இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய இந்திய றோ அமைப்பு முயற்சிப்பதாக செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தனது பயணத்தின்போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முதலியோரை சந்தித்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளன.