இன்றைய இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழக அரசறிவியற்துறை தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் அவர்களே, அரசியல் ஆய்வாளர் திரு.நிலாந்தன் அவர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் அவர்களே, ஜெரா-ஊடகவியலாளர் திரு.து.ஜெயராஜ் அவர்களே, கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் திரு.க.குருநாதன் அவர்களே, சட்டத்தரணி திரு.ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களே, ஏனைய சிறப்பு அதிதிகளே, சகோதர சகோதரிகளே!
இன்றைய இந்த உரையரங்கம் நிகழ்விலே ஒவ்வொரு துறைசார்ந்த விற்பன்னர்களும் வேறு வேறு தலைப்புகளின் கீழ் தமது ஆய்வு உரைகளை சிறப்பாக முன்னெடுத்து அமர்ந்திருக்கின்றார்கள்.
‘தலைப்பில்லாமல் பேசக்கூடாது குறிக்கோள் இல்லாமல் வாழக்கூடாது’ என எமது முன்னோர்கள் குறிப்பிடுவர்.
இந்த நிகழ்வில் எனக்கு தலைப்புக்கள் எதுவும் தராமல் பிரதம விருந்தினர் முடிசூட்டி எனது உரை மகுட உரையாக அமையும் எனத் தெரிவித்திருக்கின்றார்கள். உங்கள் ஒவ்வொருவருடைய பேச்சுக்களில் இருந்தும் ஒவ்வொரு பகுதிகளை கிள்ளி எடுத்து எனது உரையை அமைக்கலாம் என்றால் நான் முற்கூட்டியே எனது உரைகளை தயாரித்து கணனியில் அச்சேற்றம் செய்த பின்பே அவற்றை ஆற்றுகின்ற வழக்கத்தைக் கொண்டிருப்பதால் அந்த வழி செல்ல முடியாதிருக்கின்றது. எனினும் உங்கள் ஒவ்வொருவரினதும் தலைப்புக்களை மையமாக வைத்து அவற்றைப் பற்றியஎன் சிந்தனைகளை வெளியிட்டுஎனது உரையை முன்னெடுத்துச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.
‘சூழல் அரசியல்’ அல்லது Environmental Politics என்ற சொற்பதம் மனிதனுக்கும் சூழலுக்கும் இடையில் இருக்கும் உறவை வலியுறுத்துகின்றது. அதே நேரம் சூழல் அரசியலுக்கு என உலக ரீதியாக கொள்கைகளும் அரசியல் இயக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சூழல் அரசியல் என்ற சொற்றொடர்மிகத் தெளிவான கருத்துக்களையும் கொள்கைகளையும் உள்ளடக்கியதான உலகநாடுகள் அனைத்தினதும் அங்கீகாரங்களைப் பெற்றுக்கொண்டதுமான ஒரு அரசியல் கோட்பாடாகும். அதாவது சூழலைப் பாதுகாப்பதற்கான அரசியலாக இந்த அரசியல் கொள்கை வெளிப்படுத்தப்படலாம். அத்துடன் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படுத்தக்கூடிய காரணிகளை இனம்கண்டு அவற்றைக் களைவதும் சூழலை மேம்படச் செய்வதற்கான திட்டங்களை வகுப்பதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் சூழல் அரசியல் என்ற சொற்பதத்தினுள் அடங்கும்.
