Home இலங்கை பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? நிலாந்தன்!

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? நிலாந்தன்!

by admin

 

பிரித்தானியா இலங்கையில் போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு தடை விதித்திருக்கிறது. இதுவரை காலமும் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. பிரித்தானியா இவ்வாறு தடை விதித்திருப்பது இதுதான் முதல் தடவை.

முதலில் இந்த தடை வெளிவந்திருக்கும் பின்னணியைப் பார்க்கலாம். 58 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது. அக்கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பிரித்தானியாவின் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஏற்கனவே இரு கிழமைகளுக்கு முன்பு ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில், அல்ஜசிராவின் “ஹெட் டு ஹெட்” நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.அந்த நிகழ்ச்சியும் இப்பொழுது வெளிவந்திருக்கும் பிரித்தானியாவின் தடையும் ஏறக்குறைய ஒரே நோக்கத்தை கொண்டவை. சீன இடதுசாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இரண்டு வரையறைகளை உணர்த்துவதே இந்தத் தடை மற்றும் அல்ஜசீராவின் நேர்காணல் இரண்டினதும் நோக்கம் எனலாம்.முதலாவது வரையறை இந்த அரசாங்கம் சீனாவை நோக்கிச் சாய்வதில் உள்ள வரையறை.இரண்டாவது இனப்பிரச்சினை தொடர்பில் பொறுப்புக்கூறாமல் தப்புவதில் உள்ள வரையறை.இதை இன்னும் அறுத்துறு த்துச் சொன்னால்,பொறுப்புக் கூறல் என்ற கவர்ச்சியான தலைப்பின் கீழ் இலங்கை அரசாங்கத்தை தமது செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்திருப்பதற்கான அழுத்தங்கள்.

பிரித்தானியாவின் தடை நான்கு பேர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் மூவர் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த அரச படைப்பிரதானிகள். ஒருவர் தமிழ்த் தரப்பில் ஒரு தளபதியாகவிருந்து பின்னர் அரச தரப்புடன் இணைந்த கருணா.இந்த நால்வரும் இலங்கைத்தீவின் சிவில் யுத்தத்தில் செய்த குற்றங்களுக்கு எதிராகவே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பிரித்தானிய அரசின் வெளிவிவகார,பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில்,கருணாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த காலமும் பின்னர் அரச தரப்போடு இணைந்து செயல்பட்ட காலமும் உள்ளிட்ட சிவில் யுத்த காலகட்டத்தில் செய்த குற்றங்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது.மேலும் அந்த உத்தியோகபூர்வ குறிப்பில் கருணா தொடர்பாக கூறப்படுகையில் “பயங்கரவாதக் குழுவான விடுதலைப் புலிகள் இயக்கம்” என்ற சொற்பிரயோகம் உண்டு.

நாலாம் கட்ட ஈழப்போரில் கருணா அரச தரப்புடன் இணைந்து செயல்பட்டதை வைத்து இந்த தடை அரசு படைப்பிரதானிகளுக்கும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்ட கருணாவுக்கும் எதிரானது என்றுதான் ஒரு பொதுவான தமிழ் விளக்கம் காணப்படுகின்றது. ஆனால் அது முழு உண்மையல்ல. இந்தத் தடைக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் உண்டு.ஏற்கனவே ஐநாவின் அறிக்கைகளில் “போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும்” எதிராக என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளிலும்“மனித உரிமை மீறல்கள்,மனித உரிமைத் துஷ்பிரயோகங்கள்”போன்ற வார்த்தைகள்தான் காணப்படுகின்றன.இன அழிப்பு என்ற வார்த்தை இல்லை.அதாவது பிரித்தானியாவின் தடையானது நடந்தது இனஅழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.கடந்த 15ஆண்டுகளாக ஐநாவின் அறிக்கைகளிலும் அதுதான் காணப்படுகின்றது.அங்கேயும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றவை இனஅழிப்பு என்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதில் ஒப்பீட்டளவில் கனடாவில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்கள் இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொள்கின்றன. தீர்மானங்களில் இன அழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.ஆனால் அது கனடாவின் இலங்கை தொடர்பான வெளியுறவு அணுகுமுறைகளில் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானமாக எடுக்கப்படவில்லை. அதாவது ஒரு ராஜதந்திர முடிவாக அது நடைமுறையில் இல்லை.

