடல் அமைந்தது என்று சொல்லலாம்.
இந்நாடகத் தொடக்கத்தில் ஆற்றுகையாளர்கள் சற்று பதற்றத்துடன் காணப்பட்டது போன்ற மனநிலை தோன்றியது ஆனால் படிப்படியாக நாடகத்தினுடைய வளர்ச்சி கட்டம் எய்தும் வரை அப் பதட்டமானது இல்லாமல் போனதையும் நான் அவதானிக்க கூடியதாக இருந்தது. நான் இதுவரையில் பார்த்த ஆற்றுகைக்கும் தயவு செய்து சத்தம் போடாதீர் அல்லது இது என்ன சந்தையா? என்ற நாடக ஆற்றுகைக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருந்ததை நான் கண்கொண்டு அவதானித்தேன். காரணம்இ நான் இதுவரை பார்த்த மேடை நாடகங்கள் அனைத்தும் ஒப்பனை அலங்காரங்கள், காட்சி அமைப்பு, ஒளி அமைப்பு, இசையமைப்பு என்று எல்லா விதமான துணைக்கலைகளையும் கொண்டு நடிகர்கள் ஆற்றுகை செய்ததை அவதானித்திருக்கின்றேன். ஆனால் இந்த நாடக ஆற்றுகை அதற்கு புறம்பாக அமைந்திருந்தது. எந்தவித துணை கலைகளின் பயன்பாடு இன்றி நடிகர்கள் தாங்களாகவே நடித்தனர் அங்கு ஒரு உண்மைத்தன்மை வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன். துணைக்கலைகளின் பயன்பாடு இல்லாமல் ஒரு நாடகத்தை ஆற்றுகையாளன் ஆற்ற முடியும் என்பதை இந்நாடக ஆற்றுகை மூலமாக நான் ஒரு நாடக கலைஞராக இருந்து அறிந்து கொண்டேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது .இத்தகைய காரணங்களினாலும் ஒரு சில பார்வையாளர்களுக்கு இந்நாடகத்தின் மூலம் சொல்ல வந்த கருத்தினை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம் என்பதும் என்னுடைய கருத்தாக இருக்கின்றது.
ஒரு நாடக கலைஞனாக இருந்து இந்த நாடகத்தை பார்வையிட்டது எனக்கு மன நிறைவாக இருக்கின்றது. அத்துடன் நாம் அறிந்தராத பல விடயங்கள் சமூகத்தில் கொட்டி கிடக்கின்றது அதை நாம் பாடசாலை வளாகத்தில் மட்டுமே கற்றிட முடியாது அதையும் தாண்டி வெளி உலகிலும் கற்றுத் தெரிய வேண்டும் என்பதற்கு சான்றாக இங்கு சந்தை என்ற ஒரு களம் எடுத்துக்காட்டப்பட்டது. சந்தை என்பது ஒரு இழிவான இடம் அல்ல. அங்கு நாம் கண்கொண்டு பார்க்கக்கூடிய, நாம் உணரக்கூடிய எங்களுடைய வாழ்க்கையில் நலமாக நாம் எவ்வாறு வாழ வேண்டும், எத்தகைய விடயங்கள் எங்களுக்கு தேவையாக இருக்கின்றது என்ற பல்வேறு விடயங்களை நாம் சந்தைக்கு செல்வதனூடாக அறிந்து கொள்ளலாம் என்ற பல விடயங்கள் இந்த நாடக ஆற்றுகை மூலம் நான் அறிந்து கொண்ட ஒரு விடயமாகவும் இருக்கின்றது.
ஆகவே பாடசாலையை சந்தையாக மாற்றுவது நம்முடைய கைகளில் தான் இருக்கின்றது எங்களின் அறிவினில் எங்களின் திறனில் நாங்கள் தங்கி நிற்க வேண்டும். அதுதான் எங்கள் வாழ்வின் உச்சம் என்று நான் நம்புகின்றேன்.
‘நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில் என்றும் நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில்
இயற்கை தந்த இனிய வாழ்வை இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்…..’
இந்நாடக ஆற்றுகையானது ஆத்மார்த்தமான கருத்துக்களையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களையும் உள்ளடக்கிய சிறப்பான, கருத்துப் பொதிந்த ஒரு நாடக ஆற்றுகையாக இருந்தது.
செல்வி.கந்தசாமி பிரித்தியா.
சி.ஜெயசங்கரின் தயவு செய்து சத்தம் போடாதீர்கள் அல்லது இது என்ன சந்தையா? நாடகம்
தயவு செய்து சத்தம் போடாதீர்கள் அல்லது இது என்ன சந்தையா? நாடகம் கல்வியியல் அரங்கச் செயற்பாட்டினூடு உருவாக்கப்பட்ட ஒரு நாடகமாகும். இந்நாடகம் சி.ஜெயசங்கர் அவர்களினால் எழுதப்பட்டதாகும்.
தற்கால சூழலில் மாணவர்களின் இயல்பு நிலை என்பது கட்டுப்படுத்தப்படுவதுமாகவும், தண்டிக்கப்படுவதுமாகவுமே அமைகின்றது. வகுப்பறை சூழலில் மாணவர்களின் இயல்பு நிலை என்பது அதிகாரத்தினால் குழப்படி எனப்படுவதும், வீட்டுச் சூழலில் அச்செயற்பாடுகளை பெரியவர்கள் தாம் வகுத்த விதிமுறைகளிற்கு மாறாக இருக்கின்ற பட்சத்தில் அவர்களை கட்டுப்படுத்துவதும், சில சமயங்களில் பெருமிதம் கொள்வதும் என ஒழுங்கு எனும் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவும், அது கட்டமைப்பவர்களைப் பொறுத்து மாறுபடும் என்பதும் இந்நாடகத்தினூடு கூறப்படுகிறது.