ஆனால் இலங்கையில் சூழல் அரசியலானது சூழும் அரக்கனாகப் பரிணாமம் பெற்றுள்ளது. சூழலின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி இன அழிப்புக்கு இடமளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசுகளினால் முன்னெடுக்கப்பட்டுவந்த இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்புப் பற்றி உலக நாடுகள் பலவும் அறிந்திருக்கின்றன. ஆனால் தற்போது எதுவித ஆரவாரங்களுமின்றி துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் என்ற பெயரால் எமது தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு சூழல் அரசியல் என்ற மாயைச் சொல்லை பயன்படுத்தி உலக நாடுகளை நம்பச் செய்கின்ற கனகச்சிதமான செயற்பாடுகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சூழல் அரசியல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகின்ற பச்சை யுத்தங்கள் பல. அவற்றுக்கே ‘சூழல் அரசியலும் நில அபகரிப்பும்’, என்று தலையங்கம் கொடுத்துள்ளோம். ‘வனங்களும் நில அபகரிப்பும்’, ‘தொல்லியலும் நில அபகரிப்பும்’, ‘மகாவலியும் நில அபகரிப்பும்’, ‘சட்டங்களும் நில அபகரிப்பும்’ எனப் பல வழிகளிலும் நில அபகரிப்புக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன. வனங்கள், தொல்லியல், மகாவலி விரிவாக்கம், சட்டம் என்ற பல்வேறு காரணிகளுக்கூடாக எமது நிலங்கள் சத்தம் சந்தடி இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறு சிறு பிரிவுகளாக சூறையாடப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் காணப்படுகின்ற மொத்த நிலப்பரப்பின் 23 சதவிகிதம் வனப்பகுதிகளாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இந்த சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இலங்கையில் காணப்படும் மொத்த நிலப்பரப்புகளின் பெரும்பகுதியான வனப் பகுதிகளை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே அமைக்கப் பார்க்கின்றது அரசாங்கம். மற்றைய மாகாணங்களில் வனப் பகுதிகளைக் குறைத்து வடக்கு கிழக்கில் ஈடுகட்டப் பார்க்கின்றது. வட கிழக்கில் இவ்வளவு வனப்பகுதி இருக்க வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. ஆனால் இவ் ‘வனதிணைக்களம்’ என்ற அமைப்பினூடாக வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்ற போர்வையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இப் பகுதிகளில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து மக்கள் வாழ்விடங்கள் வனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தமது பூர்வீக வாழ்விடங்களை விட்டுவெளியேறிய மக்களின் நிலங்களில் காடுகள் உருவாகியிருந்;தன. அவற்றை அரசாங்கம் கையேற்று சர்வதேச அளவுப் பிரமாணங்களை மீறியவையாக மரங்கள் வளர்ச்சியடைந்துள்ளதாக மக்கள் வாழ்விடங்களில் இருந்த மரங்களை அடையாளப்படுத்தி வருகின்றார்கள். ஒரு இடத்தில் காணப்படும் அடர்ந்த காடுகளில் உள்ள மரங்கள் சர்வதேச அளவுப் பிரமாணங்களுக்கு மேற்பட்டிருப்பின் அது வனம் அதாவது குழசநளவ என்ற சொற் பதத்தில் அடங்குவன. ஏனைய சிறிய மரங்களைக் கொண்டபற்றைக் காடுகள் ளாசரடி என அழைக்கப்படுவன. இந்த நியமங்களுக்கு அமைவாக வன்னிப் பகுதியில் வாழ்ந்த எம் மக்களின் நிலங்களில் பெரும்பகுதி வனத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டு அரச காணிகளாக மாற்றப்பட்டு வன இலாகாவின் மேற்பார்வையின் கீழுள்ள நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கள அரசியல் தலைமைகள் வடகிழக்கைத் தம்வசம்படுத்தும் பல திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள். அதே சந்தர்ப்பத்தில் இதற்குச் சமாந்தரமாக சந்தடி எதுவுமின்றி அந்த அரசியல் முன்னெடுப்புக்களை நிறைவேற்றுகின்ற குழுக்களாக வேறு குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்தில் உள்நாட்டு யுத்தம் வலுப்பெற்று எல்லைப்புறக் கிராமங்களில் இனங்களுக்கிடையே யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஜனாதிபதி அவர்களின் மகனான திரு.ரவி ஜெயவர்த்தன அவர்கள் இந்த நிறைவேற்றுக் குழுவொன்றிற்குத் தலைமை தாங்கினார். வவுனியாவிற்கு அப்பால் உள்ள பம்பைமடு, ஈரற்பெரிய குளம் போன்ற பகுதிகளில் தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றியது மட்டுமன்றி அவர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி மற்றும் இன்னோரன்ன இராணுவப் பயிற்சிகளை வழங்கி அவர்களை அங்கு குடியேற்றினார்.
