8.7 மில்லியன் அளவில் குழந்தைகளைத் தவறான தோற்றத்தில் காட்டும் படங்களையும் தவறாகச் சித்தரிக்கும் பாலியல் படங்களையும் அகற்றிவிட்டதாக முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முகப்புத்தக நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி அண்டிகான் டேவிஸ் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன எனவும் இப்படங்களை வலைதளத்தில் ஏற்றியவர்களுக்கு தகவல்கள் அனுப்பியதன் பின்னர் சுமார் 99 சதவீதமானவை அகற்றப்பட்டு விட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் முகப்புத்தக தளத்திலிருந்து 8.7 மில்லியன் குழந்தைகளைத் தவறாகக் காட்டும் பாலியல் படங்களை அகற்ற, செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் மெஷின் கற்றல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்புத்தக நிறுவனம் வகுத்துக்கொண்ட சமூக நியதிகள்படி குழந்தைச் சுரண்டலைத் தடைசெய்கிறது எனவும் பாலியல் நோக்கமற்ற படங்களாக அவை இருந்தாலும், குளியலறையில் குழந்தைகள் குளிப்பது போன்ற வெளித்தோற்றத்தில் தீங்கான தோற்றம் தரும் தேவையற்ற துஷ்பிரயோகத்திற்கு இடமளிக்கும் திறன்களைத் தவிர்க்க விரும்புகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையப் பாதுகாப்பு, பகுப்பாய்வு மற்றும் தடயவியல் விசாரணைகள் போன்றவற்றில் செயற்பட, சட்ட அமுலாக்க பின்னணி கொண்டவர்களிடம் பயிற்சிபெற்ற சிறப்பு தொழில்நுட்பக் குழு தங்களிடம் உள்ளது எனவும் அவர்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை மறுபரிசீலனை செய்வார்கள் எனவும் முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த மாதம் முதல் சிறிய நிறுவனங்களுக்கும் பாலியல் சுரண்டல் படங்களை அகற்றுவதற்கான சில உபகரணங்களையும் வழங்க உள்ளதாகவும் இதற்கு மைக்ரோசாப்ட் மற்றும் இதர தொழில் நார் நண்பர்களுடன் இணைந்து சில திட்டங்களை வகுத்து வருவதாகவும் முகப்புத்தக நிறுவன பாதுகாப்பு அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.