மாணவர்கள், பெரியவர்களிற்கு பிடிக்காத விடயங்கள் தான் இங்கு குழப்படியாகப் பார்க்கப்படுகிறது, ஏன் அவர்களிற்கு தமது செயற்பாடுகள் குழப்படியாக தெரிகிறது?, அவர்கள் தம்முடன் நேரம் செலவிடாமைதான் இதற்கான காரணம் என யதார்த்தத்தை உணர்ந்து நாடகத்தில் அவர்கள் எழுப்பும் வினாக்கள் பார்வையாளரிற்கு மாத்திரமின்றி சமூகத்திடம் எழுப்பப்பட்ட வினாக்களாகும். மாணவர்கள் பாடத்திட்டத்தைக் தாண்டி வினாக்கள் எழுப்பும் போது அவர்கள் கண்டிப்பின்பேரால் திசை மாற்றி மீண்டும் பாடத்திட்டத்திற்குள்ளேயே அழைத்து வரும் சூழலைக் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும், வகுப்பறைக் கற்றல் செயற்பாடுகள் மாணவர்களை தமது சூழலிலிருந்து அந்நியப்படுத்தி மேற்குலகம் சார்ந்ததாகவும், உள்ளூர் விடயங்களில் மாணவர்கள் தம் கவனத்தை செலுத்தவிடாமல் இருட்டடிப்பு செய்வததையும் இந்நாடகத்தின் கதை வெளிப்படுத்திநிற்கின்றது. இக்கதையில் வகுப்பறைச் சூழல், சந்தைச் சூழல் என்பவற்றை இரு களங்களாகக் கொண்டு கதையை நகர்த்தியுள்ளார் நாடக ஆசிரியர் சி.ஜெயசங்கர்.
வகுப்பறையில் குழப்படி என்ன நிந்திக்கப்படும் ஆசிரியரால் “இதென்ன பள்ளிக் கூடமா? சந்தையா?” எனும் கேள்வியினூடு ஆரம்பிக்கப்பட்ட இந்நாடகம் வகுப்பறையை அடுத்து சந்தைக் காட்சி ஆரம்பமாகி சந்தையின் ஐனநாயகத்தன்மையையும், தனித்துவத்தையும் பல்வேறு பிரதேசத்து மரக்கறிகள், ஊண் உணவு வகைள், பழ வகைகள் என்பன சங்குமிக்கும் இடமாகவும் வசனங்க;டாகவும், பாடல்களூடாகவும் நடிகர்கள் வெளிப்படுத்தினர். மேலும் இங்கு உள்ளூர் உணவுகளான உள்ளூர் மீனினங்கள், உள்ளூர் மரக்கறிகள், உள்ளூர் பழங்கள் என்பவற்றை சந்தையில் விற்கும் பொருட்களாகக் பாடல்களினூடும், வசனங்களூ;டும் பார்வையாளர் தாம் மறந்த பல விடயங்களை மீட்டச் செய்துள்ளார் என்பது இங்கு கவனிக்க வேண்டியது. “தயவு செய்து சத்தம் போட வேண்டாம்” என ஒருவர் கூறும் போது “சந்தையில வந்து சத்தம் போட வேண்டாம் எண்டு சொல்லுது இந்தாளுக்கு ஏதோ பிரச்சினை போல” என சக நடிகர் கூறும் வசனத்திலிருந்து சந்தையின் இயல்பில் அதனை ஏற்று நடக்கும் மக்களின் மனநிலையை வெளிக்காட்டுகிறார்.
உலக நாடக நாளானது கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் என்பவற்றினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிகழ்வாகும். சென்ற வருடம் கல்வியியல் அரங்க உருவாக்குனர் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் சத்திய சோதனை நாடகம் நுண்கலைத்துறையின் தயாரிப்பில் சி.ஜெயசங்கர் அவர்களின் நெறியாள்கையில் செல்வன் ப.கண்ணன் அவர்களின் உதவி நெறியாள்கையில் நுண்கலைத்துறை மாணவர்களால் உலக நாடக நாளன்று(27.03.2024) கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மண்டப அரங்கிலும், மறுநாள்(28.03.2024) சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும் மேடையேற்றம் கண்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பல இடங்களில் மேடையேற்றம் கண்டது.
இந்த ஆண்டும் நுண்கலைத்துறையின் தயாரிப்பில் சி.ஜெயசங்கரின் எழுத்துரு, நெறியாள்கையிலும், செல்வன் ப.கண்ணனது உதவி நெறியாள்கையிலும் 2021/2022 கல்வியாண்டு நாடகமும் அரங்கியலும் சிறப்புக் கற்கை மாணவர்களால் “தயவு செய்து சத்தம் போடாதீர்கள் அல்லது இது என்ன சந்தையா?” எனும் நாடகம் உலக நாடக நாளன்று(27.03.2025) கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த மண்டப அரங்கிலும், மறுநாள்(28.03.2025) சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கிலும் ஆற்றுகை செய்யப்பட்டது.
-கனா