திரு.ரவி ஜெயவர்த்தன அவர்கள் அரசியல் மேடைகளில் காட்சியளிக்காத போதும் இந்த நிறைவேற்று கடமைகளை திறம்பட ஆற்றினார். எனக்கு சிரேஷ்டராக என் கல்லூரியில் கற்ற அவர் ‘ரைஃபிள் க்ளப்’ என்ற எமது சங்கம் ஒன்றில் சேர்ந்து சூட்டுப் பயிற்சி பெற்று மாணவனாக இருந்த காலத்தில் துப்பாக்கி சுடுவதில் பத்துக்குப் பத்து என்ற கணக்கில் இலக்குகளை சுட்டு வீழ்த்தக் கூடியவராக இருந்தார்.
இவ்வாறு சிங்கள மக்கள் தமது இனத்தைக் காப்பதற்காக திட்டங்களை வகுத்து செயற்பட்ட போது எமது அரசியல் தலைவர்கள் மேடைப் பேச்சாளர்களாக மேடைகளில் வீர முழக்கங்களை முழங்கிவிட்டு வீட்டிற்குச் சென்று நித்திரையில் ஆழ்ந்து தான் எமது சரித்திரம். சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறியாத அப்பாவிகளாக இருந்தார்கள். இன்றும் இருந்து வருகின்றார்கள்.
அதே போல் தொல்லியல் திணைக்களம் நீண்ட காலமாக இலங்கையில் இயங்கிவருகின்ற போதும் அவ்வாறான ஒரு திணைக்களம் இயங்குவது பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கக்கூட வாய்ப்பில்லாத நிலையிலேயே அதன் செயற்பாடுகள் அமைந்திருந்தன. ஆனால் இன்று தொல்லியல் திணைக்களம் வடகிழக்குப் பகுதிகளில் ஆட்சி செலுத்துகின்ற ஒரு திணைக்களமாக மாறியுள்ளது. அங்குள்ள கல்வெட்டுக்கள், அடையாளங்கள், தொல்லியல் சாதனங்கள் ஆகியவற்றைத் தாங்கிய இடங்கள் அனைத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழுள்ள நிலங்களாக மாற்றிவருகிறது. அரசின் கபட நோக்கங்களை நிறைவேற்றுகின்ற ஒரு திணைக்களமாக தொல்பொருளியல் திணைக்களம் இயங்கி வருகின்றது என்றே கூறவேண்டும்.
உதாரணமாக திருக்கேதீச்சரம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தென்னை மரங்கள் நாட்டப்பட்டு அவைகள் காய்த்துக் குலுங்குகின்ற இவ் வேளையில் அந்த மரங்களுக்குத் தேவையான உரக்கலவைகளை இட நிலத்தை கொத்தி செப்பனிடுவதற்கு தொல்பொருளியல் திணைக்களம் தடை விதித்திருக்கின்றது. காரணம் கேட்டால் தொல்பொருள் தடையங்கள் காணப்படக்கூடிய பகுதியாகையால் அப்பகுதிகளில் நிலத்தை அகழ்வதற்கோ அல்லது மண்வெட்டி கொண்டு கொத்துவதற்கோ அனுமதி இல்லை என கூறப்படுகின்றது. ஆனால் அதே பகுதியில் நிலத்தைக் கொத்தாமல், அடையாளங்களை சிதைக்காமல், கிறீஸ்தவர்களும் பௌத்தர்களும் எவ்வாறு குடியேறினார்கள் என்பது புரியாப்புதிராக இருக்கின்றது. நான் இங்கு மதம் சார்ந்து குதர்க்கமாக பேசுகின்றேன் என யாரும் குறை விளங்க வேண்டாம். உண்மை நிலையை எடுத்துச் சொன்னேன். அவ்வளவு தான். வேண்டுமானால் போய்ப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.
மகாவலி நீரை திசை திருப்பி வரண்ட பிரதேசங்களுக்கு அதன் நீரை வழங்குகின்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அப்போதைய அமைச்சர் காமினி திசாநாயக்க அவர்களின் காலத்தில் விசேட ஏற்பாடொன்று மேற்கொள்ளப்பட்டது. அதாவது மகாவலி ஓடுகின்ற பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள நிலங்கள் பொறுப்பேற்;கப்பட்டு இனங்களுக்கிடையேயான விகிதாசார அடிப்படையில் அவை பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் வடகிழக்கிற்கு தெற்குப் பகுதிகளில் இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் சிங்கள மக்களே குடியேற்றப்பட்டமையால் அங்கு தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் பேசுகின்ற முஸ்லீம் மக்களுக்கோ காணிகள் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில் அமைச்சர் அவர்கள் ஒரு சட்டத் திருத்ததை கொண்டு வந்தார். அதாவது வடக்குக் கிழக்கு பகுதிகளில் இவ்வாறான காணிகள் வழங்கப்படும் போது பழைய விகிதாசாரத்தையும் கணக்கில் எடுத்து அதற்கு ஏற்ப அப்பகுதிகளில் வாழுகின்ற தமிழ்ப் பேசுகின்ற மக்களுக்கும் காணிகளை வழங்கியே இந்த விகிதாசாரக் கொள்கைகள் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று. ஆனால் நடைபெற்றதோ மகாவலி நீர் வரப்போகின்றது என்று பூச்சாண்டி காட்டி பெரியளவிலான நிலப்பரப்புக்கள் எமது மாகாணத்தில் கையகப்படுத்தப்பட்டன. மகாவலி நீரும் வரவில்லை; நிலங்களும் பகிரப்படவில்லை; அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டது. அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.
அடுத்து நில அபகரிப்புக்கான பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. புதிய புதிய சட்டங்களை உருவாக்கி அந்தச் சட்டங்களின் கீழ் எமது மக்களின் பூர்வீக குடியிருப்புக் காணிகள் அரசுடமைகளாக்கப்பட்டு வருகின்றன. எமது மக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து அகற்றுவதும் அவர்கள் நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ள முடியாமல் தடுப்பதும் என பலவித வழிகளில் இந்தப் பச்சை யுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவை பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளாமல் எமது அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை நல்குவதும் தமிழ் மக்களின் ஏகோபித்த குரல்களுக்கு எதிராக அரசுக்கு வக்காளத்து வாங்குவதுமான நிகழ்வுகள் எம்மை வெட்கித்தலைகுனிய வைக்கின்றது. ஒரு இனத்தையே இல்லாமல் அழிப்பதும் அவர்களின் இருப்பிடங்களை இல்லாமல் செய்வதுக்குமான செயல்களுக்கு எம்முடைய தலைமைகள் துணை போகின்றார்கள்.
