நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விசா செயலாக்க முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதியன்று உயர் நீதிமன்ற உத்தரவின்படி இலுக்பிட்டிய, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக அவரது பிணை மனு ஜனவரி 29 ஆம் திகதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்றம் அதனை முழுமையாக நிராகரித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஈ-விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. .