கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 சிரேஸ்ட மேலாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்தபோதிலும், பணிநீக்கத்துக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் இருந்து 90 மில்லியன் டொலர்களை கடைசி ஊதியமாக அண்ரொயிட் இயங்குதளத்தை உருவாக்கியவரான அன்டி ரூபின் பெற்றதாக நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரைக்கு பதிலுரையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரூபினின் சார்பாக அவர் தொடர்புடைய பேச்சளார் ஒருவர் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது