குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு வந்து மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் பல மாதங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள மாவட்டமான கிளிநொச்சியில் ஏனைய மாவட்டங்கள் மற்றும் தென்னிலங்கையின் பல மாவட்டங்களிலிருந்து வரும் பேரூந்துகள் நிறுத்தி செல்கின்ற இடமாக காணப்படுகின்ற போதும் இதுவரை திருத்தி அமைத்து முடிக்கப்படவில்லை.
கடந்த வருடம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் மாவட்டத்திற்கான மத்திய பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பேரூது நிலையம் எந்த திணைக்களத்தினால், எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில், என்ன வடிவமைப்பில் அமைக்கப்படுகிறது என்ற எந்த விபரங்களும் காட்சியப்படுத்தப்படவில்லை.
அத்தோடு பேரூந்து கட்டுமானப் பணிகளும் குறுகிய காலத்திற்குள் பல தடவைகள் தடைப்பட்டு வந்த நிலையில் தற்போது பல மாதங்களாக எந்த பணிகளும் இன்றி இடைநடுவில் தடைப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் மாவட்ட அபிவிருந்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த போது அவையும் கவனத்தில் எடுக்கப்படவில்லை
இது தொடர்பில் கிளி நொச்சி மாவட்டச் செயலகத்தை தொடர்பில் கொண்டு வினவிய போது குறித்த பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அதற்கும் மாவட்டச் செயலகத்திற்கும் சம்மந்தம் இல்லை எனவும் அது வடக்க மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவையே வினவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு நிரதர பேரூந்து நிலையம் இன்றி வெயில் மற்றும் மழைக்காலங்களில் உள்ளுர், வெளியூர் பயணிகள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.என்பது கவலைக்குரிய விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.