அண்மையில் 48 பேர் கொண்ட ஒரு செயலணி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. 48 பேர் கொண்ட அச் செயலணி வடகிழக்குப் பொருளாதார மேம்பாட்டை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டது. அதில் மத்திய அமைச்சர்கள் 13 பேர் அவர்களின் செயலாளர்கள், இராணுவ, கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றின் படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், இரு மாகாண ஆளுநர்களுடன் என்னையும் என் வடமாகாண பிரதம செயலாளரையும் உள்ளடக்கிருந்தார் ஜனாதிபதி. வடமாகாணத்தைப் பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதி நான் ஒருவனாகவே இருந்தேன். அவ்வளவு மதிப்பு என்மேல் ஜனாதிபதிக்கு! நான் அவருக்குக் கூறினேன் வடகிழக்குப் பொருளாதாரத்தைக் கவனிக்க தெற்கத்தையர்கள் தான் பெரும்பான்மையாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை காலமும் இல்லாமல் அடுத்த வருடம் ஜெனிவாவில் பொறுப்புக் கூறும் நேரத்தில் இதை செய்துள்ளீர்கள். எனது பதவிக்காலம் விரைவில் முடியவிருக்கின்றது. நீங்கள் எங்கள் கட்சித் தலைவராகிய எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்த வருட இறுதிக்கு முன்னர் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளீர்கள். அரசியல் தீர்வின் பின் பொருளாதார மேம்பாடு பற்றி ஆராயலாம். தயவு செய்து அரசியல் தீர்வை நாம் பெற உதவி செய்யுங்கள். என்னால் உங்கள் செயலணிக் கூட்டத்திற்கு வரமுடியாததையிட்டு மனவருத்தம் அடைகின்றேன் என்று கூறி முதல் கூட்டத்தைப் பகிஷ;கரித்தேன்.
உடனே ஜனாதிபதி எமது பாராளுமன்றப் பிரதிநிதிகள் 16 பேரையும் தமது இரண்டாவது கூட்டத்திற்கு அழைத்தார். அப்போது நான் கௌரவ சம்பந்தன் அவர்களுக்கு நடந்ததை விவரித்து எமது பிரதிநிதிகள் இக் கூட்டத்திற்குப் போகாது வருட முடிவின் முன் அரசியல் தீர்வைத் தாருங்கள் என்று நெருக்கடி கொடுக்க இதுவே தருணம் என்றேன். அவர் அவர்களின் கூட்டத்தைக் கூட்டி இந்த செயலணிக் கூட்டத்திற்கு நாம் சென்றேயாக வேண்டும், அரசியல் தீர்வும் பொருளாதார முன்னேற்றமும் சமாந்தரமாக நடைபெற வேண்டும் என்று கூறி எம்மவர் அடுத்த கூட்டத்திற்கு ஆஜரானார்கள். நெருக்குதல்களைக் கொடுக்காது தொடர்ந்து வரும் அரசாங்கங்களிடம் இருந்து அரசியல் தீர்வை எவ்வாறு பெறப் போகின்றோம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத தமிழ்த் தலைமைகளைத் தான் நாம் இன்று கொண்டுள்ளோம். கடைசியில் தீர்வு எதுவும் கிட்டாது. பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள முதலீட்டாளர்களை வடக்குக்கு கொண்டு வருவதாகவே இது முடியும். அடுத்த கிழமை முதல் ஆளுநர் பொறுப்பேற்ற பின் அவருடன் இணைந்து அடுத்த மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கம் மீண்டும் இரண்டு வருடங்கள் நீடிப்புப் பெற சகல நடவடிக்கைகளையும் எடுக்க இருக்கின்றது. சௌம்மியமூர்த்தி தொண்டமான் கூறுவார் அரசியலில் தோசையை எப்போது திருப்ப வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று. தோசையே போடத் தெரியாதவர்கள் தான் எமது பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள்.
நீண்டகால யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழித்து பெறமுடியாத வெற்றிகளை, இன்று அரசு இரத்தம் சிந்தாமல், சந்தடிகள் எதுவுமின்றி, இவ்வாறான திணைக்களங்களின் உதவிகளுடன் முன்னெடுப்பதும் அதற்கு அரசின் முகவர்களாக விளங்கக்கூடிய எமது உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள். அவர்கள் ஒரு நாள் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். அந்தநாள் விரைவில் கிட்ட வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்து எனது உரையை இந்த அளவில் நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்கேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தத்தால,; தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும்
சூழல் அரசியலும் நில அபகரிப்பும்
யுத்தத்தின் பச்சை முகம்
உரை அரங்கு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்குஃ யாழ்ப்பாணம்
20.10.2018 சனிக்;கிழமை பிற்பகல் 03.00 மணியளவில்
பிரதம விருந்தினர் உரை
குரூர் ப்ரம்மா……