சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னர் மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
இதன்போது 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கோவில் வளாகத்தில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையினால் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த போராட்டம், வன்முறை தொடர்பாக ஏற்கனவே 440 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்திருந்ததுடன் அவர்களில் 210 பேருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டதுடன் 210 பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர்
அந்த படங்களை சகல மாவட்ட காவல்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்ததுடன் அடையாளம் கண்டறிந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டனர்.
அதன்படி பல்வேறு மாவட்ட்களிலும் இருந்து 1,407 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் வாகனங்களை சேதப்படுத்திய 2 ஆயிரம் பேரையும் கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.