Home இலங்கை பச்சையுத்தத்தை தடுக்கத் தவறின் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் :

பச்சையுத்தத்தை தடுக்கத் தவறின் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் :

by admin

கொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றை எம்மீது தொடுத்திருக்கிறது. வனங்களைப் பாதுகாத்தல், வன ஜீவராசிகளைப் பாதுகாத்தல் என்றுசொல்லி ஏராளமாக எமது நிலங்களைக் கையகப்படுத்திவருகிறது. இந்த நிலஅபகரிப்பைத் தடுக்கத்தவறினால் அமெரிக்காவில் அதன் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களுக்கு ஏற்பட்ட கதியே விரைவில் எமக்கும் ஏற்படும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நேற்று சனிக்கிழமை (20-10-2018) சூழல் அரசியலும் நில அபகரிப்பும் என்ற கருப்பொருளில் உரையரங்கு ஒன்று நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு அரசு, வனவளத் திணைக்களத்தின் மூலமும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலமும் புதிது புதிதாக எமது பூர்வீக நிலங்களைக் கையகப்படுத்திவருகிறது. வனவளத் திணைக்களம் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏறத்தாழ இரண்டு இலட்சம் ஹெக்ரெயர் நிலப்பரப்பை இதுவரையில் அபகரித்து வைத்திருக்கிறது. இதேபோன்று வன ஜீவராசிகள் திணைக்களம் 2016ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் இயற்கை ஒதுக்கிடம் என்று 7882 ஹெக்ரெயர் நிலத்தையும் மன்னார் மாவட்டத்தில் விடத்தில் தீவு இயற்கை ஒதுக்கிடம் என்று 29,180 ஹெக்ரெயர் நிலத்தையும் பறித்துவைத்திருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடமாக 4141 ஹெக்ரெயர் நிலப்பரப்பும் நாயாறு இயற்கை ஒதுக்கிடமாக 4464 ஹெக்ரெயர் நிலப்பரப்பும் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நிலக்கையகப்படுத்தல்கள் எல்லாம் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுகின்ற பசுமை நடவடிக்கைகளாகவே உலகத்தின் கண்களுக்குத் தெரியும். ஆனால், இவை பச்சை முகமூடி அணிந்துகொண்டு அரசு தந்திரமாக எம் மீது தொடுத்திருக்கின்ற ஒரு பச்சை யுத்தம். இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள எமது நிலங்களை விடுவிக்கக்கோரி நாங்கள் நடாத்துகின்ற போராட்டங்களின் நியாயத்தை உலகம் ஏற்றுக்கொள்ளும். உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இந்த நிலங்களை அரசாங்கம் விடுவிக்கவும் நேரும். இதனால்தான் எவரும் ஆட்சேபிக்காத இயற்கைப் பாதுகாப்பு என்ற போர்வையில் இப்படி ஒரு நிலஆக்கிரமிப்பை அரசு மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

வன வளத் திணைக்களமும் வன ஜீவராசிகள் திணைக்களமும் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள். காலம் காலமாக இவர்கள் பயிர் செய்துவந்த நிலங்கள். இவர்கள் படித்த பாடசாலைகள் உள்ள இடங்கள். ஆனால், இனிமேல் இவர்கள் இங்கு இவை எவற்றையும் செய்யமுடியாது. செவ்விந்தியர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களை அங்கு குடியேறிய ஐரோப்பியர்கள் தேசியப் பூங்காங்களாகப் பிரகடனப்படுத்தியே அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவர்களின் நிலங்களைப் பிடுங்கினார்கள். இன்று அமெரிக்கா செவ்விந்தியர்களின் நாடு அல்ல. வந்தேறு குடிகளின் நாடு. இதே உத்தியைத்தான் இலங்கை அரசாங்கமும் கையில் எடுத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் துறைத்தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தொடக்க உரையாற்ற, து.ஜெயராஜ், திரு.க.குருநாதன், ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் ஆகியோர் கருப்பொருள் உரைகளை நிகழ்த்தியிருந்தார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More