எனவே கடந்த 15 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக எடுக்கும் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் அங்கே ஒரு பொதுத் தன்மையைத் தமிழர்கள் கண்டுபிடிக்கலாம். அது என்னவென்றால் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வ வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடாக மேற்கு நாடுகள் இதுவரை எடுத்திருக்கவில்லை.ஐநாவும் அது இனப்படுகொலை என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.இது முதலாவது.

இரண்டாவது,கடந்த 15 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடைகளை எல்லா நாடுகளும் தொடர்ந்து பேணுகின்றன. தாயகத்தில் செயல்படாத ஒரு அமைப்புக்கு எதிராகத் தடையைத் தொடர்ந்து பேணுவதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு உணர்த்த முற்படும் வரையறைகள் எவை?

மூன்றாவது, ஐநாவில் இலங்கை இனப்பிரச்சினையானது வரையறுக்கப்பட்ட ஆணையைக் கொண்ட ஐநாவின் உறுப்பாகிய மனித உரிமைகள் பேரவைக்குள்தான் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது.மனித உரிமைகள் பேரவையானது ஐநாவின் 8 உறுப்புகளில் ஒன்று. பாதுகாப்புச் சபை, பொதுச் சபை போன்று அதிகாரம் மிக்கதல்ல. ஒரு நாட்டுக்கு எதிராக படையினரை அனுப்புவதற்கோ அல்லது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கோ தேவையான ஆணை மனித உரிமைகள் பேரவைக்குக் கிடையாது. சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே மனித உரிமைகள் பேரவை அந்த நாட்டில் இறங்கி வேலை செய்யலாம்.

குறிப்பாக 2021 ஆம் ஆண்டிலிருந்து ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் ஓர் அலுவலகம் இயங்கி வருகிறது.இலங்கைத்தீவின் போர்க்களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் அது.அப்படி ஒரு பொறிமுறை வேண்டும் என்று 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக ஒரு கடிதத்தை எழுதின.அந்தப் பொறிமுறையானது மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே பொறுப்பு கூறலைக் கொண்டு போகவேண்டும் என்பது கடிதத்தின் சாராம்சம் ஆகும். மேலும் அந்தப் பொறிமுறைக்கு ஒரு கால வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தப் பொறிமுறையானது ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு உட்பட்ட ஓர் அலுவலகமாகத்தான் உருவாக்கப்பட்டது. அதாவது பலவீனமான ஆணையை கொண்டது.

இதுதான் ஐநாவில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடியவற்றின் வரையறை. இவ்வாறு கடந்த 15 ஆண்டு காலமாக மேற்கை மையமாகக் கொண்ட, அல்லது ஐநாவை மையமாகக் கொண்ட நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் சித்திரம் கிடைக்கும்.

மேற்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் அதே சமயம் நீதிக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு தமிழ் மக்களுக்கு அனைத்துலக அளவில் இருக்கக்கூடிய ராஜதந்திர வாய்ப்புகளின் வரையறைகளையும் அவை உணர்த்துபவைகளாகக் காணப்படுகின்றன.

எனினும் 15 ஆண்டுகளின் பின்னரும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்ட வழியில் தமிழ் மக்கள் மெதுமெதுவாக முன்னேறி வருகிறார்கள் என்பதனை பிரித்தானியாவின் தடை உணர்த்துகின்றது. குறிப்பாக நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெற்ற ஆகப்பிந்திய வெற்றியாகவும் அதைக் கூறலாம்.அண்மையில் கனேடிய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அத்தகையதே.கனடாவில் நிறைவேற்றப்படட இனஅழிப்பு அறிவூட்டடல் தீர்மானத்திற்கு எதிரான வழக்கில்,கனேடிய உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டுவது.

இவை யாவும் வரையறைக்குட்பட்ட வெற்றிகள்தான்.நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் மேலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.கனடா, அமெரிக்கா,பிரித்தானியா போன்ற நாடுகள் விதித்திருக்கும் தடைகளும் குறிப்பாக கனடாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உற்சாகமூட்டுபவை. அதேசமயம் மேற்கு நாடுகளின் மேற்படி நகர்வுகள் யாவும் அந்தந்த நாடுகளின் பூகோள ராணுவ அரசியல் பொருளாதார நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான் என்பதையும் தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதை அவர்கள் தமிழ் மக்களின் பெயரால் “பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பின் கீழ் ராஜதந்திரமாக முன்னெடுக்கின்றார்கள்.

இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் மட்டுமல்ல இந்தியா,சீனா,ஐநா முதலாக உலகில் எந்த ஒர் அரசுக் கட்டமைப்பும் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் அவ்வாறுதான் முடிவுகளை எடுக்கும்.அரசுகள் எப்பொழுதும் தங்களுடைய ராணுவப் பொருளாதார அரசியல் நோக்கு நிலைகளில் இருந்துதான் முடிவுகளை எடுக்கும்.ஏன் கடவுளுக்கு ஓர் அரசிருந்து அங்கு முடிவு எடுக்கப்பட்டாலும் அப்படித்தான் அமையும்.

இதில் தமிழர்கள்தான் தங்களுடைய நலன்களும் வெளி அரசுகளின் நலன்களும் இடை வெட்டும் ஒரு பொதுப் புள்ளியைக் கண்டுபிடித்து அங்கிருந்து தொடங்கி தமக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வாய்ப்புகளை எப்படி முழு வெற்றியாக மாற்றுவது என்று திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.அதாவது தமிழ் மக்கள் உலக அளவில் தங்களுக்குள்ள வரையறைகளையும் வாய்ப்புகளையும் நன்கு விளங்கி வைத்திருக்க வேண்டும்.கிடைத்திருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வரையறைகளை எப்படிக் கடப்பது அல்லது உடைப்பது என்று திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட தடைகளும் தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த உற்சாகமூட்டும் வெற்றிகளாகும். தமிழ் மக்கள் யாருக்கு எதிராக நீதியைக் கேட்டு போராடுகிறார்களோ அவர்கள் அங்கு தண்டிக்கப்படுகிறார்கள். மேற்கு நாடுகளின் தடைகள் ஒருவிதத்தில் தமிழ் மக்களுக்கும் வரையறைகளை உணர்த்துபவைதான். என்றாலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக அதன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளாக அவை காணப்படுகின்றன.இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் தங்களோடு முழுமையாக இல்லை என்று கருதி தமிழ் மக்கள் அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தேவையில்லை. தடைகள் விடயத்தில் மேற்கும் ஐநாவும் அரைவாசி அளவுக்கு தமிழ் மக்களுக்குச் சாதகமாக நிற்கின்றன.எனவே தமக்கு கிடைத்திருக்கும் பாதியளவு சாதகமான ராஜதந்திர வாய்ப்புகளை முழு அளவு சாதகமானவைகளாக எப்படி மாற்றுவது என்றுதான் தமிழ்த் தரப்பு சிந்திக்க வேண்டும்.

வெளியரசுகள் அவற்றின் நலன் சார்ந்து எடுக்கும் நகர்வுகளை எப்படி ஈழத் தமிழர்கள் தமது நலன் சார்ந்து வெற்றிகரமாகக் கையாளலாம் என்று சிந்திக்க வேண்டும். இதைத் தொகுத்துச் சொன்னால் தமிழ் மக்கள் ஓர் அரசு போல சிந்திக்க வேண்டும். ஒரு அரசு இன்னொரு அரசோடு கொள்ளும் உறவுகளில் இரண்டு தரப்புக்கும் பொதுவான நலன்கள் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளியில்தான் உறவுகள் விருத்தி அடைகின்றன. எனவே ஈழத் தமிழர்கள் ஓர் அரசு போல சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ராஜதந்திரத்தில் நலன்கள்தான் முக்கியம். அறம்; தர்மம்; நீதி போன்றவை அங்கே கிடையாது. தொப்புள்கொடி உறவு; இதயமும் இதயமும் கலக்கும் உறவு; என்பவையெல்லாம் கிடையாது. நலன்களும் நலன்களும் இடை வெட்டும் புள்ளிகளைத் தீர்க்க தரிசனமாகக் கையாள்வதுதான் ராஜதந்திரம்.எனவே ஓர் அரசுபோலச் சிந்தித்து ஈழத் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.பிரித்தானியாவின் தடை தமிழ் மக்களுக்கு அண்மையில் கிடைத்திருக்கும் ஒரு வெற்றி. அந்த வெற்றி முழுமையானது இல்லை. அதை எப்படி ஒரு முழுமையான ராஜதந்திர வெற்றியாக மாற்றுவது என்பது ஈழத் தமிழர்கள் ஓர் அரசுபோலச் சிந்தித்து முடிவெடுப்பதில்தான் தங்கியிருக்கின்றது.ஆனால் ஓர் அரசு போல் சிந்திப்பதென்றால் அதற்கு முதலில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள வேண்டும்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More